அமீரகத்தில் ஒரு கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வரவேற்பு படம் அமீரகத்தில் ஒரு கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வரவேற்பு படம் 

ஐக்கிய அரபு அமீரகப் பயணம் குறித்து ஆயர் பால் ஹிண்டர்

குடிபெயர்ந்து வாழ்வோர் ஒரு நாட்டிற்கு செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான விடயங்களை உலகிற்கு எடுத்துக்கூற, திருத்தந்தையின் அமீரகப் பயணம் நல்லதொரு வாய்ப்பு - ஆயர் ஹிண்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளும் பயணத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்று, குடிபெயர்ந்து வாழும் கிறிஸ்தவர்களின் முக்கியப் பங்கை உலகறியச் செய்வது என்று, தென் அரேபியப் பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹிண்டர் அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையானோர் குடிபெயர்ந்தவர்கள் என்பதால், குடிபெயர்ந்து வாழ்வோர் ஒரு நாட்டிற்கு செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான விடயங்களை உலகிற்கு எடுத்துக்கூற, திருத்தந்தையின் பயணம் நல்லதொரு வாய்ப்பு என்று ஆயர் ஹிண்டர் அவர்கள் எடுத்துரைத்தார்.

அமீரகத்தில் பணியாற்றும் குடிபெயர்ந்தோர், அடிமைகள் அல்ல, மாறாக, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றும் உழைப்பாளர்கள் என்பதை, திருத்தந்தையின் பயணத்தையொட்டி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்க சமுதாயத்திற்கு அறிவிக்க விழைகிறோம் என்று ஆயர் ஹிண்டர் அவர்கள் கூறினார்.

அமீரகத்தின் சகிப்புத்தன்மை துறையின் அமைச்சர், Sheikh Nahyan Ben Mubarak Al Nahyan அவர்கள், திருத்தந்தையை, 'பாலம் கட்டுபவர்' என்று கூறியுள்ளதை, தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய ஆயர் ஹிண்டர் அவர்கள், புனித பிரான்சிஸ் அவர்களின், "அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும்" என்ற மன்றாட்டு, இத்திருத்தூதுப்பயணத்தின் விருதுவாக்காக அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது என்று கூறினார்.

இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள, துருக்கி, போஸ்னியா, அசெர்பைஜான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2019, 15:26