கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பானமாவில் இடம்பெற்றுவரும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் உலகின் பல்வேறு ஆயர்கள் கலந்துகொண்டு இளையோர்க்கு மறைக்கல்வி வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பிலிப்பீன்ஸின் மனிலா கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள் எடுத்த மறைக்கல்வியில், பணியாற்றுவது, சீடத்துவத்தின் அடையாளம் என இளையோரிடம் கூறினார். கலிஃபோர்னியா, ஆஸ்ட்ரியா, ஜிம்பாபுவே, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் இளையோர்க்கு மறைக்கல்வி எடுத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த உலக நாளின் கருப்பொருளாகிய, நான் ஆண்டவரின் அடிமை என்ற சொற்களைக் கூறியது யார் எனக் கேட்டு அதை வைத்தே சிந்தனைகளை வழங்கினார்.
மேலும், பானமா நகரின் யூதமத தொழுகைக் கூடமும், இளையோர் திருப்பயணிகளில் ஐம்பது பேரை வரவேற்றுள்ளது. அது குறித்து வத்திக்கான் வானொலி நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த, யூதமத ரபி Gustavo Kraselnik அவர்கள், பானமாவில் யூதர்களுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையேயுள்ள நல் உறவுகள் பற்றி விளக்கியுள்ளார். கிறிஸ்தவ சபைகளுக்கிடையே, பல்சமயங்களுக்கிடையே நிலவும் நல் உறவுகள், குறிப்பாக நெருக்கடி நேரங்களில் வெளிப்படும் உறவுகள், சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்றும் ரபி குஸ்தாவோ அவர்கள் தெரிவித்தார்.