தேடுதல்

இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட கானா திருமணம் இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட கானா திருமணம் 

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்து விடுவார். இதுதான் அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, தமிழ் பாரம்பரியத்தில் நிலவிவரும் நம்பிக்கை. பிறந்துள்ள தை மாதத்தில், மக்கள் வாழ்வில் வழி பிறக்கும், மற்றும், வழி திறக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கு, இறைவாக்கினர் எசாயா வழங்கும் ஆசி மொழிகள், இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:

இறைவாக்கினர் எசாயா 62: 3-4

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். "கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.

'எப்சிபா' என்ற எபிரேயச் சொல்லுக்கு, "அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்பது பொருள்; அதேவண்ணம், 'பெயுலா' என்ற சொல்லுக்கு, "மணமுடித்தவள்" என்பது பொருள் என்று, விவிலியத்தில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

'கஜ'ப் புயலின் கோர விளைவுகளிலிருந்து மீண்டெழுந்துவரும் தமிழகம், மணக்கோலம் பூண்டு மகிழ்வில் திளைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

தை பிறந்ததும், பல குடும்பங்களில் திருமணங்கள் நடைபெறும். இத்தகைய ஒரு சூழலில், இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட ஒரு திருமண விழா, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. புனித யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள கானா திருமண விழாவின் அறிமுக இறைவாக்கியம் இதோ:

யோவான் 2: 1

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய மரியாவை, புனித யோவான், தன் நற்செய்தியில், முதன்முதலாக அறிமுகம் செய்யும்போது, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளியச் சொற்களில், அன்னையை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்தத் தாயின் பெயரைக்கூட அவர் பதிவு செய்யாமல், 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27).

தன் பணிவாழ்வின் துவக்கத்தில், கானா திருமணத்தில், இயேசு, முதல் 'அரும் அடையாள'த்தைச் செய்தபோது, "இயேசுவின் தாய் அங்கு இருந்தார்". அதுமட்டுமல்ல, அந்த அரும் அடையாளத்தை இயேசு செய்வதற்கு, அவரே தூண்டுதலாகவும் இருந்தார். அதேவண்ணம், தன் பணிவாழ்வின் இறுதியில், கல்வாரி மலைமீது, சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, "சிலுவை அருகில் இயேசுவின் தாய்... நின்றுகொண்டிருந்தார்" (யோவான் 19:25).

அன்னை மரியாவின் பிரசன்னம், அற்புதங்கள் நடைபெற தூண்டுதலாகவும், துன்ப வேளைகளில், ஆறுதல் தரும் அருமருந்தாகவும் உள்ளது என்பதை, இவ்விரு நிகழ்வுகள் வழியே, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார்.

கானா திருமணத்திற்குத் திரும்புவோம். திருமணம் என்றாலே, பலவிதமான, பலமான ஏற்பாடுகள் செய்யப்படும். என்னதான் கவனமாக, ஏற்பாடுகள் செய்தாலும், திருமணங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறைகள் எழத்தான் செய்யும். திருமண வைபவங்களில், பெரும்பாலும், சாப்பாட்டு நேரங்களில்தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும்; பிரச்சனைகள் வெடிக்கும். கானாவில் நடந்த திருமணத்திலும் சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது, பெரிய மானப்பிரச்சனை.

திருமண வைபவங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றை, விளம்பரப்படுத்தி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. அன்னை மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார். அன்னை மரியா தன் மகனிடம் இந்தக் குறையை எடுத்துரைத்த அழகை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

யோவான் 2: 3

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.

மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று, பல இறையியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது, எதார்த்தமான ஒரு கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது என்று, ஒரு சிலர் தயங்கலாம். இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல்களை கடவுளிடம் அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது இன்னும் அழகான செபங்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இத்தகைய செபத்தைச் சொல்வது, எளிதல்ல. இத்தகைய செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் நம் உண்மை நிலையைச் சொன்னால் போதும் என்ற மனநிலையுடன் செபிப்பதற்கு, ஆழமான நம்பிக்கை வேண்டும். இவ்வகைச் செபத்தை, ஒரு சிறு கற்பனை வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

வீட்டுத்தலைவன் செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள்’ என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்ற சொற்கள் வழியே, மரியாவும், இப்படி ஒரு செபத்தை, இயேசுவிடம் எழுப்புகிறார். நம்முடைய செபங்கள், இவ்வகையில் அமைந்துள்ளனவா என்பதைச் சிந்திப்பது நல்லது.

விவிலியம் முழுவதிலும், நான்கு நிகழ்வுகளில் மட்டுமே, அன்னை மரியா பேசியதாக கூறப்பட்டுள்ளது. வானதூதர் கபிரியேலுடன் மரியா மேற்கொண்ட உரையாடல் (லூக்கா 1:26-38), உறவினரான எலிசபெத்தின் இல்லத்தில் அவர் எழுப்பிய புகழ்ப்பாடல் (லூக்கா 1:46-56), எருசலேம் கோவிலில், சிறுவன் இயேசுவிடம் கேட்ட கவலை நிறைந்த கேள்வி (லூக்கா 2:48) என்ற மூன்று நிகழ்வுகள், லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ளன. யோவான் நற்செய்தியில், கானா திருமண நிகழ்வில் மட்டுமே அன்னை மரியா பேசியுள்ளார். அதுவும், இரு அழகான, பொருள் நிறைந்த கூற்றுகளை கூறியுள்ளார்.

'இரசம் தீர்ந்துவிட்டது' என்று இயேசுவிடம் 'சிம்பிளாக'ச் சொன்ன மரியன்னை, பின்னர், பணியாளர்களைப் பார்த்து, இன்னும் 'சிம்பிளாக' "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அகன்றார். அதன்பின், அந்தத் தாயைப் பற்றி எவ்வித கூற்றும் இல்லை இன்றைய நற்செய்தியில். தன் மகன் புதுமை ஆற்றும்போது, அருகில் நின்று, 'இது என் மகன்' என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து, அங்கு எழும் பிரமிப்பில், மகிழ்வில் தனக்கும் பங்கு உண்டு என்பதை நிலைநாட்டவேண்டும் என்ற எண்ணங்கள் அன்னை மரியாவிடம் எழவில்லை.

இதுதான் அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்து விடுவார். அன்னை மரியாவிடம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள், நம் வாழ்நாள் முழுமைக்கும் போதாது.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று, தங்களிடம், மரியன்னை சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் அதுவரைப் பார்த்ததில்லை. இருந்தாலும், கடந்து சில நாட்களாய் தங்களுடன் சேர்ந்து வேலைகள் செய்தபோது, அந்த அன்னை, பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததை, கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அந்த இளைஞன், அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.

பணியாளர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆறு தொட்டிகளைக் கண்ட இயேசு, பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார்.

இயேசு சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, கைகளையும், கால்களையும் கழுவ பயன்படுத்தப்படும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்படி இயேசு சொல்வார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதேநேரம், அவர் தந்த கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம், அவர்கள் மனதில் ஏதோ ஒருவகை நம்பிக்கையைத் தந்தது. இயேசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு என்ன நடந்தது என்பதை, இன்றைய நற்செய்தி இவ்வாறு கூறியுள்ளது:

யோவான் நற்செய்தி, 2: 7-9

இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி, இந்த புதுமை நடந்தது?

வழக்கமாக, இயேசுவின் சொல்லோ, செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை. "தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது அவர் கரங்களை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ, நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஓர் அழகிய வாக்கியத்தை இணைத்துள்ளார். “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்”  என்று இயேசு சொன்னதும், அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள் (யோவான், 2: 8). இதுதான் அந்த பொருள்நிறைந்த வாக்கியம். எப்போது அந்தப் பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது என்று நாம் கூறமுடியும்.

இயேசு சொல்லியதைக் கேட்டு, குழப்பத்தோடும், கோபத்தோடும் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், தொட்டிகளை அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீரையும் இரசமாக மாற்றியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள், தாங்கள் செய்யும் செயலை, முழுமையாகச் செய்த அந்த நேரத்தில், அவர்கள் ஊற்றிய தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில் பல அற்புதமான மாற்றங்களையும் உருவாக்கும். புத்தாண்டின் துவக்கத்தில், இப்புதுமையின் வழியே, இப்படிப்பட்ட ஒரு பாடத்தை நாம் பயில்வது பயனளிக்கும்.

இறுதியாக, இந்நாட்களில் திருமண உறவில் இணையும் மணமக்கள் வாழ்வில் அன்னை மரியாவும், இயேசுவும் பங்கேற்கவும், அந்த அன்னையின் பரிந்துரையால், மணமக்கள் வாழ்வில், இறைவன், அற்புதங்களை ஆற்றவும், சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 14:27