2018.12.28 Cantori delle stelle, Sternsinger folgen dem Stern - @Toni Tropper 2018.12.28 Cantori delle stelle, Sternsinger folgen dem Stern - @Toni Tropper 

"விண்மீன் பாடகர்கள்" மாற்றுத்திறனாளர் சிறாருக்கு உதவி

ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா, கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் உதவி தேவைப்படும் சிறார்க்கு, விண்மீன் பாடகர்கள் குழு உதவி வருகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உலகில், மாற்றுத்திறனாளர் சிறாருக்கு உதவுவதற்கென, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மன் மொழி பேசும் ஆயிரக்கணக்கான சிறார், இந்த கிறிஸ்மஸ் காலத்தில், வீடு வீடாகச் சென்று நிதியுதவி கேட்டு வருகின்றனர் என்று, செய்திகள் கூறுகின்றன.

பாலர் சபையின் "விண்மீன் பாடகர்கள் (Sternsinger)" என்ற குழுவின் 2,600க்கும் அதிகமான சிறார், டிசம்பர் 28ம் தேதியன்று, 61வது ஆண்டாக, இந்நடவடிக்கையைத் தொடங்கினர். இது, சனவரி 6, திருக்காட்சி பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு வரை இடம்பெறுகின்றது.

ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களிலுள்ள, கத்தோலிக்க பங்குத்தளங்களைச் சார்ந்த ஏறத்தாழ மூன்று இலட்சம் சிறார், மூன்று கீழ்த்திசை ஞானிகள் போன்று உடையணிந்து, கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று உதவிகள் கேட்டு வருகின்றனர்.

“ஆசீர்வாதத்தைக் கொண்டு செல்லுங்கள், ஆசீர்வாதமாய் இருங்கள்” என்பது, "விண்மீன் பாடகர்கள்" குழுவின், 2019ம் ஆண்டின் விருதுவாக்காகும்.

"விண்மீன் பாடகர்கள்" குழு

உலகெங்கும் உதவி தேவைப்படும், தங்களையொத்த வயதுடைய சிறார்க்கு உதவுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 1959ம் ஆண்டில் முதன்முறையாக, "விண்மீன் பாடகர்கள்" குழுவின் இந்நடவடிக்கை துவங்கப்பட்டது.

"விண்மீன் பாடகர்கள்" குழு, 2015ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியன்று, யுனெஸ்கோ கலாச்சாரப் பாரம்பரியத்தில் இணைக்கப்பட்டது. சனவரி முதல் தேதி, திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியிலும் இக்குழுவினர் கலந்துகொண்டனர்.

திருஅவையில், சனவரி 06ம் தேதி, சிறார் மறைபோதகர் நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2019, 15:36