தேடுதல்

வாஷிங்டனில், வாழ்வுக்கு ஆதரவாக நடைபெற்ற இளையோர் பேரணி வாஷிங்டனில், வாழ்வுக்கு ஆதரவாக நடைபெற்ற இளையோர் பேரணி 

வாழ்வை ஆதரிக்கும் இளையோர், அமெரிக்க சமுதாயத்திற்குப் புத்துயிர்

கடவுளின் சட்டத்திற்குச் சவால்விடுக்க, எந்த ஒரு மனித அதிகாரத்திற்கும் உரிமை கிடையாது என்பதில், அமெரிக்க இளையோர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், தேசிய அளவில் நடைபெற்ற வாழ்வுக்கு ஆதரவு வழங்கும் பேரணியில், பெருமளவில் கலந்துகொண்ட இளையோர், அமெரிக்க சமுதாயத்திற்கு,  புத்துயிர் அளிப்பவர்களாக உள்ளனர் என்று, அந்நாட்டு திருப்பீட தூதர் பேராயர் கிறிஸ்டோப் பியெர் அவர்கள், பாராட்டினார்.

சனவரி 18, இவ்வெள்ளியன்று நடைபெற்ற மனித வாழ்வு ஆதரவு பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திருப்பலி நிறைவேற்றிய, பேராயர் பியெர் அவர்கள், இத்திருப்பலியில் மட்டுமல்லாமல், வாஷிங்டன் தெருக்களிலும் கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்றுகளாக விளங்கும் இளையோர், பேரணி முடிந்து வீடு திரும்பிய பின்னரும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வருங்காலம், இளையோர் போன்ற உங்களின் கரங்களில் உள்ளது என்றுரைத்த பேராயர் பியெர் அவர்கள், அமெரிக்க சமுதாயத்தின் புதுப்பித்தலுக்கு, இளையோர் உறுதியான பங்களிப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, கடவுளின் பராமரிப்பில், ஒரே நாடாக உருவாக்கப்பட்டது மற்றும், கடவுளின் சட்டத்திற்குச் சவால்விடுக்க, எந்த ஒரு மனித அதிகாரத்திற்கும் உரிமை கிடையாது என்பதில், இளையோர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்றும் பேராயர் பியெர் அவர்கள் ஊக்கப்படுத்தினார்.

சனவரி 18, இவ்வெள்ளியன்று, வாஷிங்டனில், வாழ்வுக்கு ஆதரவாக நடைபெற்ற இளையோர் பேரணியில், 18 ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துகொண்டனர். (CNA)

இதற்கிடையே, பானமாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் நிகழ்வுகளில், பத்தாயிரத்திற்கு அதிகமான இளையோர் கலந்துகொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:36