2019.01.03 Conference of Catholic Bishops of India (CCBI) 2019.01.03 Conference of Catholic Bishops of India (CCBI) 

சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து, விழிப்புணர்வு அவசியம்

ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள், இருபது வருட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுபவம் பெற்றிருப்பவர். “Laudato Si” திருமடல் விடுத்த அழைப்பை செயல்படுத்தும் விதமாக, மும்பை உயர்மறைமாவட்டத்தை, பசுமை மறைமாவட்டமாக ஆக்கியதில், இவர் முன்னின்று செயலாற்றியவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தற்போது உலகினர் அனுபவித்துவரும் கடும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து, உலகமும், இந்தியத் திருஅவையும் விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டியது, உடனடித் தேவையாக உள்ளது என்று, இந்திய திருஅவைத் தலைவர் ஒருவர் கூறினார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவை, புதிதாக உருவாக்கியுள்ள, சுற்றுச்சூழல் பணிக்குழுத் தலைவரான, மும்பை துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள், ஆசியச் செய்திக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

சனவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி முடிய மாமல்லபுரத்தில், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவை நடத்திய 31வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், 132 இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களிலிருந்து, 143 பேராயர்கள் மற்றும் ஆயர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் பணிக்குழு, சிறிய கிறிஸ்தவக் குழுமங்கள் பணிக்குழு ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டன. 

2015ம் ஆண்டில், “Laudato Si” அதாவது இறைவா, புகழனைத்தும் உமக்கே எனப்படும் சுற்றுச்சூழல் திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் சுற்றுச்சூழல் பணிக்குழுவை உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவை, ஆசியாவில் முதலாவது மற்றும் உலகில் நான்காவது பெரிய ஆயர் பேரவையாக உள்ளது. 132 மறைமாவட்டங்களில், ஓய்வுபெற்றவர்கள் உட்பட 189 ஆயர்கள் உள்ளனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2019, 15:26