இயேசு, காற்றையும், அலைகளையும் அடக்கிய புதுமை இயேசு, காற்றையும், அலைகளையும் அடக்கிய புதுமை 

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி புதுமைகள் – அறிமுகம் 2

ஒத்தமை நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 28 புதுமைகளில், 12 புதுமைகள், மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளன. இந்த 12 புதுமைகளில் நம் தேடலை முதலில் மேற்கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி புதுமைகள் - அறிமுகம் 2

சனவரி 6, கடந்த ஞாயிறு, திருக்காட்சிப் பெருவிழாவைச் சிறப்பித்தோம். இவ்விழாவை, மூன்று அரசர்கள் திருவிழா அல்லது, மூன்று ஞானிகள் திருவிழா என்றும் அழைக்கிறோம். குழந்தை இயேசுவின் பிறப்பைக் காண்பதற்கு, இருவேறு குழுவினருக்கு அழைப்பு விடப்பட்டது. இவர்களில், வானதூதர் வழியே அழைக்கப்பட்ட இடையர் குழுவினருக்கு நாம் விழா எடுப்பதில்லை. ஆனால், விண்மீன் வழியே அழைக்கப்பட்ட ஞானிகளுக்கு விழா எடுக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு என்பதைச் சிந்திப்பது, புதுமைகள் குறித்த நம் தேடலுக்கு உதவியாக இருக்கும்.

இடையர்களுக்கு, வானதூதர்கள் நேரடியாகத் தோன்றி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை, தெளிவானச் சொற்களில் அறிவித்தனர். கவனத்தை ஈர்க்கும் காட்சி வழியே, இயேசுவின் பிறப்புச் செய்தி அவர்களை வந்தடைந்ததால், அதை, புதுமையென்று ஏற்பதற்கு, இடையர்களுக்கு தயக்கம் தோன்றியிருக்காது.

இதற்கு மாறாக, கீழ்த்திசை ஞானிகளுக்கோ, வெகு தூரத்தில், வானில் தோன்றிய ஒரு விண்மீன் வழியே, கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது. பல்லாயிரம் விண்மீன்கள் நடுவே ஒளிர்ந்த அந்த விண்மீன், ஞானிகளுக்கு, வாய்மொழியாக எந்தச் செய்தியையும் சொல்லவில்லை. அந்த விண்மீன் தோன்றியது, நல்லதொரு செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பிய ஞானிகள், அந்த விண்மீன் அழைத்துச்சென்ற வழியில், தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இயேசுவின் பிறப்பு என்ற புதுமையைக் கண்டனர். ஒரு விண்மீனைப் பின்பற்றி, பல நூறு மைல்கள் பயணம் செய்த இம்மூன்று ஞானிகளுக்கு விழா கொண்டாடுவது, பொருத்தமாகத் தெரிகிறது.

இவ்வுலகில், இன்றும், அற்புதமான அடையாளங்கள், சிறிதும், பெரிதுமாக, ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளன. இவற்றில் சில, இடையர்கள் அனுபவித்ததுபோல, இயல்பு வாழ்விலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. அவ்வேளைகளில், அவற்றை, அற்புதங்கள், புதுமைகள் என்று எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். இவற்றிற்கு மாறாக, இன்னும் பல புதுமைகள், மிக, மிக எளிய அடையாளங்கள் வழியே நம்மைச் சுற்றி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவற்றை நாம் சரிவரப் புரிந்துகொண்டால், நமது வாழ்வு, அற்புதங்களால், புதுமைகளால் நிறைந்துவிடும். இதையே, கீழ்த்திசை ஞானிகள், நமக்குச் சொல்லித் தருகின்றனர். ஞானிகள் கொண்டிருந்த மனநிலையுடன், ஒத்தமை நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.

இயேசு தன் பணிவாழ்வில் ஆற்றியதாக, நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றில், 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமை, நான்கு நற்செய்திகளிலும் இடம் பெற்றுள்ள தனித்துவம் மிக்க புதுமை என்பதை அறிவோம். இத்துடன், யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வேறு 6 புதுமைகளை நாம் ஏற்கனவே சிந்தித்து வந்துள்ளோம். ஏனைய 28 புதுமைகள், ஒத்தமை நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 28 புதுமைகளில், 12 புதுமைகள், ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் பதிவாகியுள்ளன. இந்த 12 புதுமைகளில் நம் தேடலை முதலில் மேற்கொள்வோம்.

நான்கு நற்செய்திகளில், புதுமைகள், மூவகை சொற்களால் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றில், யோவான் நற்செய்தியில், 'செமெயியோன்' (Semeion) என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிவோம். இச்சொல்லுக்கு, 'அடையாளம்' என்று பொருள். கானா திருமணத்தில், இயேசு, தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியதும், யோவான் இச்சொல்லை முதல்முறையாகப் பயன்படுத்தியுள்ளார்:

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். (யோவான் 2:11)

இயேசு ஆற்றிய முதல் புதுமையின் இறுதியில் இவ்வாறு கூறும் நற்செய்தியாளர் யோவான், ஏனையப் புதுமைகளிலும், ‘இயேசு செய்த அரும் அடையாளம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒத்தமை நற்செய்திகளில் புதுமையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள இரு சொற்கள் - ‘துனாமிஸ்’ (Dunamis), மற்றும், ‘தேரெசா’ (Teresa). ‘துனாமிஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'வல்லமை' என்று பொருள். புதுமைகள் நிகழ்ந்த வேளைகளில், இயேசுவிடமிருந்து வல்லமை வெளியேறியது என்று ஒத்தமை நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இரத்தப் போக்கினால் வருந்தியப் பெண், இயேசுவின் மேலுடையைத் தொடும் நிகழ்வில், நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:

மாற்கு 5: 29-30

"(இயேசுவின் மேலுடையைத்) தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே, இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப்பார்த்து, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று கேட்டார்."

புதுமைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு சொல், ‘தேரெசா’. இச்சொல், புதுமைகள் நிகழ்ந்தபோது மக்களிடையே ஏற்பட்ட வியப்பு, திகைப்பு, மலைப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

புயல்காற்று சூழ்ந்த படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, விழித்தெழுந்து, காற்றையும், அலைகளையும் அடக்கியபோது, மக்களெல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர் (மத். 8:27) என்று நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ளார்.

தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணப்படுத்தி, அவனது தந்தையிடம் ஒப்படைத்தபோது, நற்செய்தியாளர் லூக்கா, "எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்." (லூக்கா 9:43) என்ற சொற்களுடன் அப்புதுமையை நிறைவு செய்துள்ளார். வியப்பு, திகைப்பு, மலைப்பு என்ற மூவகை உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல், ‘தேரெசா’.

இயேசு ஆற்றிய புதுமைகளைக் கண்டவர்கள், வியப்பு, மலைப்பு, திகைப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு, இன்னும் சில அழகான, ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்தினர் என்பதை, நாம் நற்செய்தியில் காண்கிறோம்.

எடுத்துக்காட்டாக, இரவு முழுவதும் மீன் பிடிப்பு ஏதும் இல்லாததால் சோர்ந்திருந்த சீமோன் பேதுருவிடம் மீண்டும் மீன் பிடிக்கும்படி இயேசு பணித்தபோது, அதற்கு செவிமடுத்து, பேதுரு வலையை வீசவே, திரளான மீன்கள் வலையில் விழுந்தன. இப்புதுமையைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்' என்றார்" (லூக்கா 5:8)

பத்து தொழுநோயாளரை இயேசு குணப்படுத்தும் புதுமையில், அவர்களை குருக்களிடம் காட்டும்படி இயேசு அவர்களை அனுப்பி வைக்கிறார். அவ்வேளையில் நிகழ்ந்ததை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

லூக்கா 17: 14ஆ-16

அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

புதுமைகளைக் காணும் ஒருவரிடம், தன்னுடைய தகுதியின்மையை உணர்தல், அல்லது நன்றியால் நிறைதல் போன்ற உன்னதமான உணர்வுகள் வெளியாயின. இவற்றிற்கு நேர்மாறாக, ஏரோது மன்னன், இயேசுவின் புதுமைகளை, கண்கட்டி வித்தையைப்போல் வேடிக்கைப் பார்க்கும் ஆவலில் இருந்தான் என்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். தன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இயேசு, கலிலேயாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த ஆளுனர் பிலாத்து, அவரை, ஏரோதிடம் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ந்தனவற்றை, லூக்கா நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.

லூக்கா 23: 8-9

இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

ஒத்தமை நற்செய்திகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெரும்பாலான புதுமைகள், குணமாக்கும் புதுமைகள். இவற்றை, நன்றி உணர்வுடன் அணுகி, நல்ல பாடங்களைப் பயில முயல்வோம், இனி வரும் தேடல்களில்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2019, 15:00