தேடுதல்

நைரோபி DusitD2 நட்சத்திர பயணியர் வளாக பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர் நைரோபி DusitD2 நட்சத்திர பயணியர் வளாக பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர் 

மரண கலாச்சாரம் ஒழிக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு

கென்யாவின் அமைதியைக் குலைப்பதற்கு நடைபெறும் தாக்குதல்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில், இனம், அரசியல், மதம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நைரோபியில், DusitD2 நட்சத்திர பயணியர் வளாகம், பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது குறித்து கவலை தெரிவித்துள்ள கென்ய ஆயர்கள், தங்களின் உறவுகளை இழந்து துன்புறும் குடும்பங்களுக்கு, தங்களின் ஆறுதலையும், அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள கென்ய கத்தோலிக்க ஆயர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.

“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத்.5:4-9) என தலைப்பிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ள கென்ய ஆயர்கள், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் கத்தோலிக்கர், தன்னார்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் ஏனையோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அப்பாவி மக்களைக் கொலை செய்வது, நல்ல செயல் என்பதில் நம்பிக்கை கொள்ளும் நிலையை எட்டியுள்ள இளைஞர், இளம்பெண்கள் குறித்து கவலையடைவதாகவும், பண ஆசை மற்றும் போலியான தலைவர்களால் வழிநடத்தப்படுவதால் இடம்பெறும் மரணக் கலாச்சாரம், அனைவருக்கும் ஒரு சவால் எனவும், இக்கலாச்சாரத்தை அகற்றுவதற்கு, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த கருத்தாக்கத்தை நீக்குவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும், திருஅவை முழு ஆதரவை வழங்கும் எனவும், ஆயர்கள் அவ்வறிக்கையில் உறுதி கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2019, 14:59