தேடுதல்

Vatican News
பெத்லகேம் திருத்தலம் நோக்கி பவனியாகச் செல்லும் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் பெத்லகேம் திருத்தலம் நோக்கி பவனியாகச் செல்லும் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

இஸ்ரேலில் கிறிஸ்தவர்கள் பாகுபடுத்தப்படுகின்றனர்

புனித பூமியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கு, தங்களின் தோழமையையும், ஆதரவையும் தெரிவிக்கும் நோக்கத்தில், ஆயர்கள் குழு ஒன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பன்மைத்தன்மை கொண்ட மற்றும் சனநாயகச் சமுதாயச் சூழலில், தங்களின் உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களாக வாழ்வதற்கு, இஸ்ரேல் கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என்று, ஆயர்கள் குழு ஒன்று கூறியது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கு, தங்களின் தோழமையையும், ஆதரவையும் தெரிவிக்கும் நோக்கத்தில், இவ்வாரத்தில் அப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனா மற்றும், இஸ்ரேலில் குடியேறியுள்ள அரபு நாடுகளின் கிறிஸ்தவர்கள், பாகுபடுத்தப்படுகின்றனர் மற்றும் ஓரங்கட்டப்படுகின்றனர் என்று கூறியுள்ள ஆயர்கள், இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள, ஒரே இனம், மொழி மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய சட்டம், சிறுபான்மையினரை, சட்டத்தின்கீழ் பாகுபடுத்துகின்றது என்றும்  கூறியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் Declan Lang அவர்களின் தலைமையில், 15 பேர் கொண்ட குழு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இக்குழுவில், ஜெர்மனி, தென்னாப்ரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு, போர்த்துக்கல், இத்தாலி ஆகிய நாடுகளின் ஆயர் பிரதிநிதிகள் உள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் குழு, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, புனிதப் பூமிக்கு, ஒவ்வோர் ஆண்டும் பயணம் மேற்கொண்டு வருகிறது.

“இஸ்ரேலில் கிறிஸ்தவர்கள் : சவால்களும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், இவ்வாரத்தில் இக்குழு, புனித பூமியில் பயணம் மேற்கொண்டு, கிறிஸ்தவர்களைச் சந்தித்து உரையாடியது.  (AsiaNews)

18 January 2019, 14:57