அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் 

அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவரின் திறந்த கடிதம்

சிறியோருக்கு எதிராக நிகழும் பிரச்சனையைக் குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வகையில், ஒரு திறந்த மடலை, அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறியோருக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவையில் நிகழ்ந்துள்ள, மற்றும் நிகழ்ந்துவரும் கொடுமைகளைக் குறித்தும், அவற்றை நீக்கும் வழிகள் குறித்தும் மக்களின் கருத்துக்களை அறியும் வண்ணம், அயர்லாந்து ஆயர் ஒருவர், சனவரி 22, இச்செவ்வாயன்று, மக்களுக்கு ஒரு திறந்த மடலை அனுப்பியுள்ளார்.

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியக் கூட்டத்திற்கு, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைத்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள, அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள், இந்தப் பிரச்சனையைக் குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வகையில், ஒரு திறந்த மடலை, அயர்லாந்து தலத்திருவை மக்களுக்கு அனுப்பியுள்ளார்.

திருஅவையில் நடைபெற்றுள்ள இந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டோர், பல ஆண்டுகளாக மௌனம் காத்து வந்ததால், இந்தப் பிரச்சனை பெரிதாக வளர்ந்துள்ளது என்பதை தன் மடலில் குறிப்பிட்டுள்ள பேராயர் மார்ட்டின் அவர்கள், பாதிக்கப்பட்டோரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளவே, தான் இந்த முயற்சியை மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்.

வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு ஒரு முக்கிய செய்தியை வழங்குவதாக இருந்தால், அது என்ன செய்தியாக இருக்கும் என்பதை தனக்கு கூறுமாறு, பேராயர் மார்ட்டின் அவர்கள், மக்களிடம் விண்ணப்பித்துள்ளார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:31