Pope Francis celebrates Mass of the Solemnity of Mary Most Holy Pope Francis celebrates Mass of the Solemnity of Mary Most Holy 

நேர்காணல் – திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய உலகில் அமைதி என்ற திருமடலால் தூண்டப்பட்டு, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1967ம் ஆண்டில், உலக அமைதி நாளை உருவாக்கினார்

மேரி தெரேசா – வத்திக்கான் & அ.பணி ஜூலியன்

2019ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையில் 52வது உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல அரசியல் அமைதிக்குப் பணியாற்றுவதாகும் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தியின் சுருக்கத்தைத் தருகிறார், அருள்பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாவட்டம்.

“நல்ல அரசியல், அமைதியை நிலைநாட்டவே உழைக்கும்” என்ற மையக்கருத்தில் நம் திருத்தந்தை அவர்கள் 2019ம் ஆண்டாகிய, இப்புதிய ஆண்டின் வாழ்த்துச் செய்தியாக “இவ்வீட்டிற்கு அமைதி உண்டாகுக” என்ற இயேசுவின் வார்த்தைகளை முழக்கமிட்டு வழங்கினார்கள். இயேசு தன்னுடைய சீடர்களை அனுப்பியபொழுது, “நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், “இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!” என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்” என்றார் (லூக் 10:5-6). எனவே, இயேசுவின் சீடர்களின் நற்செய்திப்பணியின் மையப்பணியாக இருந்தது “அமைதியை ஏற்படுத்துவது” ஆகும். எல்லா மக்களுக்கும், குறிப்பாக பலவித துன்பங்களாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இவ்வமைதி வழங்கப்படுகிறது. “இவ்வீட்டிற்கு அமைதி உண்டாகுக” என்ற திருத்தந்தையின் வார்த்தைகளில் “இவ்வீடு” என்பது எல்லாக் குடும்பங்களையும், சமுதாயத்தையும், நாடுகளையும், கண்டங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகை குறிக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் இந்த அமைதியை அனுபவிக்க வேண்டுமென்பதே திருத்தந்தையின் ஆவலாகும்.

       கவிஞர் சார்லஸ் பேகுய் அவர்களை மேற்கோள் காட்டிய திருத்தந்தையவர்கள், அமைதி என்பது பல கற்களுக்கும, முட்களுக்கும் நடுவில் மலரப் போராடும் மென்மையான மலரைப் போன்றது என்றார். இன்று மனித சமுதாயத்தை உருவாக்குவதில் அரசியல் அமைப்புமுறைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதேநேரத்தில் எப்படியாவது பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடிப்பவர்களால்தான் நேர்மையற்ற தன்மையும், முறையற்ற செயல்களும் இன்று அரசியலில் அதிகமாகிவிட்டன. அரசியல் கொள்கைள் எல்லா மனிதர்களையும் அரவணைக்காவிட்டால் ஆளும் அரசியல் அமைப்புகள், சமூக ஏற்றத்தாழ்வையும், அழிவையும் மட்டுமே உண்டாக்கும்.

இயேசு கூறுகிறார்: “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற் 9:35). திருத்தந்தையும் புனிதருமாகிய ஆறாம் பவுலின் வார்த்தைகளில் சொல்வோமென்றால், அரசியலில் ஈடுபடுதல் என்பது நாட்டிற்காகவும், மனிதகுல முன்னேற்றத்திற்காகவும் குறிப்பறிந்து சுதந்திரத்துடன் செய்யவேண்டிய கடமையைக் குறித்துக் காட்டுகின்றது. அரசியல் பதவி என்பது, உண்மையில் அதிக பொறுப்பும், சவாலும் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. ஆட்சியாளர்கள் தங்களுடைய ஒவ்வொரு குடிமகனும் சிறந்த முறையில் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலையையும், நல்லதொரு எதிர்காலத்தையும் அமைத்துக்கொடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மனிதமாண்பு மற்றும் தனி மனித சுதந்திரம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அரசியல்பணியைவிட மிகச் சிறந்த சேவை இவ்வுலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. 

      முன்னாள் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரும் தான் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப, சமுதாயத்திலுள்ள தன் நிலை அல்லது பொறுப்பிற்கேற்ப தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார். அப்படியென்றால் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள், தன் பணி மற்றும் பதவிக்குத் தகுந்தவாறு அன்பை வெளிப்படுத்தி சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். மனிதகுல விழுமியங்களாகிய நீதி, சமத்துவம், ஒருவருக்கொருவர் மதித்தல், நேர்மை, நண்ணயம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

“பேறுபெற்ற அரசியல்வாதி அல்லது ஆட்சியாளர்” யார் என்பதை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த கர்தினால் பிரான்சிஸ் சேவியர் கூறியதையும் திருத்தந்தை அவர்கள் மேற்கோள் காட்டினார்கள். பேறுபெற்ற அரசியல்வாதி அல்லது ஆட்சியாளர் யாரென்றால் - தன்னுடைய பணி என்ன என்பதை அறிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு தெளிந்த சிந்தளையுள்ளவர், நம்பகத்தன்மையின் மொத்த உருவமாக இருப்பவர், தன்னுடைய நன்மைக்காக அல்லாமல் பொதுநன்மைக்காக மட்டும் உழைப்பவர், எப்பொழுதும் நிலையாக இருப்பவர், ஒற்றுமைக்காக பாடுபடுபவர், சமுதாயத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குபவர், செவிசாய்க்கக்கூடிய திறன் கொண்டவர்; மற்றும் பயமில்லாதவர்.

மேலும் திருந்தந்தை அவர்கள் ஒவ்வொரு தேர்தலும் நீதியையும் நெறிமுறைகளையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு என்கிறார். நல்ல அரசியல, அடிப்படை உரிமைகளை உருவாக்கி, பரஸ்பர கடமைகளை உணர வைத்து, நம்பகத்தன்மையையும், நன்றியுணர்வையும் பிணைத்து, அமைதியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

அதேநேரத்தில் திருத்தந்தை அவர்கள் இன்றைய அரசியல் முறைகளிலும் ஆட்சியாளர்களிடமும் காணப்படும் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றில் முக்கியமானவை: ஊழல், பொதுச்சொத்துக்களை அபகரித்தல், உழைப்பிற்குத் தகுந்த கூலி கொடுக்காமை, தனிநபர் உரிமைகளை மறுத்தல், சமுதாய நெறிமுறைகளை மதிக்காமை, நேர்மையற்ற முறையில் அதிக லாபம் சம்பாதித்தல், தன்னுடைய படைபலத்தை பயன்படுத்தி பதவியை அபகரித்தல் மற்றும் பதவியை விட்டு இறங்க மறுத்தல்.  இத்தகைய தவறுகள் ஆட்சிசெய்ய திறனற்ற தலைவர்களாலும் மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளாலும் உருவாகின்றன. இவைகள் அரசியல் அமைப்பிலும் ஆட்சியாளர்களிடமும் நம்பகமின்மையையே உருவாக்குகின்றன.

அரசியல் தலைவர்கள் ஒருசில சிறப்புரிமைப் பெற்ற நபர்களின் நலன்களை மட்டுமே பேணுவார்கள் என்றால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தேடி அலையும் சமுதாய விளிம்பில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். எனவே ஆட்சிமுறைகள் அனைத்து இளைஞர்களின் திறமைகளையும், கனவுகளையும் ஊக்குவிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு இளைஞரும், “ஆட்சியாளர்களே, நான் உங்களை நம்புகிறேன், நானும் உங்களோடு இணைந்து பொதுநன்மைக்காக உழைக்க விரும்புகிறேன்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் முகத்தில் அமைதியையும் நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும்.

இவ்வுலகு சிறப்பான வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பை அளிக்க வேண்டும். உண்மையான ஆட்சிமுறை நேர்மையான உறவுமுறையையும், மானிடரிடையே அறிவு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த புத்துணர்வையும் உருவாக்க வேண்டும். காரணம் இன்றைய காலக்கட்டத்தில் உறவுமுறை என்பது, யாரையும் எவரும் எளிதாக நம்பாத காரணத்தால் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. இந்த உறவுச்சிக்கல் குடும்ப அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் பிடித்த நாடு – பிடிக்காத நாடு என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுகிறது. எனவே நமது குடும்பங்களிலும் நாட்டிலும் “உண்மையான அமைதியை” ஏற்படுத்தும் தூதுவர்கள் - கடவுளின் சாட்சிகள் இன்று அதிகமாகத் தேவைப்படுகிறார்கள்.

முதல் உலகப்போர் முடிந்த நூறு வருடங்களுக்குப் பிறகும் அதனால் ஏற்பட்ட எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பை நினைத்துப் பார்க்கின்ற பொழுது, இப்போர் கடினமான பாடம் ஒன்றை நமக்குப் புகட்டியிருக்கின்றது. அது என்னவென்றால், ‘படைபலத்தால் பயமுறுத்தி அமைதியை இவ்வுலகில் ஒருபொழுதும் ஏற்படுத்த முடியாது. மாறாக ஒருவரையொருவர் மதித்தல், பொதுநன்மையை விரும்பி சட்டத்தை எற்றுக்கொள்ளுதல் மற்றும் நாட்டின் பாரம்பரிய நெறிமுறைகளை மதித்து திறம்பட ஆட்சிசெய்தல் போன்றவற்றால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

மேலும், நம் திருத்தந்தையவர்கள் பல சவால்கள் மற்றும் சங்கடங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்;கின்ற குழந்தைகளின் வாழ்வும் அவர்களின் உரிமையும் பேணிக்காக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார். இறுதியாக பொறுமை, வளைந்து கொடுக்கும் தன்மை போன்றவற்றால் அமைதி, தனி நபரிடமிருந்து தொடங்க வேண்டும் என்கிறார். மேலும் இவ்வமைதி நமது குடும்பங்கள் வழியாக, நண்பர்கள் வழியாக, ஏழைகள் மற்றும் அந்நியர்களை அரவணைப்பதன் வழியாக பெருக வேண்டும.; அரசியல் அமைதி என்பது சமுதாயத்தில் நலிவடைந்தவர்களை உயர்த்துவதில்தான் அதிகம் அடங்கியிருக்குகின்றது. இது அன்னை மரியாவின் பாடலில் அழகாக வெளிப்படுகிறது: “வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார்” (லூக் 1:52).

திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தியைக் கேட்ட நாம் ஒன்றை மறந்துவிட வேண்டாம். நம் நாட்டையாளும் தலைவர்கள் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும் என்று பல நேரங்களில் ஏங்குகிறோம். ஆனால் நம் நாட்டையாளும் தலைவர்கள் விண்ணிலிருந்து வருவதில்லை, மாறாக நம் குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகளாய் உதிக்கிறார்கள். எனவே நம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே விழுமியங்களுடன்கூடிய தலைமைப் பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும். அதோடு நம் நாட்டுத் தலைவர்களுக்காக, அவர்களின் நல்லாட்சிக்காக தினமும் செபிப்பதை நம்முடைய பழக்கமாக்குவோம். (அ.பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாவட்டம்)

நேர்காணல் – திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 14:29