தேடுதல்

புனித அகஸ்தீன் புனித அகஸ்தீன் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் துறவு சபைகள் - 2

"தீமையை விலக்கு; நன்மை செய்யப் புறப்படு; அமைதியைத் தேடிக் கண்டுபிடி" என்ற குரல் கேட்டது.

மேரி தெரேசா – வத்திக்கான்

சிஸ்டர்சியன் துறவு சபையின் உண்மையான நிறுவனர் எனப் போற்றப்படும், புனித Stephen Hardin அவர்களால் கொண்டுவரப்பட்ட, கடுமையான எளிமை மற்றும் ஏழ்மை வாழ்வு உள்ளிட்ட கொள்கைகள், அச்சபையில் கடைப்பிடிக்கப்பட்ட, ஒருவித சனநாயகப் பண்பு போன்றவை, 12ம் நூற்றாண்டில், பங்குக் குருக்கள் மத்தியில் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன. இதில், பெர்னார்டு அவர்களின் நண்பரான, Xanten நகர் புனித நார்பெர்ட் அவர்கள், 1120ம் ஆண்டில் தோற்றுவித்த, Canons Regular of Prémontré (Premonstratensians) துறவு சபை முக்கியமானது.  புனித அகுஸ்தீன் அவரின் கொள்கைகளின் அடிப்படையில், சிஸ்டர்சியன் அமைப்புமுறையில் இந்த சபையை இவர் ஆரம்பித்தார்.  இத்துறவு சபை, நார்பெர்ட்டைன் சபை எனவும் அழைக்கப்படுகிறது. இத்துறவு சபை, விரைவில், ஐரோப்பாவில், ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பரவத் தொடங்கியது. பின்னர், பெண்களுக்கென்றும் துறவு சபை ஆரம்பிக்கப்பட்டது. 21ம் நூற்றாண்டில், ஏனைய துறவு சபைகளைப் போலவே, நார்பெர்ட்டைன் சபையினரும், தங்களின் வாழ்வாதாரத்திற்காக, அச்சகம், விவசாயம், பால்கட்டி தயாரித்தல், காடுகள் பராமரிப்பு உட்பட சிறிய தொழிற்கூடங்களை நடத்தி வருகின்றனர்.  

புனித நார்பெர்ட்

ஜெர்மனியில், Xanten என்ற ஊரில், 1080ம் ஆண்டுவாக்கில், அரச குலத்தில் பிறந்த புனித நார்பெர்ட் அவர்கள், ஆழ்ந்த அறிவும், இறைபக்தியும் கொண்டவர். இவர், இளமையிலேயே குருத்துவத்தை விரும்பினார். ஆனால் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை அனுபவித்ததால், குருவாகும் ஆசை போய்விட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மேல் ஏறி வேறு ஊருக்குச் செல்லும்போது, எதிர்பாராத விதமாக புயல்காற்றும், இடிமின்னலும் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே, குதிரை நிலை தடுமாறி, அவரை கீழே தள்ளியது. அப்போது அவர் ஆண்டவரை நோக்கி, "நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்?" என்று கேட்டு கதறி அழுதார். "தீமையை விலக்கு; நன்மை செய்யப் புறப்படு; அமைதியைத் தேடிக் கண்டுபிடி" என்ற குரல் கேட்டது. அதன்பின் அவர், மனம் மாறி, முறையான இறையியல் பயிற்சி பெற்று, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். கடுந்தவ வாழ்வு நடைத்தினார் புனித நார்பெர்ட். ஜெர்மனியில், மாக்டபர்க் (Makdeberg) நகரின் பேராயராக இவர் பணியாற்றியவேளையில், அந்நகரிலிருந்த பல ஊழல்களை நீக்கினார். இவர், மாக்டபர்க் நகரின் பேராயராக நியமிக்கப்பட்டபின், அந்நகருக்கு முதன்முறையாகச் சென்றபோது, மிதியடியின்றி, எளியதோற்றத்தில், பேராயரின் இல்லத்திற்குள் நுழைந்தபோது, வாயில்காவலர், இவர் யாரென்று தெரியாமல், உள்ளே நுழைய அனுமதி தர மறுத்தார். அப்போது இவர், வாயிற் காவலரை நோக்கி, உண்மையில் நீதான் என்னைப் புரிந்துகொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான், என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி, இந்த இல்லத்திற்கு வரக்கட்டாயப்படுத்துகிறார்கள் என்றாராம். இந்த அளவுக்கு எளிமையாக வாழ்ந்தவர் புனித நார்பெர்ட். இவர் தனது 53வது வயதில், 1134ம் ஆண்டு, ஜூன் 6ம் நாளன்று காலமானார்.

புனித ரோமுவால்ட்

சிஸ்டர்சியன் துறவு சபையினரின் கடின தவ மற்றும் எளிய, ஏழ்மை வாழ்வால் ஈர்க்கப்பட்டு, புனித ரோமுவால்ட் (Saint Romuald) என்பவர், மற்றுமொரு துறவு சபையைத் தொடங்கினார். 11ம் நூற்றாண்டில், கடும்தவ வாழ்வு எழுச்சியை ஏற்படுத்திய முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர். தனிமையான இடங்களில், கடும் ஏழ்மையைப் பின்பற்றி, எளிய குழுக்களாக வாழ்கின்ற ஒரு துறவு சபையை இவர் தொடங்கினார். கி.பி.952ம் ஆண்டில், வடகிழக்கு இத்தாலியின் ரவென்னாவில் பிரபு குலத்தில் பிறந்த புனித ரோமுவால்ட் அவர்கள், இருபது வயதுவரை மனம்போன போக்கில் வாழ்ந்தார். அதன்பின்னர், தன் தந்தையோடு சேர்ந்து வேலைசெய்யத் தொடங்கிய சமயத்தில், ஒருநாள், இவரது தந்தை உறவினர் ஒருவரை, சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொலை செய்தார். இதற்குப் பிராயச்சித்தமாக, Classe யிலுள்ள புனித அப்போலோனியார் பசிலிக்கா சென்று நாற்பது நாள்கள் தவம் செய்தார் ரோமுவால்ட். பின்னர், பெனடிக்ட் துறவு சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரிந்தார். அங்கு வாழ்ந்த துறவிகளின் கட்டுப்பாடற்ற வாழ்வால், அந்த இல்லத்தை விட்டு வெளியேறி, வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னிஸ்(Franis) மலைப்பகுதியிலும் கடும் தவ, செப வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்ஸ், தென் இஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்களில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைப்பிடிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமைகொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துக் கொடுத்தார்.

இவ்வாறு புனித ரோமுவால்ட் அவர்கள், இத்தாலியின் Camaldoliயில், மனிதர் நடமாட்டமில்லாத மலைப்பகுதியில், ஐந்து குடிசைகளில், சில சகோதரர்களுடன் அமைதியில் செபம், மற்றும் தியானத்தில் வாழத் தொடங்கினார். இது, கடுமையான கொள்கை விதிமுறைகளைக் கொண்ட புனித பெனடிக்டின் Camaldolese சபை என்ற பெயரில் வளரத் தொடங்கியது. 1024ம் ஆண்டுக்கும், 1025ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இப்புனிதரால் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, 1072ம் ஆண்டில் திருத்தந்தையின் அங்கீகாரத்தையும் பெற்றது. 1086ம் ஆண்டில், Camaldolese பெண்கள் சபையும் ஆரம்பிக்கப்பட்டது. கடைசியில், இவரது தந்தையும் மனம்மாறி, இவரது சபையில் சேர்ந்தார்

Camaldolese துறவு சபை, மேற்குத் திருஅவையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இச்சபையினர் வாழும் இடம், சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூராக இருக்கும். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றைப் பெற்றுக்கொண்டு அங்கே மௌனம், தனிமை, செபம், தியானம் ஆகியவற்றுக்கிடையே இறைப்பணி புரிந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 15:15