ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் ஒரு பகுதியான சான் யுவான் நகரில், சனவரி 24 இவ்வியாழன் முதல், 26 சனிக்கிழமை முடிய, இரக்கத்தின் திருத்தூது மாநாடு நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறை இரக்கத்தை மையப்படுத்தி நடைபெறும் 4வது PACOM மாநாடு, பிலிப்பீன்ஸ் நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Gabriele Caccia அவர்கள் தலைமையில் நிகழ்ந்த துவக்கத்திருப்பலியுடன் இவ்வியாழனன்று ஆரம்பமானது.
"இளையோருடன் இணைந்த இறை இரக்கம்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த மாநாடு, இளையோரை மையப்படுத்தியதாகவும், உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் இணைந்த ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.
பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் வேரூன்றியதன் 500ம் ஆண்டு நிறைவு, 2021ம் ஆண்டு, கொண்டாடப்படுவதையொட்டி, 4வது PACOM மாநாடு, ஒரு தயாரிப்பு நிகழ்வாக அமைந்துள்ளது என்று இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
4வது PACOM மாநாட்டின் இறுதித் திருப்பலியை, Antipolo ஆயர், Francisco De Leon அவர்கள், இச்சனிக்கிழமையன்று நிறைவேற்றுவார். (AsiaNews)