தேடுதல்

அல்ஜீரிய மறைசாட்சிகள் அல்ஜீரிய மறைசாட்சிகள் 

2018ல் உலக அளவில் 40 மறைப்பணியாளர்கள் கொலை

கேரளாவில், கடந்த மார்ச் முதல் தேதியன்று, அருள்பணியாளர் Xavier Thelakkat அவர்கள், முன்னாள் உதவியாளரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டில், உலக அளவில் நாற்பது மறைப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, வத்திக்கான் செய்தி நிறுவனமான பீதேஸ் கூறுகின்றது.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியில், அவ்வாண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுவரும் பீதேஸ் செய்தி, 2018ம் ஆண்டில், இந்தியாவில் ஒருவர், பிலிப்பைன்ஸில் இருவர் என, ஆசியாவில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

கேரளாவில், 2018ம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று, அருள்பணியாளர் Xavier Thelakkat அவர்கள், Malayattoor பங்குத் தளத்தில், முன்னாள் உதவியாளரால், குத்திக் கொலை செய்யப்பட்டார்.   

2017ம் ஆண்டில் 23ஆக இருந்த இவ்வெண்ணிக்கை, 2018ம் ஆண்டில் ஏறத்தாழ இருமடங்காகியிருக்கின்றது என்றும், 2017ம் ஆண்டு வரை, தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள், அமெரிக்க நாடுகளில், மேய்ப்புப்பணியாளர்கள் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், பீதேஸ் செய்தி கூறுகின்றது.

2018ம் ஆண்டில், உலகெங்கும் கொல்லப்பட்டுள்ள நாற்பது மறைப்பணியாளர்களில், 35 பேர் அருள்பணியாளர்கள், ஒருவர் குருத்துவ பயிற்சி மாணவர் மற்றும் நால்வர் பொதுநிலையினர்.

ஆப்ரிக்காவில் கொல்லப்பட்டுள்ள 21 பேரில், 19 பேர் அருள்பணியாளர்கள், ஒருவர் குருத்துவ பயிற்சி மாணவர் மற்றும் ஒருவர் கத்தோலிக்கப் பெண் ஆவார்.

தென் அமெரிக்காவில் 12 அருள்பணியாளர்கள் மற்றும் மூன்று பொதுநிலையினர், ஐரோப்பாவில் ஓர் அருள்பணியாளர் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2019, 15:39