தேடுதல்

திருத்தந்தையுடன் யூத மதத் தலைவர்கள் திருத்தந்தையுடன் யூத மதத் தலைவர்கள் 

"நட்பின் விவிலியம்" நூலில் ஆபிரகாம் ஷோர்கா

மனிதர்களோடு இறைவன் மேற்கொள்ளும் தொடர் உரையாடல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவான கண்ணோட்டம் பெற்றுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆர்ஜென்டீனா நாட்டில் நிறுவப்பட்டுள்ள ராபின் (Rabin) யூத மத பயிற்சி இல்லத்தின் அதிபராகப் பணியாற்றும் ஆபிரகாம் ஷோர்கா அவர்கள், "நட்பின் விவிலியம்" என்ற நூலில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வெளியிட்டுள்ளது.

மனித வரலாற்றில், விவிலியம், மூன்று முக்கியமான மதங்களின் புனிதமான நூலாக கருதப்பட்டாலும், அந்நூலில் கூறப்பட்டுள்ள சொற்களுக்கு பொருள் தருவதில் பெரும் வேறுபாடுகளும், வாதங்களும் எழுந்ததன் விளைவாக, வெறுப்பும், வன்முறையும் உருவாகியுள்ளன என்று யூத மத குரு ஷோர்கா அவர்கள் கூறியுள்ளார்.

எபிரேய விவிலியத்தில் கூறப்பட்டுள்ள கடவுள், "வாழும் கடவுள்" என்று பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளார் என்பதை தன் கட்டுரையில் கூறும் ஷோர்கா அவர்கள், இந்தக் கடவுள், மாறாத வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கணணியைப் போல் செயல்படுபவர் அல்ல, மாறாக, மனிதரோடு மேற்கொள்ளும் உரையாடல் வழியே, தொடர்ந்து தன்னையே வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

வாழும் கடவுளை, நமது அறிவுத்திறனின் படைப்பாக மாற்றும் வேளையில், உருவ வழிபாட்டிற்கு எதிராக இறைவன் வழங்கியுள்ள கட்டளைகளுக்கு நாம் எதிராகச் செல்கிறோம் என்ற எச்சரிக்கையை, ஷோர்கா அவர்கள் தன் கட்டுரையில் விடுத்துள்ளார்.

மனிதர்களோடு இறைவன் மேற்கொள்ளும் தொடர் உரையாடல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவான கண்ணோட்டம் பெற்றுள்ளார் என்பதை அவர் வெளியிட்டுள்ள 'நற்செய்தியின் மகிழ்ச்சி' என்ற திருத்தூது அறிவுரை மடலில் காணமுடிகிறது என்று ஷோர்கா அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

இறையியலானது, கோட்பாடுகள், கருத்துக்கள், தியானங்கள் என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு நாள் வாழ்விலும் ஊடுருவிச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள கருத்தில் தனக்கு முழு சம்மதம் என்பதையும் யூத மத குரு ஷோர்கா அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இறைவன் மனிதர்களோடு கொள்ளும் உரையாடலையும், மனிதர்கள் ஒருவர் ஒருவரோடு கொள்ளவேண்டிய உரையாடலையும் வலியுறுத்த, "நட்பின் விவிலியம்" என்ற இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும் என்று, யூத மத குரு ஆபிரகாம் ஷோர்கா அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 15:28