தேடுதல்

Vatican News
காங்கோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்செல் உடெம்பி டாப்பா காங்கோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்செல் உடெம்பி டாப்பா 

காங்கோ தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் இருப்பது தவறு

காங்கோ குடியரசை உண்மையான குடியரசு நாடாக மாற்றும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கோ ஆயர் பேரவை முழு ஆதரவை வழங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காங்கோ குடியரசில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருப்பதும், உண்மைக்கு மாறான முடிவுகளை வெளியிட முயற்சிப்பதும், மக்களின் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று, காங்கோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்செல் உடெம்பி டாப்பா (Marcel Utembi Tapa) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், மக்களிடையே உருவாகக்கூடிய பொறுமையின்மைக்கும், அதன் வெளிப்பாடாக நிகழக்கூடிய வன்முறைகளுக்கும் தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்று பேராயர் டாப்பா அவர்கள் கூறியுள்ளார்.

பேராயர் வெளியிட்டுள்ள கருத்துக்களை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் Corneille Nangaa அவர்கள் கூறியதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பேராயர் டாப்பா அவர்கள், உண்மைக்கு எதிராக ஆயர் பேரவை எவ்வித முயற்சியும் எடுக்காது என்று தெரிவித்துள்ளார்.

காங்கோ குடியரசை உண்மையான குடியரசு நாடாக மாற்றும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கோ ஆயர் பேரவை முழு ஆதரவை வழங்கும் என்றும், இந்நாட்டை நலமான குடியரசாக மாற்ற ஆயர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர் என்றும் பேராயர் டாப்பா அவர்கள் கூறியுள்ளார். (Fides)

09 January 2019, 15:25