பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Romulo Valles, செய்தியாளர்கள் கூட்டத்தில் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Romulo Valles, செய்தியாளர்கள் கூட்டத்தில் 

"நன்மையால் தீமையை வெல்லுங்கள்" – பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

அச்சமின்றி, ஒன்றிணைந்து அனைத்து அநீதிகளையும் எதிர்க்க, கிறிஸ்தவர்கள் முன்வர வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" (உரோமையர் 12:21) என்ற தலைப்பில், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, மேய்ப்புப்பணி மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சனவரி 26 முதல் 28 முடிய, மணிலாவில் நடைபெற்ற 118வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில், ஆயர்கள் வெளியிட்டுள்ள இம்மடல், சனவரி 27, ஞாயிறன்று ஜோலோ பேராலயத்தில் நிகழ்ந்த தாக்குதலை நினைவுக்கூர்ந்து, வன்முறை என்ற தொடர் சங்கிலியை மக்கள் துடைக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

பிலிப்பீன்ஸ் மக்களிடம் காணப்படும் சக்தி, அவர்களிடம் விளங்கும் விசுவாசம் என்பதை, இம்மடலின் துவக்கத்தில் குறிப்பிடும் ஆயர்கள், கத்தோலிக்க விசுவாசத்தை விட்டு விலகி வாழ்பவர்கள், உண்மையான விசுவாசத்துடன் வாழ்பவர்களை கேலி செய்வது பெரும் வேதனையை தருகிறது என்று கூறியுள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிராக, அரசு தீவிர முயற்சிகள் எடுப்பதை, தலத்திருஅவை எதிர்க்கவில்லை என்ற தெளிவை இம்மடலில் குறிப்பிடும் ஆயர்கள், அரசு எடுக்கும் முயற்சிகளில், பெரும்பாலும், வறியோர் பலர், மிகச் சிறிய சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்படுவதையே தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளனர்.

தீமையை நன்மையால் வெல்லவேண்டும் என்பதை இம்மடலின் இறுதியில் கூறும் ஆயர்கள், அச்சமின்றி, ஒன்றிணைந்து, அனைத்து அநீதிகளையும் எதிர்க்க, கிறிஸ்தவர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தேவாவோ பேராயரும், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவருமான Romulo Valles அவர்கள், ஆயர்களின் சார்பாக, இம்மடலை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 16:14