தேடுதல்

பொகோட்டா தேசிய காவல்துறை பள்ளி தாக்குதல் பொகோட்டா தேசிய காவல்துறை பள்ளி தாக்குதல் 

பயங்கரவாதம், வன்முறை நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட..

எந்தவிதமான வன்முறைகளும், எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக் காணாது என்பது குறித்த விழிப்புணர்வு அவசியம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கொலம்பிய தேசிய காவல்துறை பள்ளியில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலையொட்டி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள  கொலம்பிய ஆயர் பேரவை, எல்லா விதமான பயங்கரவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை முழுவதுமாக புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கலந்துரையாடல், ஒப்புரவு மற்றும் சமூக நீதி வழியாக, அமைதியைத் தொடர்ந்து தேடுமாறு, கண்ணீரோடு விண்ணப்பிக்கின்றோம் என, கொலம்பிய ஆயர்கள் சார்பாக, ஆயர் பேரவை தலைவர், Villavicencio பேராயர் Oscar Urbina Ortega அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

கொலம்பிய தேசிய காவல்துறை, இதில் பலியானவர்களின் குடும்பங்கள் ஆகியோருடன் ஆயர்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், பேராயர் Urbina Ortega.

இத்தாக்குதலையொட்டி, கொலம்பிய ஆயர் பேரவை செயலர் ஆயர் Elkin Fernando Álvarez Botero அவர்கள், பீதேஸ் செய்திக்கு அனுப்பிய குறிப்பில், நாட்டின் அமைதி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு திருஅவை அழைப்பு விடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான வன்முறைகளும், எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக் காணாது என்பது குறித்த விழிப்புணர்வு அவசியம் எனவும், வன்முறைகள் முழுவதுமாகக் கைவிடப்பட வேண்டும் எனவும், ஆயர் Álvarez Botero அவர்கள் கூறியுள்ளார். (Zenit)

கொலம்பியாவில், 1958ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில், ஏறக்குறைய, இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் என, தேசிய வரலாற்று நினைவு மையம் கணக்கிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:38