தேடுதல்

திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்தியகால மேற்குலகில் திருஅவை பகுதி2

மத்திய காலம் முழுவதும், பொது மக்கள் அதிகம் கல்விகற்கவில்லை என்பதால், அரசு நிர்வாகத்திற்கு, அரசர்கள், ஆயர்களையும், பேராயர்களையும் சார்ந்து இருந்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில், திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்களின் தலைமைப் பணிக் காலத்தில் (8,சன.1198-16,ஜூலை,1216) மேற்குலகில், ஏறத்தாழ ஏழு கோடி கத்தோலிக்கர் இருந்தனர். இவர்களின் ஆன்மீக மற்றும் பொருளாதாரத் தேவைகளை திருஅவை கவனித்து வந்தது. மேற்குலக கிறிஸ்தவம், நானூறு மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆயர்கள் அல்லது பேராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஆயர்களும், பேராயர்களும், திருஅவை சட்டப்படி திருத்தந்தைக்குப் பணிந்து நடக்க வேண்டியவர்களாய் இருந்தாலும், இவர்கள் பல நேரங்களில் அரசர்களின் கையாள்களாகவே இருந்தனர். இவர்கள், பெருமளவு நிலங்களைக் கொண்டிருந்து,  நிலப்பண்ணையாளர்களாக இருந்தது மட்டுமன்றி, நீதிபதிகளாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தனர். ஆயரோ அல்லது பேராயரோ, மறைமாவட்டத்திற்குத் தலைவராக இருந்தது மட்டுமின்றி, அந்தந்தப் பகுதியில் மிகவும் அதிகாரமிக்க குடும்பங்களுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்தனர். அத்துடன் இவர்களின் நிர்வாகத் திறமைகள் அல்லது, பொது மக்களுக்கு இவர்கள் ஆற்றும் சிறந்த பணிகளுக்காக, அரசில் உயர் பதவிகளும் கொடுக்கப்பட்டனர்.

மத்திய காலம் முழுவதும், பொது மக்கள் அவ்வளவாக கல்வியறிவு பெறாததால், அரசு நிர்வாகத்திற்கு, அரசர்கள், ஆயர்களையும், பேராயர்களையும் சார்ந்து இருந்தனர். அக்காலத்தில், அரசவையில் சிறப்பாகப் பணியாற்றும் பொதுநிலையினர், அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, மறைமாவட்டங்களுக்கு ஆயர்களாக நியமிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக, 14ம் நூற்றாண்டில் பணியாற்றிய ஆங்கிலேய ஆயர் Wykehamன் வில்லியம் என்பவர் பற்றிச் சொல்லலாம். இவர் அரசவையில், தலைமை எழுத்தாளர் என்ற பதவியை அவரே உருவாக்கி மிகத் திறமையாகப் பணியாற்றினார். இவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் ஒன்று இவ்வாறு கூறுகிறது. எல்லாமே இவர் வழியாகவே செய்யப்பட்டன. இவரின்றி எதுவுமே இயலாது. வில்லியம் என்பவர், 1367ம் ஆண்டில், வின்செஸ்டர் ஆயராகவும், அதேநேரம், அரசவையில், சான்சிலராகவும் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் ஆயர் என்பவர், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஆன்மீக நலன்களைக் கவனிப்பவராகச் செயல்பட்டார். மறைமாவட்டத்திலுள்ள துறவு நிறுவனங்களைப் பார்வையிட வேண்டியது ஆயரின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்தது. பொதுவாக ஆயர், பங்குத்தளங்களுக்குச் சென்று, அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் ஆலயங்களுக்கு வந்து தன்னிடம், தங்களின் பணிகள் பற்றி விவரிக்க வேண்டுமாம்.

மத்திய காலத்தில், பொதுநிலையினரின் அறநெறி வாழ்வு, திருமணம், உயில்கள் உட்பட பல விவகாரங்ளில் ஆயர்கள் நீதிபதிகளாகச் செயல்பட்டுள்ளனர். ஆண்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துவது, ஆயரின் முக்கிய ஆன்மீகக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. அக்காலத்தில் குருத்துவ உருவாக்கும் பயிற்சி நிறுவனங்கள் இல்லாததால், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட விரும்புகின்றவர்கள், மூன்று நாள்களுக்கு முன்னர், ஆயரிடம் சென்று தங்களின் ஆவல் பற்றி அறிவிக்க வேண்டும். ஆயரும், மூன்று நாள்கள் வாய்மொழி தேர்வு நடத்துவார். அவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருப்பதும், அதை எளிய முறையில் வெளிப்படுத்தவும் தெரிந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்படுவார்கள். ஆனால் அவர்களின் குடும்பச் சூழல்கள் மற்றும் உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், அவர்கள், 24 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது.  ஒவ்வொரு மறைமாவட்டமும், பங்குத்தளங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்தப் பொதுநிலை அருள்பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்த குருக்கள் அருளடையாளங்களை நிறைவேற்றுவார்கள். இவர்கள் ஆயர்களைவிட தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாய் இருப்பார்கள். ஆயராலோ, அல்லது பொதுநிலை விசுவாசிகளாலோ, பங்குத்தளத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படும் அருள்பணியாளர், இக்காலத்தைப் போலவே, விசுவாசிகளுக்கு, குறிப்பாக, ஞாயிறு தினங்களில் திருப்பலி மற்றும் அருளடையாளங்களை நிறைவேற்றினர். பங்குத்தளத்திலுள்ள ஏழைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டியது அவரின் சிறப்பு கடமையாக இருந்தது. நீண்ட அங்கியையும் அவர்கள் உடுத்தியிருப்பர்.

 மத்திய காலத்தில், திருப்பலி, அருள்பணியாளர்களின் வர்த்தகத் தொழிலாக மாறியது. பொதுநிலை விசுவாசிகள் பார்வையாளர்களாகவே இருந்தனர். மிகவும் கைவேலைப்பாடுகள் நிறைந்த, அழகுபடுத்தப்பட்ட திருப்பலி ஆடைகளை அணிந்தனர். மக்களுக்குப் புரியாத மொழியில் செபங்களை முணுமுணுத்தனர். திருப்பலி பீடத்திற்கும், மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி அமைக்கப்பட்டது. நாணயம் போன்ற வடிவில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புளியாத ரொட்டியை குருவானவர் திருப்பலியில் ஆசீர்வதித்தார். திருநற்கருணை வாங்குவதற்கு, துறவிகளும், அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் மட்டுமே அடிக்கடி அனுமதிக்கப்பட்டனர். திருப்பலியில் திருஅப்பத்தைத் தூக்கி காண்பிப்பதைப் பார்ப்பதற்காகவே பொதுநிலையினர் திருப்பலிக்கு வந்துள்ளனர். இதற்காக பொதுநிலையினர் ஒவ்வோர் ஆலயங்களுக்கும் சென்று வந்துள்ளனர். சில சமயங்களில், அருள்பணியாளர் திருஅப்பத்தை நீண்டநேரம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் பணமும் கொடுக்கப்பட்டதாம். அதை நன்றாகப் பார்ப்பதற்கு, சிலர், சட்டப்படி இடங்களைக்கூட தேர்வு செய்தார்களாம். திருநற்கருணையை மையப்படுத்தி பல்வேறு பக்தி முயற்சிகள் உருவாயின. ஜூன் மாதத்தில் சிறப்பிக்கப்படும் இயேசுவின் திருஉடல், திருஇரத்த பெருவிழாவில், அருள்பணியாளர் திருநற்கருணை பவனி நடத்தும்வேளையில், நகரினர் அனைவரும் கலந்துகொண்டனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2019, 11:14