CCBI ஆண்டுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய தலைவர்கள் CCBI ஆண்டுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய தலைவர்கள் 

இந்திய திருஅவை பணி குழுக்களின் தலைவர்கள் தேர்வு

சுற்றுச்சூழலுக்கென புதிதாக ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இம்மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை இடம்பெற்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டம், இரு புதிய பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளதோடு, பல்வேறு பணிக்குழுக்களுக்கு புதிய தலைவர்களையும் தேர்வுச் செய்துள்ளது.

கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப்பே நேரி ஃபெராவோ அவர்களை தலைவராகவும், சென்னை மயிலை பேராயர், ஜாரஜ் ஆன்டனிசாமி அவர்களை, மீண்டும் துணைத்தலைவராகவும், டெல்லி பேராயர், அனில் ஜோசப் தாமஸ் கூட்ஸ் அவர்களை, மீண்டும் பொதுச்செயலராகவும் தேர்வுச் செய்துள்ள இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, சுற்றுச் சூழலை மையப்படுத்திய ஒரு பணிக்குழுவையும், சிறிய கிறிஸ்தவக் குழுமங்களை மையப்படுத்திய ஒரு பணிக்குழுவையும், புதிதாக உருவாக்கியுள்ளது.

சுற்றுச் சூழல் பணிக்குழுவின் தலைவராக மும்பை துணை ஆயர், Alwyn D’Silva, சிறிய கிறிஸ்தவக் குழுமங்கள் பணிக்குழுவின் தலைவராக சிம்லா சண்டிகர் ஆயர், Ignatius Mascarenhas, இளையோர் பணிக்குழுத் தலைவராக கோட்டாறு ஆயர், நசரேன் சூசை, விவிலியப் பணிக்குழுத்தலைவராக சுல்தான்பேட் ஆயர், பீட்டர் அபீர், ஆகியோர் உட்பட 16 பணிக்குழுக்களின் தலைவர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.

இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் நிறைவுத் திருப்பலி, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில், 13ம் தேதி ஞாயிறன்று, பேரவையின் முன்னாள் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தலைமையில், தமிழில் நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2019, 15:58