தேடுதல்

நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும், மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.  மாற்கு நற்செய்தி 1:32 நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும், மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். மாற்கு நற்செய்தி 1:32 

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி புதுமைகள் – பலருக்கும் நலம்

கப்பர்நாகும் ஊரில், பேதுருவின் இல்லத்திற்குமுன், நோயுற்ற பலரையும், பேய்பிடித்த பலரையும் இயேசு குணப்படுத்தும் புதுமை புதுமையில் இன்றையத் தேடலை மேற்கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி புதுமைகள் – பலருக்கும் நலம்

'ஒத்தமை நற்செய்திகள்' என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள பொதுவான புதுமைகளில் நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் துவங்கினோம், இன்று, தொடர்கிறோம். ஒத்தமை நற்செய்திகளில் இடம்பெற்றுள்ள 12 பொதுவான புதுமைகளில், 10 புதுமைகள், நோயுற்றோருக்கு, இயேசு நலம் வழங்கும் புதுமைகள்.

நான்கு நற்செய்திகளிலும், கூறப்பட்டுள்ள குணமளிக்கும் புதுமைகளில், தனியொருவர், அல்லது இருவர் நலம் பெறும் நிகழ்வுகளையே நாம் அதிகம் காண்கிறோம். இரு நிகழ்வுகளில் மட்டுமே, இயேசு, ஒரு குழுவினருக்கு குணமளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தி 17ம் பிரிவில் (லூக்கா 17:11-19) பத்து தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் புதுமை இடம்பெற்றுள்ளது. அடுத்தது, கப்பர்நாகும் ஊரில், சீமோன் பேதுருவின் இல்லத்திற்குமுன், நோயுற்ற பலரையும், பேய்பிடித்த பலரையும் இயேசு குணப்படுத்தும் புதுமை கூறப்பட்டுள்ளது. இந்தப் புதுமையில் இன்றையத் தேடலை மேற்கொள்வோம்.

கப்பர்நாகும் ஊரின், தொழுகைக்கூடத்தில், தீய ஆவி பிடித்தவர் ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வு, மாற்கு நற்செய்தியின் முதல் புதுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இயேசு, சீமோன் பேதுருவின் வீட்டுக்குச் சென்று, அவரது மாமியாரைக் குணமாக்குகிறார். இப்புதுமை, ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் கூறப்பட்டுள்ள முதல் பொதுவானப் புதுமை. இப்புதுமையை நாம் கடந்தவாரம் சிந்தித்தோம். இப்புதுமையைத் தொடர்ந்து, இயேசு, ஊரிலிருந்த பலருக்கு குணமளித்தது, இரண்டாவது பொதுவானப் புதுமை. மாற்கு நற்செய்தியில் இப்புதுமையின் அறிமுக வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன:

மாற்கு 1:32-34

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில், நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும், மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற புதுமையும், பேதுருவின் மாமியார் குணமான புதுமையும் அவ்வூரில் காட்டுத் தீ போல பரவியிருக்க வேண்டும். எனவே, அந்த ஊர் மக்கள், நோயுற்றோரையும், தீய ஆவி பிடித்தோரையும் இயேசுவிடம் கொணர்ந்தனர்.

தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற புதுமையும், பேதுருவின் மாமியார் குணமான புதுமையும், ஓய்வுநாள் விதிகளை மீறி நிகழ்ந்த புதுமைகள். ஆனால், இன்று நாம் சிந்திக்கும் புதுமையோ, ஓய்வுநாள் முடிந்தபின் நிகழ்ந்தது என்பதை ஆழமாகச் சிந்திக்கும்போது, இப்புதுமையில் பங்கேற்ற மக்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

நோயுற்ற ஒருவரோ, பேய்பிடித்த ஒருவரோ தங்கள் குடும்பத்தில் இருந்ததால், குடும்பத்தினர் அனைவரும், இறைவனின் சாபத்தைப் பெற்றவர்கள் என்று, ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், இம்மக்கள். ஏற்கனவே, தாங்கள் இறைவனின் சாபத்தைப் பெற்றதாக எண்ணிக்கொண்டிருக்கும் இம்மக்கள், ஓய்வுநாள் விதிகளை மீறி, மேலும் இறைவனின் சாபத்தைப் பெறுவதற்கு அஞ்சினர். எனவே, மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில், ஓய்வுநாள் முடிவுற்றதை உணர்ந்து, இவர்கள், நோயுற்றோரை இயேசுவிடம் அழைத்துச் சென்றனர்.

மெத்தடிஸ்ட் சபையைச் சேர்ந்த புரூஸ் லீ என்ற போதகர், இயேசுவைத் தேடிச் சென்ற இம்மக்களை, இரு பிரிவினராகச் சித்திரித்துள்ளார். ஒரு குழுவினரை 'கொண்டு வந்தவர்கள்' என்றும், மற்றொரு குழுவினரை 'பார்க்க வந்தவர்கள்' என்றும், புரூஸ் லீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள் என்ற வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள 'கொண்டு வருதல்' என்பதைச் சுட்டிக்காட்டும் கிரேக்கச் சொல்லுக்கு, 'பின் தொடர்ந்து வருதல்', மற்றும், 'சுமந்து வருதல்' என்ற இரு வேறு பொருள்கள் உண்டு என்று, புரூஸ் லீ அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

இயேசு, கப்பர்நாகும் ஊரில் நுழைந்தது முதல், அவரைக் காணும் ஆவலில், அவரைத் தொடர்ந்து வந்தவர்கள், அக்கூட்டத்தில் இருந்தனர். அவர்கள், இயேசுவை, தொழுகைக்கூடத்தில் சந்தித்தபோது, "அவருடைய போதனையைக் குறித்து ... வியப்பில் ஆழ்ந்தார்கள்" (மாற்கு 1:22). இப்போதனையைத் தொடர்ந்து, தீய ஆவி பிடித்த ஒருவரை, இயேசு குணமாக்கியதை இம்மக்கள் கண்டதால், அவர்கள் நம்பிக்கை இன்னும் ஆழப்பட்டது.

அப்புதுமை நிகழ்ந்தபோது, அவர்கள், தங்கள் இல்லங்களில், நோயுற்று, பேய்பிடித்து இருந்தோரை எண்ணிப் பார்த்திருப்பர். அவர்களை இயேசுவிடம் கொண்டுவர அவர்கள் தீர்மானம் செய்திருப்பர். எனவே, ஒய்வு நாள் முடிந்த வேளையில், இயேசு, பேதுருவின் வீட்டில் இருந்ததை அறிந்து, நோயுற்றவரையும், பேய்பிடித்தவரையும், அவரிடம் கொண்டு வந்து சேர்த்தனர், இம்மக்கள்.

'கொண்டுவருதல்' என்ற இச்சொல்லுக்கு, 'சுமந்து வருதல்' என்ற மற்றொரு பொருளும் உண்டு. நோயுற்றதாலும், பேய் பிடித்ததாலும், உடலால் தளர்ந்து, உள்ளத்தால் இறைவனை விட்டு விலகி வாழ்ந்த தங்கள் உறவுகளை, நண்பர்களை, இயேசுவிடம் 'சுமந்துவரும்' பணியை இம்மக்கள் ஆற்றினர்.

நோயுற்றதால், பேய்பிடித்ததால் நொறுங்கிப் போயிருக்கும் நம் உறவினர்களை, நண்பர்களை, இயேசுவிடம் சுமந்து செல்வது நமது கடமை. இதை, திருத்தூதர் புனித பவுல், நமக்கு ஓர் அன்புக் கட்டளையாகத் தருகிறார்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6:2

ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

இனி, பேதுருவின் இல்லத்திற்குமுன் கூடியிருந்த கூட்டத்தில், 'பார்க்க வந்தவர்கள்' என்ற குழுவின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது என்ற இறைவாக்கியம், இயேசுவைப் ‘பார்க்க வந்திருந்த’ மற்றொரு குழுவினரை அடையாளம் காட்டுகிறது என்று, போதகர் புரூஸ் லீ அவர்கள் கூறியுள்ளார். இந்த இறைவாக்கியம், இன்னும் சில ஆங்கில மொழிபெயர்ப்புக்களில், நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் இதைக் காண்பதற்கு கூடியிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இயேசு கப்பர்நாகும் ஊருக்கு வந்துள்ளார் என்பதை அறிந்து, அவரைக் காண, தொழுகைக்கூடத்தில் கூடிவந்த கூட்டத்தில், அவரது போதனைகளைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்ததோடு, அவர் பேய்பிடித்தவரை நலமாக்கியத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தோர், மாலையில், இயேசுவிடம் மற்றவர்களை அழைத்துச் சென்றனர். அதே தொழுகைக்கூடத்தில், இயேசுவின் போதனைகளைக் கேட்டு, கோபம் கொண்டவர்களும் இருந்திருப்பர். கூடுதலாக, இயேசு, பேய்பிடித்த ஒருவரை, ஓய்வுநாளில் குணமாக்கியது, அவர்கள் கோபத்தை மேலும் வளர்த்திருக்கும். இது போதாதென்று, இயேசு, பேதுருவின் வீட்டில், மீண்டும் ஒரு புதுமையை, ஓய்வுநாளன்று செய்தார் என்பதை அவர்கள் அறிந்தபோது, கோபமும், பொறாமையும் கொழுந்துவிட்டு எரிந்திருக்கும்.

இத்தகைய மனநிலையில் இருந்த அவர்கள், மாலையில், இயேசுவைத் தேடி மக்கள் செல்கின்றனர் என்பதை அறிந்து, தங்கள் நண்பர்களைத் திரட்டிக்கொண்டு அங்கும் சென்றிருப்பர். இயேசுவின் புகழ் வளராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று எண்ணியபடியே அவர்கள் அங்கு சென்றிருப்பர். இவர்களுடன், இன்னும் பலர், இயேசுவைப் பற்றி அரைகுறையாகக் கேள்விப்பட்டு, அவர் என்னதான் செய்கிறார் என்பதைக் காணும் ஆவலில் அங்கு கூடி வந்திருப்பர்.

பேதுரு இல்லத்தின் முன் கூடியிருந்த அக்கூட்டத்தில், 'கொண்டு வந்தவர்கள்', 'பார்க்க வந்தவர்கள்' என்ற இரு பிரிவினர், வெவ்வேறு மனநிலையோடு வந்திருந்தாலும், அவர்கள் கொண்டிருந்த மனநிலை, இயேசுவின் புதுமைகளைத் தடை செய்யவில்லை. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார் என்று, நற்செய்தியாளர் மாற்கு, இப்புதுமையை நிறைவு செய்துள்ளார். அவ்விரு குழுவினரிடம், இயேசுவின் புதுமைகள் உருவாக்கியத் தாக்கம் எவ்வகையில் இருந்திருக்கும் என்பதை, போதகர் புரூஸ் லீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நோயுற்றோரையும், பேய்பிடித்தவர்களையும் இயேசுவிடம் 'கொண்டு வந்தவர்கள்', மீண்டும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றபோது, இயேசுவை, தங்கள் நினைவுகளில், உள்ளங்களில் சுமந்து சென்றிருப்பர் என்பதை உணரலாம்.

இதற்கு மாறாக, இயேசுவை வேடிக்கைப் பார்க்கும், அல்லது, அவரிடம் குறை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் 'பார்க்க வந்தவர்கள்', தங்கள் உள்ளங்களில் பெரும் மாற்றங்கள் ஏதுமின்றி, திரும்பிச் சென்றிருப்பர், அல்லது, இயேசுவின் மீது கூடுதல் வெறுப்புணர்வை வளர்த்திருப்பர்.

நாம் எத்தகையவர்கள் என்று ஆய்வு செய்வோம். இயேசுவிடம் மற்றவர்களைக் கொண்டுவந்து, மீண்டும் வீடு திரும்பும்போது இயேசுவை நம் உள்ளங்களில் சுமந்து செல்கிறோமா? அல்லது, இயேசுவை வேடிக்கைப் பார்த்துவிட்டு, அடுத்த வேடிக்கையைத் தேடிச் சென்று விடுகிறோமா?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2019, 14:41