தேடுதல்

கிறிஸ்துவின் திருமுழுக்கு காட்சி - ஓவியர் Francesco Albani உருவாக்கியது கிறிஸ்துவின் திருமுழுக்கு காட்சி - ஓவியர் Francesco Albani உருவாக்கியது  

ஆண்டவரின் திருமுழுக்கு ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." விண்ணகத்தந்தையாம் இறைவன், உள்ளப் பூரிப்புடன், இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஆண்டவரின் திருமுழுக்கு - ஞாயிறு சிந்தனை

இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்களாகிய நாம், பொங்கல் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். இறைவனின் கருணை, இயற்கை வளம், மனித உழைப்பு, குறிப்பாக, விவசாயிகளின் கடினமான உழைப்பு ஆகிய அனைத்தும் இணைந்ததால், நாம் அடைந்துள்ள கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது. இந்த அறுவடைத் திருநாள், உயர்வான பல எண்ணங்களால் நம் மனங்களை நிறைத்தாலும், ஒரு சில நெருடல்களையும் உருவாக்குகின்றது.

கடந்த சில ஆண்டுகளாய், தை மாதத்திற்கு முந்தைய மாதங்களில் 'கஜ' புயல், 'தானே' புயல், 'வார்தா' புயல், போன்ற இயற்கைப் பேரிடர்கள் தமிழகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. அவை போதாதென்று, ‘ஸ்டெர்லைட்’, கூடங்குளம், 'ஹைட்ரோ-கார்பன்' பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவாக்கிவரும் கூடுதல் கொடுமைகள், தமிழகத்தைச் சிதைத்து வந்துள்ளன.

இயற்கைப் பேரிடர்களால் பயிர்களை இழந்து தவிக்கும் பல்லாயிரம் உழவர்களுக்கு, இறைவன் நல்வழி காட்டவேண்டுமென்று செபிப்போம். புயல்கள் நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட விளைச்சலை ஈடுசெய்ய, நம் உள்ளங்களில், அன்பு, உதவி, உறவு என்ற பயிர்களை இறைவன் வளர்த்து, இந்த அறுவடைத் திருநாளை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றைய நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

மனித குலத்தை வேதனையிலும், வெட்கத்திலும் தலைகுனிய வைக்கும் வரலாற்றுக் காயங்களில் ஒன்று, ஹிட்லரின் கொடுமைகளுக்குச் சிகரமாக விளங்கிய நாத்சி வதை முகாம்கள். அந்த வதை முகாம்களிலிருந்து உயிரோடு வெளியேறியவர்களில் பலர், தங்கள் வாழ்வின் மீதி நாட்களை, நடைப்பிணங்களாக வாழ்ந்தனர். மிகச் சிலரே, அந்த வதை முகாம்களிலிருந்து வெளியேறியபின், உடலளவில் நொறுங்கிப் போயிருந்தாலும், உள்ளத்தளவில் போதுமான நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் பிராங்கல் (Viktor Frankl) என்ற மேதை.

புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும், மனநல மருத்துவராகவும் வாழ்ந்த விக்டர் பிராங்கல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவங்களையும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக வெளிவர, தனக்கு உதவியாக இருந்த உண்மைகளையும் தொகுத்து, Man's Search for Meaning, அதாவது, "அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்" என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். Nevertheless, Say "Yes" to Life: A Psychologist Experiences the Concentration Camp, அதாவது, "எப்படியிருந்தாலும், வாழ்வுக்கு 'ஆம்' என்று சொல்: வதை முகாமில் ஒரு மனநல நிபுணரின் அனுபவங்கள்" என்பதே, 1946ம் ஆண்டு வெளியான இந்நூலுக்கு விக்டர் அவர்கள் முதலில் கொடுத்திருந்த தலைப்பு.

தன்னுடன், வதை முகாமில், இருந்தவர்களில் பலர், நச்சுவாயுச் சூளைகளில் உயிரிழந்தனர். இன்னும் பலர், அந்த வாயுச் சூளைகளுக்குச் செல்வதற்கு முன்னரே, நம்பிக்கையுழந்து, நடைப்பிணங்களாக வலம் வந்தனர் என்று விக்டர் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த நடைப்பிணங்கள் நடுவில், தான், உயிரோடும், ஓரளவு உள்ள நலத்தோடும் வெளியேறியதற்கு இரு காரணங்கள் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

அவ்விரு காரணங்களில் ஒன்று, அவரது மனைவி, அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்ற உணர்வு. மற்றொன்று, தான் எழுதி முடித்திருந்த ஒரு புதிய நூலின் கைப்பிரதியை, தன் கண்முன்னே நாத்சி படையினர் அழித்துவிட்டதால், அந்நூலை மீண்டும் எப்படியாவது எழுதி முடிக்கவேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவல் என்று, விக்டர் அவர்கள் தன் நூலில் கூறியுள்ளார். அந்த வதை முகாமில், ஒவ்வொரு நாளும், விக்டர் பிராங்கல் அவர்கள், கற்பனையில் தன் அன்பு மனைவியோடு பேசி வந்தார். அந்த முகாமில், ஆங்காங்கே கிடைத்த காகிதத் துண்டுகளில், தான் எழுதப்போகும் நூலுக்குத் தேவையான குறிப்புக்களை எழுதிவந்தார்.

சூழ்நிலை எவ்வளவுதான் கொடூரமாக இருந்தாலும், இரு காரணிகள், மனிதர்களை வாழவைக்கும் சக்தி கொண்டவை. தன்னை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வும், தான் வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன என்ற தெளிவும், ஒருவரது வாழ்வை உந்தித்தள்ளும் சக்திகள். இத்தகைய சக்திகளை இயேசு உணர்ந்த நிகழ்வை இந்த ஞாயிறு நாம் சிந்திக்க வந்துள்ளோம். அதுதான், யோர்தான் நதியில் இயேசுவுக்கு ஏற்பட்ட திருமுழுக்கு அனுபவம். "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக்கா 3: 22) என்று இயேசு, தன் திருமுழுக்கின்போது கேட்ட அந்த சக்திமிகுந்த சொற்கள், அவரை, கல்வாரிப் பலிவரை உறுதியாக அழைத்துச் சென்றன.

பெற்றோரின் அன்பு ஒருவரை எவ்வளவு தூரம் சாதிக்கவைக்கும் என்பதைக் கூறும் பல கதைகளில் ஒரு கதை இது.

இளைஞன் அலெக்ஸ், தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவரிடையிலும் ஆழமான, அழகான உறவு இருந்தது. அலெக்ஸ், கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல், அந்த விளையாட்டிற்கு ஏற்றதுபோல் வலிமை மிக்கதாய் இல்லை. இருந்தாலும், அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, பயிற்சியாளர், கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் அலெக்ஸுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவன் ஓரத்திலிருந்து, தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பான். தன் மகன் அலெக்ஸ் களமிறங்கி விளையாடவில்லையெனினும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும், அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.

ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும், வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், அலெக்ஸையும் சேர்த்து. போட்டிக்கு முந்தின நாள், அலெக்ஸின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர், அலெக்ஸை அணைத்து, ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். போட்டியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டியில், அலெக்ஸின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின்போது அலெக்ஸ் திரும்பிவருவதை, குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து, விளையாட வந்திருந்தான், அலெக்ஸ். கால்பந்தாட்டத்தின் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத்திடலுக்கு வந்தது, அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. தந்தையைப் புதைத்த அன்றே அவன் விளையாட வந்திருந்ததை, அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

திடலுக்கு வந்த அலெக்ஸ், பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவுசெய்து என்னை விளையாட அனுமதியுங்கள்" என்று கண்ணீரோடு கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக்கொண்டிருந்தச் சூழலில், இவனை விளையாட அனுமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் தயங்கினார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது, இந்த இளைஞனாவது திருப்தி அடையட்டுமே என்ற எண்ணத்தில், அனுமதி தந்தார்.

இரண்டாவது பாதியில், அலெக்ஸின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அலெக்ஸைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்தபின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.

அலெக்ஸ் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா ஒவ்வொரு போட்டிக்கும் வந்து அமர்ந்திருந்தது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வைத்திறன் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். அலெக்ஸ் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்குப் பார்வைத்திறன் கிடையாது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து, என்னை உற்சாகப்படுத்தினார். இன்று, இந்த ஆட்டத்தைத்தான், முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். நான் விளையாடுவதை, அவர், முதல்முதலாகப் பார்க்கிறார் என்ற எண்ணமே, என் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்தது. இதுவரை எனக்காக மட்டுமே விளையாடிவந்த நான், இன்று, அவருக்காக விளையாடினேன்" என்று, அலெக்ஸ் சொல்லச் சொல்ல, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது... அதில், ஆனந்தக் கண்ணீரும் கலந்திருந்தது.

புறக்கண்களால் பார்க்கமுடியாத ஒரு தந்தை, தன் மகனை, அவனது கனவிலும், திறமைகளிலும் வளர்த்த கதை இது.

புறக்கண்கொண்டு மனிதர்களால் பார்க்கமுடியாத விண்ணகத் தந்தை, தன் மகன் இயேசுவின் கனவுகளைத் துவக்கிவைத்த ஒரு நிகழ்வை, இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. தந்தையாம் இறைவனின் அன்பு தனக்கு உள்ளது என்ற உறுதியாலும், இவ்வுலகில் தான் ஆற்றவேண்டிய பணிகள் உள்ளன என்ற தாகத்தாலும் தூண்டப்பட்டு, இயேசு தன் பணி வாழ்வைத் துவங்கும் நிகழ்வே, அவரது திருமுழுக்கு நிகழ்வு. தன் வாழ்வையும், பணியையும் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்த இயேசு, தன் முதல் அடியை, தண்ணீரில், அதுவும், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரில் எடுத்துவைத்தார். நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம் இது.

ஓடும் நீரில் நிற்கும்போது, நம் பாதங்களுக்கடியிலிருந்து பூமி நழுவிச் செல்வதைப் போன்ற உணர்வு எழும். இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற, நிலைகுலைந்த ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை, யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில், உயிர்கள் வாழவும், வளரவும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும், ஓடும் நீரைப்போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தாரோ என்று எண்ணிப் பார்க்கலாம்.

இயேசு, தன் திருமுழுக்கை, யோர்தான் நதியில் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவும், மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வமும், விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்வித்தன.

தன் மகனோ, மகளோ, அர்த்தமுள்ள, பெருமைக்குரியச் செயல்களைச் செய்யும்போது, அவர்களை அரவணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த அரவணைப்பையும், ஆசீரையும் அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்ட இயேசுவைக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் பொங்க, தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்: "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."

தந்தையாம் இறைவன் பேசியதாக நற்செய்திகளில் மும்முறை மட்டுமே கூறப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவது நிகழ்வு, யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வு. இதற்கு அடுத்ததாக, இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்விலும், இறுதி இரவுணவின் வேளையிலும் (யோவான் 12:28) தந்தையாம் இறைவன் பேசிய சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விண்ணகத்தந்தையாம் இறைவன், உள்ளப் பூரிப்புடன், இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். அன்னையும் தந்தையுமான இறைவன், புலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், நம்மை வாரி அணைத்து, உச்சி முகந்து, இந்த அன்பு சொற்களை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லட்டும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2019, 14:56