ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானில், தேவ நிந்தனை குற்றம் புரிந்ததாக, தவறாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆசியா பீபி என்ற பெண்மணியை, அந்நாட்டு உச்ச நீதி மன்றம், முற்றிலும் விடுதலை செய்துள்ளது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெற்ற வெற்றியாகும் என்று, Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ அமைப்பு கூறியுள்ளது.
அடிப்படைவாத குழுக்களின் வன்முறைகளையும் மீறி, உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்க, அந்நாட்டில் வாழும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மதத் தலைவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது, பெரும் நம்பிக்கை தரும் செய்தி என்று இவ்வமைப்பின் அறிக்கை மேலும் கூறுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு சிறைகளில், தேவ நிந்தனை குற்றம் புரிந்ததாக 187 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் குற்றமற்றவர்கள் என்றும், பாகிஸ்தான் ஆயர் பேரவை கூறியுள்ளதை, Aid to the Church in Need அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் இந்த பிரச்சனைக்கு சட்டங்கள் வழியாக மட்டும் தீர்வு காண முடியாது என்றும், மக்களின் மனநிலையில், குறிப்பாக, அங்குள்ள இளையோரின் மனநிலையில், சகிப்புத் தன்மையையும், உரையாடலையும் வளர்க்கும் முயற்சிகள், கல்வி கூடங்கள் வழியே நடைபெற வேண்டும் என்றும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.