ஆசியா பீபியின் புகைப்படத்துடன் அவர் கணவர் Ashiq Masih ஆசியா பீபியின் புகைப்படத்துடன் அவர் கணவர் Ashiq Masih 

ஆசியா பீபியின் விடுதலை சமய சுதந்திரத்திற்கு வெற்றி

ஆசியா பீபி அவர்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, பாகிஸ்தான், அடிப்படைவாதத்திற்கு அடிபணிய விரும்பவில்லை என விரும்புவதைக் காட்டுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில், மரண தண்டனை குற்றவாளியாக, ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ள, கிறிஸ்தவ தாய் ஆசிய பீபி அவர்கள், குற்றச்சாட்டினின்று விடுதலை பெற்றுள்ளது, சமய சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று, தன் மகிழ்வை வெளியிட்டுள்ளனர், பன்னாட்டு கிறிஸ்தவர்கள்.

2018ம் ஆண்டு நவம்பரில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை சனவரி 29, இச்செவ்வாயன்று நிராகரித்துள்ள பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம், ஆசியா பீபி அவர்கள், பாகிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கு எவ்வித தடையும் இல்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பு குறித்து தனது மகிழ்வை வெளியிட்டுள்ள, Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு, இது சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், அடிப்படைவாதத்திற்கு அடிபணிய விரும்பவில்லை என பாகிஸ்தான் விரும்புவதைக் காட்டுகின்றது என்றும் கூறியுள்ளது. 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இச்செவ்வாயன்று வெளியிட்ட தீர்ப்பில், ஆசியா பீபி அவர்கள், நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசியா பீபி அவர்களின் மகள்களுக்கு கானடா நாடு அடைக்கலம் அளித்துள்ளவேளை, பாதுகாப்பு கருதி, ஆசியா பீபி அவர்கள், தனது கணவர் Ashiq Masih அவர்களுடன் இரகசியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, பாகிஸ்தான் இஸ்லாம் தீவிரவாதிகள், ஆசியா பீபி அவர்கள் இறக்கவேண்டுமென விரும்புகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஆசியா பீபி அவர்கள், இறைவாக்கினர் முகமது அவர்களை அவமதித்தார் என, அவர் வீட்டுக்கு அருகில் வாழ்ந்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டு, 2009ம் ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார். தேசிய மற்றும் பன்னாட்டு மனித உரிமை குழுக்களின் கடும் எதிர்ப்பையும் புறக்கணித்து, அதற்கு ஓராண்டு சென்று, அவர் மரண தண்டனை தீர்ப்பிடப்படப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2019, 15:09