இறைவனின் படைப்பில் மரங்களும், செடிகளும் இறைவனின் படைப்பில் மரங்களும், செடிகளும் 

பூமியில் புதுமை – இயற்கை மீது திருத்தந்தையரின் அக்கறை

"இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலில் புனிதத் திருத்தந்தையர் 23ம் ஜான், ஆறாம் பவுல், மற்றும், 2ம் ஜான்பால், மற்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரின் கூற்றுகளை, திருத்தந்தை பிரான்சிஸ், நினைவுகூர்ந்துள்ளார்:

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

"இறைவா உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணுதல்" என்ற தன் திருமடல் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட அனைவருடனும், பேச விழைவதாகக் கூறியுள்ளார். இத்திருமடலின் அறிமுகப்பகுதியில், "எதுவும் இவ்வுலகில் நம்மை அலட்சியப்படுத்துவதில்லை" என்ற பிரிவில், தனக்குமுன் தலைமைப் பொறுப்பில் இருந்த புனிதத் திருத்தந்தையர் 23ம் ஜான், ஆறாம் பவுல், மற்றும், 2ம் ஜான்பால் ஆகியோரின் கூற்றுகளையும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கூற்றுகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நினைவுகூர்ந்துள்ளார்:

50 ஆண்டுகளுக்குமுன், இவ்வுலகம், அணு அழிவு ஆபத்தின் விளிம்பில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் எழுதிய ஒரு திருமடல், போரை நிராகரித்ததோடு நின்றுவிடாமல், அமைதிக்கு ஓர் ஆலோசனையையும் வழங்கியது. அவர் எழுதிய 'உலகில் அமைதி' (Pacem in Terris) என்ற அம்மடல், 'கத்தோலிக்க உலகிற்கு' மட்டுமன்றி, 'நல்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்' வழங்கப்பட்டது.

இப்போது, சுற்றுச்சூழல் சீரழிவு என்ற ஆபத்து நம்மை நேருக்கு நேர் பார்க்கும் வேளையில், இந்தக் கோளத்தில் வாழும் அனைத்து மனிதரிடமும் நான் பேச விழைகிறேன்... நமது பொதுவான இல்லத்தைக் குறித்து அனைத்து மனிதரோடும் ஓர் உரையாடலை மேற்கொள்ள விழைகிறேன்.

'உலகில் அமைதி' திருமடல் வெளியாகி எட்டு ஆண்டுகள் சென்று, 1971ம் ஆண்டு, கட்டுப்பாடற்ற மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கவலை வெளியிட்டார் என்று கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்கு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய ஓர் உரையிலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்:

"இயற்கையைச் சீரழிப்பதால், அதன் விளைவுகளுக்கு மனிதர்களே பலியாகி வருகின்றனர்... தற்போது நிகழ்ந்துவரும் பொருளாதார முன்னேற்றம், சமுதாய மற்றும் நன்னெறி முன்னேற்றங்களுடன் இணைந்து செல்லவில்லையெனில், அது மனிதருக்கு எதிரியாக மாறிவிடும்."

சுற்றுச்சூழல் பாதுகாப்பில், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் அதிக அக்கறை காட்டினார் என்று தன் திருமடலில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் வெளியிட்ட ஓர் எச்சரிக்கையையும், வேண்டுகோளையும் நினைவுறுத்தியுள்ளார்: "மனிதரின் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்காக, இயற்கைச் சூழலை விழுங்கிவரும் போக்கு தவறு... சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றம் மிகவும் தேவை. மனிதரின் வாழ்வு முறை, பொருள்களின் உற்பத்தி, மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்து நிலைகளிலும் ஆழமான மாற்றங்கள் உருவாகவேண்டும்."

மனிதர்கள் பொறுப்பற்ற முறையில் வாழ்வதன் விளைவே, சுற்றுச்சூழல் சீரழிவு என்பதை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார் என்பதை, தன் திருமடலில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நம்மைவிட உயர்ந்த உண்மைகள் இல்லை என்ற எண்ணத்தில், நம்மைத் தவிர வேறு எதையும் நாம் பார்க்கத் தவறும்போது, படைப்பு அனைத்தும் நம் சொத்து என்றும், நாமே அதன் முடிவு என்றும் தவறாக எண்ணி, இயற்கையைத் தவறாகப் பயன்படுத்தத் துவங்குகிறோம்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய சொற்களை, தன் திருமடலில் பதிவுசெய்துள்ளார். (இறைவா உமக்கே புகழ் - எண் 3-6)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2019, 14:51