12 வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போன இயேசுவை மரியாவும், யோசேப்பும் சந்தித்தல் 12 வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போன இயேசுவை மரியாவும், யோசேப்பும் சந்தித்தல் 

திருக்குடும்பத் திருவிழா - ஞாயிறு சிந்தனை

திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாறு நமக்குள் உருவாக்கும் எண்ணங்களையும், திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஒரு முக்கியப் பிரச்சனையையும், சிந்திப்போம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

301218 திருக்குடும்ப திருநாள் - ஞாயிறு சிந்தனை

"நேர்மறையாய் சிந்திப்பதால் விளையும் சக்தி" - ("The Power of Positive Thinking") என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர், நார்மன் வின்சென்ட் பீல் (Norman Vincent Peale)  என்ற மறைபோதகர். கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து இவர் எழுதியுள்ள ஓர் அழகிய உருவகம், இன்றைய நம் சிந்தனைகளைத் துவக்கி வைக்கிறது. "உலகத்தின் மீது வீசப்படும் ஒரு மந்திரக்கோல் போல் கிறிஸ்மஸ் விழா வருகிறது. இந்த மந்திரக்கோல் வீசப்பட்டதும், அனைத்தும், இன்னும் மென்மையாக, இன்னும் அழகாக, மாறிவிடுகின்றன" (“Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful.”) என்று வின்சென்ட் பீல் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் விழா என்ற மந்திரக்கோல் உருவாக்கும் மென்மை உணர்வுகளையும், அழகையும், உணரமுடியாத வகையில், நாம் கடந்துவந்துள்ள 2018ம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. நவம்பர் மாதம், தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயல், ஆகஸ்ட் மாதம், கேரளாவைத் தாக்கிய பெருமழை, வெள்ளம், டிசம்பர் மாதம் இலங்கையைச் சூழ்ந்த மழை, வெள்ளம் ஆகியவை, கிறிஸ்மஸ் விழாவின் மந்திரச் சக்தியைக் குறைத்துள்ளன என்பதை உணர்கிறோம்.

இயற்கைப் பேரிடர்கள் உருவாக்கும் அழிவுகள் போதாதென்று, மனிதர்கள், குறிப்பாக, மனசாட்சியற்ற அரசியல்வாதிகள் உருவாக்கும் அழிவுகள் உலகின் பல நாடுகளில், எளிய மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய்துள்ளன. இயற்கைச் சீற்றங்களானாலும் சரி, அரசியல் அராஜகங்களானாலும் சரி, இவற்றில் பெரிதும் பாதிக்கப்படுவது, குடும்பங்களே. கொண்டாட்டங்கள் என்றதும் கூடிவரும் கூட்டம், திண்டாட்டம் என்றதும் விலகிச் செல்வது பொதுவாக நிகழும் எதார்த்தம். கொண்டாட்டமாயினும், திண்டாட்டமாயினும் நமக்கு உறுதுணையாக நிற்பது, நம் குடும்பங்களே.

இந்த உண்மையை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடரும் இந்த விழாக்காலத்தில், குடும்பங்களைக் கொண்டாடவேண்டும் என்று அன்னையாம் திருஅவை விழைகிறார். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாட, அன்னையாம் திருஅவை நம்மை அழைக்கிறார்.

திருக்குடும்பத் திருவிழாவின் சிந்தனைகளை இரு பகுதிகளாக மேற்கொள்வோம். திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாறு நமக்குள் உருவாக்கும் எண்ணங்களை முதலில் பகிர்ந்து கொள்வோம். இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஒரு முக்கியப் பிரச்சனையையும், அது, நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் சிந்திப்போம்.

முதலில், இத்திருவிழாவின் வரலாறு... பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவறச் சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், இத்திருவிழா, திருஅவையின் வழிபாட்டு காலத்தில் இடம்பெற்றது. ஒரு சில ஆண்டுகளில், இத்திருவிழா, திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்த உலகப்போரினால், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கின. அக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது.

1962ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை, திருஅவை, மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், 60களில் நிலவிய உலகின் நிலை. முதலாம், மற்றும், இரண்டாம் உலகப் போர்களால், கட்டடங்கள் பல சிதைந்தது உண்மை. ஆனால், அதைவிட, அதிகமாகச் சிதைந்திருந்தன, குடும்பங்கள். வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த நிம்மதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச் சொன்னது, திருஅவை. அனைத்து குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டாக, திருக்குடும்பத்தை முன்னிறுத்திய திருஅவை, கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக, 1969ம் ஆண்டு அறிவித்தது.

திருக்குடும்பத் திருவிழாவன்று, அக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்சனை, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இயேசு, மரியா, யோசேப்பு என்ற மூன்று புனிதப் பிறவிகளால் உருவாக்கப்பட்ட திருக்குடும்பம், எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த்தென்று நாம் கற்பனை செய்துகொள்வதால், அவர்களை பீடமேற்றி விடுகிறோம். ஆனால், அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. இன்னும் சொல்லப்போனால், குழந்தை இயேசு பிறந்த்து முதல் பிரச்சனைகள், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். பெற்றோருடன் எருசலேம் கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத் தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 2: 41-52

நம் குடும்பங்களில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்வதைக் காண்கிறோம். இந்த மாற்றங்கள், பெரும்பாலும், உடல் சார்ந்த சவால்கள். அவற்றில் ஒன்று, அந்தத் தாய் தன் தூக்கத்தை இழக்க, அல்லது, மாற்றியமைக்க வேண்டிய சவால்.

அதே குழந்தை, ‘டீன் ஏஜ்’ (Teenage) என்றழைக்கப்படும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர் மீண்டும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சவால்கள், பெரும்பாலும், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் எழும், மனம் சார்ந்த சவால்களாக இருக்கும்.

நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல் வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை பல வழிகளில் உணர்த்துவார்கள். தங்களுக்குரிய சுதந்திரத்தையும், மரியாதையையும் மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, ‘டீன் ஏஜ்’ எனப்படும் பருவத்தில் காலடி வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து, ‘டீன் ஏஜ்’ பருவத்திற்கு வந்துவிட்டதை, நம் பிள்ளைகள் எப்படி நமக்கு உணர்த்துவர் என்பதை, Ernest Munachi என்ற அருள்பணியாளர் அழகாகக் கூறியுள்ளார்: "'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற 'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ, மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம் உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு ‘லேட்’டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம் கேட்கக்கூடாது என்பதை, நேரடியாகச் சொல்லாமல், தங்கள் நடத்தையினால், ‘டீன் ஏஜ்’ இளையோர் உணர்த்துவர். இத்தகைய மாற்றங்கள், பல நேரங்களில், பெற்றோருக்கு, பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.

அன்று, எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதும், வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர் இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை, கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச்செல்லும் வழக்கம், யூதர்கள் மத்தியில் இருந்தது. அதுவரை குழந்தையாக இருந்த அச்சிறுவன், இனி, தனித்து முடிவுகள் எடுக்கும் தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில், இப்பழக்கம் அமைந்தது.

வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த இயேசு, தன் சுதந்திரத்தை நிலைநாட்ட செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல், கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை எழுப்பலாம்.

கழுவித்துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம் பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக் காணாமல், பதைபதைத்துத் தேடிவரும், மரியாவும், யோசேப்பும், மூன்றாம் நாள், இயேசுவை, கோவிலில் சந்திக்கின்றனர். அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் நடுவே அமர்ந்து, அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில், அவர்களுக்கு மேலாக, விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர். அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு, சவால்களும் உண்டு. மரியா, தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ, அவர் அம்மா சொல்வதைப் பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

இயேசு, மரியாவுக்குச் சொன்ன பதில், அந்த அன்னையின் மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும், மற்றவருக்கு முன்னால், தன் மகன் அப்படிப் பேசியதால், அந்த அன்னையின் மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம் இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில், மரியா, கோபப்பட்டு, மேலும் ஏதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகியிருக்கும். குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள, பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது, அன்னை மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே!

மரியா, இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை; இருந்தாலும், அவற்றை, தன் மனதில், ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? “பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்… இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

திருவிழாவுக்குச் சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் நிகழ்வு, இன்றைய சமுதாயத்தில் நிகழும் ஒருசில கொடுமைகளை நினைவுக்குக் கொணர்கிறது. திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும் பெற்றோரையும், பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும் குழந்தைகளையும், நினைத்துப் பார்ப்போம். இவ்வாறு பிரிந்தவர்களை, இறைவன், மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம் காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப்பார்ப்போம். அவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த இயேசு, எருசலேம் என்ற நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார் என்பதும், ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது. கிராமங்களில், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மேற்படிப்பிற்கெனச் சென்று, பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு, பின்னர், அவர்களை, நகரம் என்ற அக்காட்டில் தொலைத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும் இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகள் வழியே, மீண்டும் தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என, திருக்குடும்பத்தின் இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.

இறுதியாக, நம் எண்ணங்கள், இந்தோனேசியாவை நோக்கித் திரும்புகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறன்று, திருக்குடும்பத் திருவிழா வந்தது. 2004ம் ஆண்டு, திருக்குடும்பத் திருவிழாவன்று, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகே, ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமியாக உருவெடுத்து, 2,27,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துச் சென்றது. பல இலட்சம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது.

இவ்வாண்டு, டிசம்பர் 22, சனிக்கிழமையன்று, அதேப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும், நிலச்சரிவும் உருவாக்கிய சுனாமியில், 400க்கும் அதிகமான உயிர்கள் பலியாயின. இன்னும் பல நூறு பேர் காயமுற்றுள்ளனர், அல்லது, காணாமற் போயுள்ளனர். இந்த இயற்கைப் பேரிடரால் சிதைந்துபோயிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும், திருக்குடும்பத்தின் ஆறுதலான அரவணைப்பில் ஒப்படைப்போம்.

புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் சிதைந்துபோகும் குடும்பங்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம். அதேபோல், கருத்து வேறுபாடுகளால், மனதளவில் உருவாகும் எரிமலை வெடிப்புகளாலும், சுனாமிகளாலும் சிதைந்துபோகும் உறவுகளையும், குடும்பங்களையும் இவ்வேளையில் இறைவனிடம் ஒப்படைப்போம், அக்குடும்பங்களில் அமைதியும், அன்பும் மீண்டும் உருவாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2018, 14:36