ஆஸ்திரியா நாட்டின் Obendorf என்ற ஊரில், Silent Night என்ற பாடல் உருவான சிற்றாலயம் ஆஸ்திரியா நாட்டின் Obendorf என்ற ஊரில், Silent Night என்ற பாடல் உருவான சிற்றாலயம் 

திருவருகைக் காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இவ்வுலகில் அமைதி உருவாகும் என்ற கனவுடன் பாடப்பட்டு வரும் 'அமைதியான இரவு' பாடல், தன் 200வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், இவ்வுலகில் அமைதி நிலவ, இறைவனிடம் மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

231218 திருவருகைக் காலம் 4 - ஞாயிறு சிந்தனை

‘கிறிஸ்மஸ்’விழாக் காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் பல பாடல்களில், அதிகம் புகழ்பெற்ற ஒரு பாடல், "அமைதியான இரவு" என்று துவங்கும், "Silent Night" என்ற பாடல். இப்பாடலுடன் தொடர்புடைய சில எண்ணங்கள், நம் சிந்தனைகளின் முதல் பகுதியாக அமைகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 24ம் தேதி இரவு, ஆஸ்திரியா நாட்டின் ஒபென்டோர்ஃப் (Obendorf) என்ற ஊரில், ஒரு சிற்றாலயத்திற்கு முன், மக்கள் கூடி வருவர். குறிப்பிட்ட நேரத்தில், அச்சிற்றாலயத்திற்கு முன் இருவர் வந்து நிற்பர். ஒருவர் 'கிட்டார்' இசைக்கருவியை மீட்ட, இருவரும் சேர்ந்து, "Silent Night" பாடலை, அது, முதன்முதலில் இயற்றப்பட்ட ஜெர்மன் மொழியில், "Stille Nacht, Heilige Nacht" என்று பாடுவர். அதைத் தொடர்ந்து, அங்கு குடியிருப்போர் அனைவரும் இணைந்து, அப்பாடலை, அவரவர் மொழிகளில் பாடுவர்.

இவ்வாண்டு, இந்நிகழ்வு, இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இப்பாடல் இயற்றப்பட்டு, முதல் முறையாக, ஒபென்டோர்ஃப் சிற்றாலயத்தில், 1818ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு பாடப்பட்டதால், இவ்வாண்டு, டிசம்பர் 24ம் தேதி, இப்பாடல், தன் 200வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

கடந்த 200 ஆண்டுகளாக, மக்களைக் கவர்ந்து வந்துள்ள இப்பாடல், 300க்கும் அதிகமான மொழிகளில் பாடப்பட்டு வருகிறது. 'அமைதியான இரவு, புனிதமான இரவு' என்ற அழகிய உருவகங்களுடன் துவங்கும் இப்பாடலின் வரிகளை எழுதியவர், 25 வயதான ஜோசப் மோர் (Josef Mohr) என்ற இளம் அருள்பணியாளர். இதற்கு இசை அமைத்தவர், 30 வயதான Franz Xaver Gruber என்ற ஆசிரியர்.

அருள்பணி மோர் அவர்கள், இப்பாடலை எழுதியதன் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லையெனினும், அவர் வாழ்ந்த காலத்தில், ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள், மற்றும் போர்கள் ஆகியவை, இப்பாடலை எழுத அவரைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் நடுவிலும், மனிதர்களால் உருவாக்கப்படும் போர்கள் நடுவிலும், நாம் இறைவனின் அமைதியைப் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், இப்பாடல், கடந்த 200 ஆண்டுகளாக, ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

அமைதி நிலவ வேண்டும் என்ற ஏக்கத்துடன் எழுப்பப்பட்டு வரும் இப்பாடல், ஏதோ ஒரு வழியில், உலக அமைதிக்கு வழி வகுத்துள்ளது என்பதற்கு, 1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு, ஒரு சான்றாக அமைந்துள்ளது.

1914ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் முதல் உலகப் போர் ஆரம்பமானது. அந்தப் போர் விரைவில் முடிந்து, வீரர்கள் எல்லாரும் கிறிஸ்மஸுக்கு வீடு திரும்புவர் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். ஆனால், உண்மை நிலை விரைவில் புரிய ஆரம்பித்தது. டிசம்பரிலும் போர் தொடர்ந்தது. போரை முற்றிலுமாக நிறுத்த, அல்லது குறைந்த பட்சம் தற்காலிகமாவது நிறுத்துவதற்குத் தேவையான முயற்சிகள் ஆரம்பமாயின. இந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்று கூறிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், போரில் ஈடுபட்டிருந்த நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும், டிசம்பர் 7ம் தேதி, விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். "விண்ணகத் தூதர்களின் பாடல்களை, கிறிஸ்மஸ் இரவில், இந்த உலகம் கேட்கவேண்டும். அதற்காகவெனினும், அந்த இரவில், துப்பாக்கிச் சப்தங்களை நிறுத்துங்கள்" என்று திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார்.

திருத்தந்தை மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு பயன் தந்தன. அதிகாரப் பூர்வமற்ற போர் நிறுத்தம், டிசம்பர் 24 காலையிலிருந்து கடைபிடிக்கப்பட்டது. அன்றிரவு, வழக்கத்திற்கும் அதிகமாக, குளிர் வாட்டியெடுத்தது. பிரித்தானியப் படைவீரர்கள், தாங்கள் தங்கியிருந்த பதுங்குக் குழிகளில் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்து, Silent Night என்ற கிறிஸ்மஸ் பாடலைப் பாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில், அருகிலிருந்த பதுங்குக் குழியிலிருந்து, ஜெர்மானிய வீர்கள், அதே பாடலை, "Stille Nacht, Heilige Nacht" என்று, ஜெர்மன் மொழியில் பாட ஆரம்பித்தனர்.

இப்பாடலை இருவேறு மொழிகளில் பாடியவாறு, ஜெர்மானிய, பிரித்தானியப் படைவீரர்கள், எரியும் மெழுகு திரிகளைக் கையிலேந்தி, பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறினர். தங்களிடம் இருந்த பிஸ்கட், ரொட்டி, சாக்லேட், பழங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து உண்டனர். ஒருவருக்கொருவர், வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர், மீண்டும் தங்கள் பதுங்குக் குழிகளுக்குத் திரும்பிச் சென்றனர். "நான் என் வாழ்வில் அனுபவித்த மிகச் சிறந்த கிறிஸ்மஸ் விருந்து இதுதான்" என்று, அவ்வீரர்களில் பலர், தங்கள் குடும்பத்தினருக்குக் கடிதங்கள் அனுப்பினர்.

1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி, கிறிஸ்மஸ் இரவில், Silent Night கிறிஸ்மஸ் பாடல், துப்பாக்கிச் சப்தங்களை மௌனமாக்கி, எதிரிகளை ஒருங்கிணைத்தது. நாம் வாழும் இன்றைய உலகில், பெரும் திருவிழாக் காலங்களிலும், துப்பாக்கிச் சப்தங்கள் தொடர்கின்றன. அதுவும், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட மக்கள் கூடிவந்த கோவில்களில், தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வுலகில் அமைதி உருவாகும் என்ற கனவுடன் பாடப்பட்டு வரும் 'அமைதியான இரவு' பாடல், தன் 200வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், இவ்வுலகம், அமைதியில் வாழ்வதற்குத் தேவையான அருளை, இன்று, மீண்டும் ஒருமுறை, இறைவனிடம் மன்றாடுவோம்.

நம் சிந்தனைகளின் இரண்டாம் பகுதியில், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வின்மீது நம் கவனத்தைத் திருப்புவோம். கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நேரத்தில், பல பங்குகளில், பள்ளிகளில், கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம். இந்நாடகங்களில், மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, முதல் காட்சி. மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, இரண்டாவது காட்சி. பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... காட்சிகள் தொடரும்.

அழகான இக்காட்சிகளில் நடிப்பவர்கள் எல்லாரும் குழந்தைகள் என்பதால், இரசிப்போம், சிரிப்போம். சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்மஸ் நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், நண்பர் ஒருவர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்ற கேள்வியை எழுப்பினார். நம்மைச் சிந்திக்கவைக்கும் கேள்வி இது.

முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கமும், அராஜகமும் பரவியிருந்தன. இந்த அடக்கு முறைக்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் வாழும் பெண்களே. பகலோ, இரவோ, எந்நேரத்திலும் இப்பெண்களுக்கு, படைவீர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா.

தன் சொந்த நாட்டிலேயே, இரவும், பகலும், சிறையில் அடைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியாவின் உள்ளத்தில் "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா, இறைவா?" என்ற வேதனை நிறைந்த கேள்வி விண்ணகத்தை நோக்கி எழுந்திருக்கவேண்டும். மரியா எழுப்பிவந்த வேண்டுதல்களுக்கு விடை வந்தது. எப்படிப்பட்ட விடை அது! மணமாகாத அவரை தாயாகுமாறு அழைத்தார் இறைவன்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கியத் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. மணமாகாமல் தாயாகும் நிலைக்கு, இறைவன் தந்த இவ்வழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்வதும், வலியச்சென்று, தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு! பெரும் போராட்டத்தின் இறுதியில், 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா.

அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினராகிய எலிசபெத்து கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தைப்பேறு இல்லாததால், ஊராரின் பழிச்சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து, வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக்கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார். இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 1: 39-45

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் மரியாவும், எலிசபெத்தும் சொல்லித்தரும் பாடங்கள் பல உள்ளன. இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்று வருகிறார்; இனியும் வருவார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஓர் அற்புத விழாவே, கிறிஸ்மஸ். இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் வேறுபட்ட வழிகளை, இவ்விரு பெண்களின் வாழ்வும் சித்திரிக்கிறது. எலிசபெத்தின் வாழ்வில், மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்ட இறைவன், மரியாவின் வாழ்வில் ஒரு புயலென நுழைந்தார். மிகத் தாமதமாகவோ, அல்லது, புயல் வேகத்திலோ, வாழ்வில் நிகழ்வுகள் குறுக்கிடும்போது, கேள்விகள் எழுகின்றன. ஏன் இவ்வாறு? ஏன் இப்போது? போன்ற கேள்விகள், மரியாவின் உள்ளத்திலும், எலிசபெத்தின் உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கவேண்டும்.

மரியா வானதூதரைச் சந்தித்தபோதும், மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோதும், ஒரு சில கேள்விகள், வெளிப்படையாகக் கேட்கப்பட்டன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. இவ்விரு பெண்களையும், கேள்விகள், கார் மேகங்களாகச் சூழ்ந்திருந்தாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை மழையில் அவர்கள் இருவரும் நனைந்தனர். கடவுளைக் கேள்விக் கணைகளால் துளைப்பதற்குப் பதில், கடவுளின் கருணை மழையில் நனைவது, மேலான ஒரு வழி. இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் இரண்டாவது பாடம்...

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" - லூக்கா 1: 42 என்று, எலிசபெத்து, மரியாவை வாழ்த்திய ஆசீர் மொழிகளையொத்த சொற்களால், நாம் தினமும் ஒருவர் ஒருவரை வாழ்த்தினால், ஆசீர்வதித்தால், இந்த பூமி நலன்களால் நிறையும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" "மவராசியா இரு" என்று வாழ்த்தும்போது, அந்த ஆசீர், கேட்பவரை நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது. மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம் இது.

2005ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் திருநற்கருணை ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில் தன் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வையும், திருநற்கருணை பவனியையும் இணைத்து, வழங்கிய அழகான எண்ணங்கள், நம் சிந்தனைகளை நிறைவு செய்கின்றன:

"இளம்பெண் மரியா, எலிசபெத்தைச் சந்திக்க மேற்கொண்ட பயணத்தை, வரலாற்றில் நிகழ்ந்த முதல் திருநற்கருணை பவனியாக நாம் கருதலாம். இறைவனை தன் கருவில் தாங்கியதன் வழியே, வாழும் நற்கருணைப் பேழையாக மரியா விளங்கினார். மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த வேளையில், அவர்களுக்கிடையே, முதல் நற்கருணை ஆசீர் நிகழ்ந்தது. அவர்கள் இருவர் மட்டும் அல்லாமல், அவர்கள் கருவில் வளர்ந்துவந்த குழந்தைகளும் மகிழ்வால் நிறைந்தனர். அம்மகிழ்வின் சிகரமாக, அன்னை மரியாவின் புகழ் பாடல் எழுந்தது."

இந்த கிறிஸ்மஸ் காலத்தில், குழந்தை இயேசுவை, நம் இல்லங்களிலும், கோவில்களிலும் ஓர் அலங்காரப் பொருளாக மட்டும் வைத்துவிடாமல், அவரை, நம் உள்ளங்களில் சுமந்துசெல்லும் பேழைகளாக மாறுவோம். கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், அன்னை மரியாவையும் எலிசபெத்தையும் போல, உள்ளார்ந்த அன்புடன், ஒருவர் ஒருவருக்கு, ஆசீர் வழங்குவோம், ஆசீர் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2018, 15:04