“ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்கா 3: 4) - திருமுழுக்கு யோவான் “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்கா 3: 4) - திருமுழுக்கு யோவான் 

திருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்" என்று, திருமுழுக்கு யோவானைப் போல், நம் ஆன்மீகத் தயாரிப்புகளை நினைவுறுத்துவோரின் குரலைக் கேட்கப் போகிறோமா?

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

091218 திருவருகைக் காலம் 2 - ஞாயிறு சிந்தனை

இவ்வாண்டு, நொபெல் அமைதி விருதுக்கு, ஈராக் நாட்டின், யாசிதி (Yazidi) என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, நாடியா முராட் (Nadia Murad) என்ற இளம்பெண்ணும், காங்கோ ஜனநாயக குடியரசில் பணிபுரியும் டென்னிஸ் மக்வெகே (Denis Mukwege) என்ற மருத்துவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். "பெண்களை, பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் போர்க்குற்றத்தை, உலகின் கவனத்திற்குக் கொணர்ந்ததன் வழியே, இவ்விருவரும் உலக அமைதிக்கு வழி வகுத்துள்ளனர்" என்று, நொபெல் விருதுக்குழு அறிவித்தது.

25 வயதான இளம்பெண் நாடியா முராட் அவர்கள், 2014ம் ஆண்டு, இஸ்லாமிய அரசு என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் ISIS எனப்படும் தீவிரவாதக் குழுவினரால் பிடிபட்ட பல்லாயிரம் இளம்பெண்களில் ஒருவர். பாலியல் அடிமையாக, மூன்று மாதங்கள், பல்வேறு கொடுமைகளை அடைந்த இவர், தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து, தற்போது, ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். ISIS குழுவினரின் கொடுமைகளைப் பற்றியும், யாசிதி இனத்தவருக்கு எதிராக நிகழும் அநீதிகள் குறித்தும், நாடியா அவர்கள், உலக அரங்குகளில் பேசிவருகிறார். 2017ம் ஆண்டு, மே மாதம், இளம்பெண் நாடியா அவர்கள், வத்திக்கானுக்குச் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்தித்து, தன் யாசிதி இனத்தவர் சார்பில், விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார். "கடைசிப் பெண்: என் சிறைவாசத்தின் கதையும், இஸ்லாமிய அரசுக்கு எதிராக என் போராட்டமும்" என்ற தலைப்பில், நாடியா அவர்கள், தன் நினைவுகளைத் தொகுத்து, நூலொன்றை வெளியிட்டுள்ளார்.

63 வயது நிறைந்த மருத்துவர், டென்னிஸ் மக்வெகே அவர்கள், காங்கோ ஜனநாயக குடியரசில், புக்காவு (Bukavu) என்ற நகரில், மருத்துவமனை ஒன்றை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். தன் நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டு மோதல்களாலும், தற்போது அந்நாட்டில் இயங்கிவரும் போராட்டக் குழுக்களாலும் பாலியல் வன்கொடுமைகளை அடைந்த ஆயிரமாயிரம் பெண்களுக்கு, டென்னிஸ் அவர்கள், மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சிகள் நடந்தாலும், தன் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

அக்டோபர் 5ம் தேதி, நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்ட வேளையில், டென்னிஸ் அவர்கள், நார்வே நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுத்தார்: "உலகெங்கும் கொடுமைகளை அடைந்துவரும் பெண்களே, நான் உங்களுக்குக் கூறவிழைவது இதுதான்: உங்களுக்குச் செவிசாய்க்க இவ்வுலகம் தயாராக உள்ளது என்பதற்கு, இவ்விருது ஓர் அடையாளமாக விளங்குகிறது. மனிதம் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வதற்கு, மனிதக்கருவைத் தாங்கும் பெண்களே உதவமுடியும்".

மருத்துவர் டென்னிஸ் அவர்கள் மற்றொரு நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைத் தடுக்க, உலக அரசுகள் தகுந்த முயற்சிகள் எடுக்கவில்லை என்ற கடுமையானக் கண்டனத்தை வெளியிட்டார். "போர்களில், வேதியல் ஆயுதங்களையும், நுண்ணுயிர் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தடைசெய்ய, அரசுகள், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. ஆனால், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள், போர்களில், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எந்த ஓர் அரசும் இதுவரை முன்வரவில்லை" என்று கூறியுள்ளார்.

இளம்பெண் நாடியா அவர்களுக்கும், மருத்துவர் டென்னிஸ் அவர்களுக்கும், டிசம்பர் 10, இத்திங்களன்று, நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில், நொபெல் அமைதி விருது வழங்கப்படும். 1901ம் ஆண்டு முதல், நொபெல் அமைதி விருது வழங்குவதற்கு, டிசம்பர் 10ம் தேதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளை நாம் சிறப்பிக்கின்றோம். அதிலும் குறிப்பாக, மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை (Universal Declaration of Human Rights) வெளியிடப்பட்ட 70வது ஆண்டு நிறைவை, இவ்வாண்டு சிறப்பிக்கின்றோம்.

பல்வேறு நிலைகளில், அளவுகளில், வழிகளில் மீறப்படும் மனித உரிமைகளில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், நிச்சயம், முதலான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்த மனித உரிமை மீறலை, மனித சமுதாயத்தின் கவனத்திற்கு மீண்டும் ஓருமுறை கொணர்ந்த, நாடியா முராட், மற்றும் டென்னிஸ் மக்வெகே இருவருக்காகவும், இறைவன் சன்னதியில் நன்றி கூறுவோம். மனித உரிமைகள், அனைவருக்கும் கிடைக்கும்வண்ணம், இவ்விருவரைப் போல், போராடிவரும் ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்களுக்காகவும் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

1948ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டது. 30 விதிமுறைகளை மனித சமுதாயத்தின் கவனத்திற்குக் கொணர்ந்த இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதல் இரு விதிமுறைகளை (Article) மட்டும் இன்று நினைவுகூருவோம்:

விதிமுறை 1: "எல்லா மனித உயிர்களும், சுதந்திரமாகவும், சரிசமமான மதிப்புடனும், உரிமைகளோடும் பிறக்கின்றனர். அறிவுத்திறனும், மனசாட்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; உடன்பிறந்த உணர்வுடன் ஒருவர் ஒருவருடன் நடந்துகொள்ளவேண்டும்."

விதிமுறை 2: "இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உரிமைகளும், சுதந்திரங்களும், இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் கொள்கை, நாடு அல்லது சமுதாயம், பிறப்பு என்ற எவ்விதப் பாகுபாடும் இன்றி, அனைவருக்கும் உரியன."

மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இனம், நிறம், பாலினம், மதம், நாடு என்று, அனைத்து வழிகளிலும், ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் உருவாக்கி, பல கோடி மக்களின் உரிமைகள், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளைப் பெறுவதற்குத் தேவையானச் சூழலை உருவாக்கும் துணிவையும், தெளிவையும் நாம் பெறவேண்டும் என்று, இந்த ஞாயிறு வழிபாட்டில் மன்றாடுவோம்.

மேடு, பள்ளங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத ஒரு பாதையை உருவாக்கி, அப்பாதையில் இறைவனோடு இணைந்து நடக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இன்று நாம் சிறப்பிக்கும், திருவருகைக் காலம் 2ம் ஞாயிறை மையப்படுத்திய சிந்தனைகளை, ஒரு கற்பனைக் காட்சியுடன் துவக்குவோம்.

கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச்செல்லுங்கள்" என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனை பற்றி எழும் குரல், ஆன்மீக தயாரிப்புக்கு அழைப்பு விடுக்கும் அந்தக் குரலை முற்றிலும் அடக்கிவிட்டு, முன்னே வந்து நிற்கும். அந்த வர்த்தகக் குரல் வரும் திசை நோக்கி, முட்டி மோதிக்கொண்டு, கூட்டம் அலைமோதும்.

பெருநகரங்களில், கடைவீதிகள், அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இத்தகையக் கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு இது:

அந்த Mallல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு, அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், அங்கு பொருள்கள் வாங்கியவர்களிடமும், வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று, அவர், ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பினார்.

அவர் சொல்வதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர், மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர், தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக, புதிய பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர், அந்த Mallல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று, அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.

Mallல் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், இந்த மனிதரைப்பற்றிக் கேள்விப்பட்டனர். அந்த Mallன் காவலாளிகளிடம் சொல்லி அந்த மனிதர் மீண்டும் அந்த Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நமது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று, அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், "அவர் நமது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று, மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, அவர்கள் சார்பாகப் பேசினர். இது, வர்த்தகர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.

வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்கும் நோக்கத்துடன், Mallல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அந்த மனிதர், மக்களின் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது கிறிஸ்மஸ் மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது, நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி.

கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை, நம்மீது திணிப்பதில், வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில், அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ, எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா, இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில், தன் கேள்விகளைப் பகிர்ந்துகொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த இந்த மனிதர், இயேசுவின் வழியைத் தயார் செய்வதற்கு வந்த திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான் ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்தக் கடைகளில் இருந்தோரையும் தங்கள் சுயநல வழியிலிருந்து மாறி, “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்கா 3: 4)

என்று அவர்களையும் இறைவன் வழிக்கு அழைத்து வந்திருப்பார்.

சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ, கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது, என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக, நமது விழாக்கள் மீது, வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்று, திருமுழுக்கு யோவானைப் போல், நம் ஆன்மீகத் தயாரிப்புகளை நினைவுறுத்துவோரின் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்" என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 14:35