தேடுதல்

அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தை அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தை 

அயர்லாந்து Brexit திட்டம் குறித்து அந்நாட்டு ஆயர்கள்

Brexit முடிவினால் என்ன நேருமோ என்று வறியோர் கொண்டிருக்கும் அச்சத்தை, அரசு கருத்தில் கொள்ளவேண்டும் – அயர்லாந்து ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து ஆயர் பேரவை, டிசம்பர் 5, இப்புதனன்று மாலை, தங்கள் குளிர்கால கூட்டத்தை நிறைவு செய்ததையடுத்து, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அயர்லாந்து நாட்டில், கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சியைத் தடுத்தல், 'பிரெக்ஸிட்' (Brexit) முடிவில் அயர்லாந்தின் பங்கு, இளையோர் பணி, ஏமன் மற்றும் தென் சூடான் நாடுகளுக்கு உதவி, ஆகிய அம்சங்களை, ஆயர்கள், தங்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

கருக்கலைப்பு சட்டமாவதைக் குறித்து, இவ்வாண்டு மே மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதனை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளபோதிலும், அவர்கள் கருத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, தங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று, ஆயர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தையின் பாலினம், அக்குழந்தையில் காணப்படும் குறைபாடுகள் ஆகியவற்றைக் காரணங்களாகக் காட்டி, கருக்கலைப்பை அனுமதிப்பதை, தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, ஆயர்கள், இவ்வறிக்கையில், திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் 'பிரெக்ஸிட்' திட்டம், அரசியல் அளவிலும், சமுதாய அளவிலும் பெரும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ள அயர்லாந்து ஆயர்கள், இந்த முடிவினால் என்ன நேருமோ என்று, வறியோர் கொண்டிருக்கும் அச்சத்தை, அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

அயர்லாந்தில் நடைபெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டிலும், இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்திலும் உருவான முடிவுகளை தாங்கள் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஏமன் மற்றும் தென் சூடான் நாடுகளில் போரினால் துன்புறும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம் என்று, அயர்லாந்து ஆயர்கள் இவ்வறிக்கையின் வழியே விண்ணப்பித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 15:38