உருகுவே நாட்டில் டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற திருமணச் சடங்கு உருகுவே நாட்டில் டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற திருமணச் சடங்கு 

திருக்குடும்பத் திருவிழாவன்று திருமண வாக்குறுதி

திருக்குடும்பத் திருவிழாவன்று, போலந்தில் வாழும் கத்தோலிக்கத் தம்பதியர் அனைவரும், தங்கள் திருமண உறுதிமொழியைப் புதுப்பிக்க, அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 30, வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில், திருக்குடும்பத் திருவிழா சிறப்பிக்கப்படும் வேளையில், போலந்து நாட்டில் வாழும் கத்தோலிக்கத் தம்பதியர் அனைவரும் தங்கள் திருமண உறுதிமொழியைப் புதுப்பிக்குமாறு, அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் இந்த ஆயர் பேரவை மேற்கொண்ட ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி, போலந்தில் உள்ள அனைத்து பங்கு கோவில்களிலும், இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் திருப்பலிகளில், தம்பதியர் தங்கள் திருமண வாக்குறுதியைப் புதுப்பிக்க, பங்கு அருள் பணியாளர்கள் உதவுமாறு, ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

திருமண அருளடையாளத்திற்கும், குடும்ப வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், திருக்குடும்பத் திருநாளன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, ஆயர் பேரவையின் குடும்பப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Wiesław Śmigiel அவர்கள் கூறியுள்ளார்.

மனித குலத்தின் விலைமதிப்பற்ற ஒரு கருவூலம், குடும்பம் என்பதை புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடிக்கடி கூறிவந்துள்ளார் என்று, போலந்து நாட்டு ஆயர்கள், தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2018, 14:44