தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் கராச்சியில் கிறிஸ்மஸ் வியாபாரம் நிகழும் கடைவீதி பாகிஸ்தான் கராச்சியில் கிறிஸ்மஸ் வியாபாரம் நிகழும் கடைவீதி  (AFP or licensors)

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் கிறிஸ்மஸ்

பாகிஸ்தான், லாகூரில், 10,000த்திற்கும் அதிகமான காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடைபெறும் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி நகரங்களில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும், இதேபோல், கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பை மேற்கொண்டுள்ளனர் என்றும்  பீதேஸ் செய்தி கூறுகிறது.

இவ்வாண்டு, ஆசியா பீபி அவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அடிப்படைவாதக் குழுவினர் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கராச்சியின் புனித பாட்ரிக் பேராலயத்தின் பொறுப்பாளர் அருள்பணி மாரியோ ரொட்ரிகுவெஸ் அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயத்திலும் பணியாற்றும் தன்னார்வப் பணியாளர்களுக்கும், பாகிஸ்தான் காவல் துறையினர், பாதுகாப்பு பயிற்சிகள் அளித்து வருகின்றனர் என்று, அருள்பணி ரொட்ரிகுவெஸ் அவர்கள் மேலும் கூறினார்.

லாகூரில் மட்டும், 10,000த்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், நகரின் முக்கியமான இடங்களில், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கிறிஸ்து பிறப்பு காலத்தில் உலகெல்லாம் அமைதி நிலவவேண்டும் என்று செபிக்கிறோம், அதே வண்ணம், இவ்விழாவின் மகிழ்வைக் குலைக்க விரும்பும் மக்களுக்கும் இறைவன் அமைதி வழங்க செபிக்கிறோம் என்று, "Jesus Life TV" என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் Adeel Patras Chaudry என்ற போதகர், பீதேஸ் செய்தியிடம் கூறினார். (Fides)

20 December 2018, 15:01