தேடுதல்

லிபியாவிலிருந்து குடிபெயர்வோர் லிபியாவிலிருந்து குடிபெயர்வோர் 

புலம் பெயர்ந்தோருக்குப் புகலிடம் - புனித 23ம் ஜான் குழுமம்

லிபியாவிலிருந்து இத்தாலியை வந்தடைந்த 103 புலம் பெயர்ந்தோரை, இத்தாலி நாடு வரவேற்றுள்ளது. இவர்களில், 51 பேருக்கு, திருத்தந்தை புனித 23ம் ஜான் குழுமத்தினர், புகலிடம் அளித்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 19, இப்புதனன்று, லிபியாவிலிருந்து இத்தாலியை வந்தடைந்த 103 புலம் பெயர்ந்தோரை, இத்தாலி நாடு வரவேற்றுள்ளது. இவர்களில், பிறந்து ஐந்தே நாளான ஒரு பெண் குழந்தை உட்பட, 51 பேரை, திருத்தந்தை புனித 23ம் ஜான் குழுமத்தினர், வரவேற்று, புகலிடம் அளித்துள்ளனர்.

மனிதாபிமானத் தாழ்வாரம் என்ற ஒரு கருத்தை மையப்படுத்தி செயலாற்றிவரும் ஒரு திட்டத்தின் கீழ், இதுவரை, சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா, ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து பல நூறு குடும்பங்களை வரவேற்றுள்ளதாக, புனித 23ம் ஜான் குழுமத்தின் தலைவர், ஜியோவான்னி பவுலோ இரமோந்தா (Giovanni Paolo Ramonda) அவர்கள் கூறினார்.

இப்புதனன்று வந்து சேர்ந்துள்ள புலம் பெயர்ந்தோர், Rimini, Ravenna மற்றும் Massa-Carrara பகுதிகளில் குடியமர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1973ம் ஆண்டு அருள்பணி ஓரெஸ்தே பென்சி (Oreste Benzi) என்பவரால் உருவாக்கப்பட்ட திருத்தந்தை புனித 23ம் ஜான் குழுமம், 201 இல்லங்களில், ஏறத்தாழ 1,300 புலம் பெயர்ந்தோருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2018, 15:04