தேடுதல்

Vatican News
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள குடில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள குடில்  (AFP or licensors)

நேர்காணல் – கிறிஸ்மஸ்க்கு அண்மைத் தயாரிப்பு

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அண்மைத் தயாரிப்பாக, கிறிஸ்தவர்கள், இறைவனோடும், உறவுகளோடும், உடன்வாழ் மனிதர்களோடும் உண்மையான உறவுடன் வாழ தடைகளாய் இருப்பவற்றை அகற்றி, உறவில் வளர முயற்சித்து வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான் & அ.பணி அமல்ராஜ் ம.ஊ.ச&

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அண்மை ஆன்மீகத் தயாரிப்பாக, நவநாள் பக்தி முயற்சிகளும், தியானங்களும் பங்குத் தளங்களில் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம், வெளி அலங்காரங்களிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வேளையில், அண்மித்துவருகின்ற கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு நம்மை எப்படி தயாரிப்பது எனச் சொல்கிறார், மரியின் ஊழியர் சபையின் அ.பணி அமல்ராஜ் ம.ஊ.ச அவர்கள்.

ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு வரலாறு, கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பின்னணி உண்டு. அவைகளை அறிந்து கொள்ளும்போது, அந்த விழாவை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட அவைகள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் கிறிஸ்து பிறப்பு விழவானது, ஒரு மிக நீண்ட வரலாற்றுப் பின்புலத்தையும், மிகவும் ஆழமான சமய-பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டுள்ளது.

திருச்சபையின் தொடக்க காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்ப்பு விழாவைத்தான் கொண்டாடினார்கள. ஏனெனில், ஆரம்ப கால கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை. பிற்காலத்தில், இயேசுவின் பிறப்பு விழா கொண்டாடப்படுவதற்கும், அது வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுவதற்கும் அடித்தளமாக இருப்பது, பற்பல ஆண்டுகளாக பண்டைய நாகரிகங்களில், குறிப்பாக உரோமைப் பேரரசில் கொண்டாடப்பட்டு வந்த சடுர்நலியா (Saturnalia / god of generation, renewal and liberation), நதாலிஸ் சோலிஸ் இன்விக்தி (natalis solis invicti) மற்றும் ஸ்கான்டினேவியன் நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த யூல் பண்டிகை போன்ற குளிர்காலக் கொண்டாட்டங்களாகும். இவைகளில் உரோமர்கள் கொண்டாடிய  நதாலிஸ் சோலிஸ் இன்விக்தி விழாவானது குறிப்பிடத்க்க விழாவாகும்.

இந்த விழாவனது உரோமையர்களுடைய Sol invictus என்றழைக்கப்படும் “சூரியக் கடவுளுக்கான” விழாவாகும். அதாவது, உரோமையர்கள், டிசம்பர் 25ம் தேதியை வெற்றிவீரன் சூரியன் என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளுக்காகக் கொண்டாடிய விழாவாகும். இந்த நதாலிஸ் சோலிஸ் இன்விக்தி விழாவானது தொடக்க காலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவின் தோற்றத்திற்கான மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்கலங்சியம் குறிப்பிடுகிறது. பல ஆரம்ப கால கிறிஸ்தவ எழுத்தாளர்களும், இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்: எடுத்துக்காட்டாக சிப்ரியான் என்ற ஆயர்: “ஓ… எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின் செயல், சூரியன் பிறந்த நாளில்… கிறிஸ்துவும் பிறந்தது” (O, how wonderfully acted Providence, that on that day on which that Sun was born . . . Christ should be born) என்று எழுதியுள்ளார்.

மார்ச் மாதம் 25ம் நாள் மரியாள் கருவுற்றாள் என்ற கருத்தானது, கிறிஸ்தவர்களிடையே மேலோங்கியிருந்தது. எனவே, அதிலிருந்து ஒன்பது மாதங்களைக் கணக்கிட்டு, டிசம்பர் 25ம் நாளை கிறிஸ்து உலகிற்கு இருளகற்றும் ஒளியாக வருகின்றார் என்ற அர்த்தத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாட ஆரம்பிக்கின்றனர்.

கிறிஸ்து பிறப்பு விழாவின் அர்த்தம் என்ன, எவ்வாறு நாம்; அதைக் கொண்டாட வேண்டும்?

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவானது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தினருக்குமானதொரு விழாவாகும். ஏனெனில் இது நம்பிக்கையின் விழா, அன்பின் விழா மற்றும் அமைதியின் விழா.

இது நம்பிக்கையின் விழா, ஏனெனில் அடிமைத்தனத்தாலும் போர்களினாலும் தங்களுடைய வாழ்வில் நம்பிக்கையை இழந்து வாழ்ந்த மக்களுக்கு, எசாயா இறைவாக்கினர் வழியாக “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” ( எசாயா 9, 2) என்ற நம்பிக்கையின் செய்தி கொடுக்கப்படுகின்றது.

இது அமைதியின் விழா, ஏனெனில் இயேசுவினுடைய பிறப்பில் வானதூதர்கள் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த அந்த ஏழை எளிய மக்களை நோக்கி "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக்.2, 13/14) “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்று கூறி, அம்மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டு வருகின்றார்.

இது அன்பின் விழா, ஏனெனில் நமது தமிழ்ச் சமயம் கூறுகின்றவாறு:

யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!

வாழ்வே தவம்! அன்பே சிவம்!

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!

நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!

இதையே “அன்பே கடவுள்” (1 யோவா 4,16) என்று கூறுகின்றது திருவிவிலியம். கிறிஸ்து அன்பின் வடிவமாகப் பிறக்கின்றார். கண்ணால் காண முடியாத கடவுளின் உருவமாகவும், அன்பின் சின்னமாகவும் நம்மிடையே அவர் பிறக்கின்றார்.

இத்தகைய பெருவிழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட வேண்டுமெனில்  அதற்காக நம்மையே நாம் தனிப்பட்ட வகையிலும், குழுவாகவும் நன்கு தயாரிக்க வேண்டும். இதற்காகத்தான் திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டு, திருவருகைக் காலம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, எவ்வாறு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்காக தவக்காலத்தின் நாற்பது நாட்கள் நம்மையே நாம் பல வழிகளில் ஆன்மீக முறையில் தயாரிக்கின்றோமோ, அதேபோன்று இந்த திருவருகைக்கால நாட்களில் கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட நம்மையே நாம் தயார்செய்திட வேண்டும்.

எந்தவொரு விழாவையும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட இரண்டு வகையான தயாரிப்புகள் தேவைப்படுகின்றன:

1) அகத் தாயரிப்பு (Internal preparation)

எந்தவொரு மதத்திலும் ஒவ்வொரு விழாவைக் கொண்டாடுவதற்கு முன்பும் அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கென தன்னையே பல ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுத்தி, ஒரு முன் தயாரிப்பைச் செய்கின்றனர். உதாரணமாக இரம்ஜானை ஒட்டிய நமது இஸ்லாமிய சகேதரர்களின் நோன்பு மற்றும் ஆடி அமாவசை, தைப்பூசத்தையொட்டிய நமது இந்திய சமயங்களில் மேற்கொள்ளப்படும் நோன்புகள். குறிப்பாக, நமது தழிழ் கலாச்சராத்தில் ஆடி மற்றும் மார்கழி மாத விரதம் என்பது, ஓர் ஆன்மீகம் சார்ந்த அகத் தயாரிப்பாகும்.

இந்த வகையில் கிறிஸ்தவ சமயமானது, இறைவார்த்தைகளை வாசித்து அதைத் தியானித்தல், திருவருட்சாதணங்களில் தொடர்ந்து பங்கெடுத்தல், திருவருகைக்கால சிறப்பு தியானங்களில் பங்குகெடுத்தல், சிறப்பு ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றி உடைந்த உறவுகளை சரிசெய்தல், நமது மகழ்ச்சியை ஏழைகளோடும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இரக்கச் செயல்களில் ஈடுபடுதல், முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்குச் சென்று, அவர்களோடு ஒரு நாளைச் செலவிடுதல், இரத்த தானம் அளித்தல் மற்றும், பிற சமய சகோதரர்களை அழைத்து, பல்சமய உரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற, ஆன்மீகச் செயல்களை, தனிப்பட்ட முறையிலும், மற்றும் குழுவாகவும் செய்து, இயேசு கிறிஸ்து யார், அவருடைய பிறப்பு நமக்குத் தரும் செய்தி மற்றும் கொண்டுவரும் மாற்றங்கள் என்ன என்பது பற்றச் சிந்திக்க அழைக்கின்றது.

2) புற தயாரிப்பு  (External preparation)

நமது தழிழ்நாட்டில் பொங்கல் போன்ற கலாச்சார மற்றும் பண்பாட்டு விழாக்களைக் கொண்டாடுவதற்கு முன்னதாக நாம் பல வகைகளில் அதற்காகத் தயாரிப்பதைப் பார்த்திருப்போம். உதாரணமாக, நமது இல்லங்களைப் புதுப்பித்தல் மற்றும் அதற்கு வண்ணம் தீட்டுதல், தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஏர் தழுவுதல் அதாவது சல்லிக்கட்டு. மஞ்சு விரட்டு, சென்னை சங்கமம் போன்ற கலாச்சார விழாக்களை ஏற்படுத்துதல் மற்றும் காணும் பொங்கல் அன்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தல் போன்றவை பொங்கலை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவதற்கான புறத் தயாரிப்புகளாகும்.

இதே போன்று கிறிஸ்து பிறப்பு விழாவிலும் பிறரின் இல்லங்களுக்குச் சென்று கிறஸ்து பிறப்பு பற்றிய பாடல்களைப் பாடுதல், இனிப்புகளைப் பகிர்ந்துகொள்தல், ஏழைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தல், கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் விதமாக இல்லங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தெருக்களில் கிறிஸ்து பிறப்பு குடில், மரம் அமைத்தல், நட்சத்திரங்களைக் கட்டுதல், மின் விளக்கு அலங்காரங்கள் போன்றவை புறத் தயாரிப்புக்களாகும்.

உலகமயமாதல் மற்றும் வணிகமயமாதலின் தாக்கத்தினால் இன்று பொரும்பாலனவர்கள் அகத்தயாரிப்பைவிட புறத்தயாரிப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த வெற்று ஆடம்பரங்களைத் தவிர்த்து, நாம் ஆன்மீகத்தில் வளர, குடும்பத்தில் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமை நிலைக்க, உலகெங்கும் சமாதானம் நிலவிட, இல்லாமை நீங்கிட மற்றும் மத ஒற்றுமை ஏற்பட நாம் நம்மாலான ஒரு செயலைச் செய்கின்றபோது நாம் கொண்டாடவிருக்கின்ற கிறிஸ்து பிறப்பு, நமக்கும் பிறருக்கும் ஒர் அர்த்தமுள்ள விழாவாக மாறும். எனவே. இதை உணர்ந்து பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவை நம் உள்ளதிலும், இல்லத்திலும் வரவேற்றிடத் தயாராவோம். அணைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழத்துக்கள். 

நேர்காணல் – கிறிஸ்மஸ்க்கு அண்மைத் தயாரிப்பு - அ.பணி அமல்ராஜ் ம.ஊ.ச

 

20 December 2018, 14:32