பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு புனிதத் தலத்தில் பக்தர்கள் பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு புனிதத் தலத்தில் பக்தர்கள் 

புனித பூமி கிறிஸ்தவர்கள் பெத்லகேம் செல்லத் தடை

புனித பூமியின், பெத்லகேம் நகரம், உலகினரின் கவனத்தை ஈர்த்துவரும் கிறிஸ்மஸ் காலத்தில், காசா பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், பெத்லகேமுக்குள் நுழைவதற்கு, இஸ்ரேல் அரசு அனுமதி மறுத்து வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்மஸ் காலத்தில், புனித பூமியின், பெத்லகேம் நகரம், உலகினரின் கவனத்தை ஈர்த்துவரும் வேளையில், பெத்லகேமுக்கு அருகே காசா பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், பெத்லகேமுக்குள் நுழைவதற்கு, இஸ்ரேல் அரசு அனுமதி மறுத்து வருகிறது என்று, ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இஸ்ரேல் அரசு, சென்ற ஆண்டு, 300 பேருக்கும், இவ்வாண்டு 500 பேருக்கும் அனுமதி வழங்கியுள்ளது என்றும், இவர்கள் அனைவரும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், இச்செய்தி மேலும் கூறுகிறது.

2018ம் ஆண்டு சனவரி முதல் நவம்பர் மாதம் முடிய, 11 மாதங்களில், 38 இலட்சம் பேர் உலகெங்கிலுமிருந்து புனித பூமிக்கு வந்துள்ளனர் என்றும், 2016ம் ஆண்டு வந்து சேர்ந்த பயணிகளைக் காட்டிலும் 35 விழுக்காடு கூடுதலான பயணிகள் இவ்வாண்டு வந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு வந்து சேரும் பயணிகளில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள் என்றும், உலகெங்கிலுமிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி வழங்கும் இஸ்ரேல் அரசு, புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி மறுப்பது அநீதி என்றும் காசா பகுதியில் பங்குப் பணியாற்றும் அருள்பணி மாரியோ டா சில்வா அவர்கள் கூறியுள்ளார்.

20 இலட்சம் பேர் வாழும் காசாப் பகுதியில், 1,100 பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர் என்பதும், இவர்களின் பயணங்கள் குறித்த கட்டுப்பாடுகளை, 1991ம் ஆண்டு முதல், இஸ்ரேல் அரசு விதித்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2018, 14:54