பிலிப்பைன்ஸ் விசுவாசிகளுடன் ஆயர் பிலிப்பைன்ஸ் விசுவாசிகளுடன் ஆயர் 

பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் ஆயர்களுக்கு ஆதரவு

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் துத்தெர்தே அவர்களின் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் Kalookan ஆயர் Pablo Virgilio Davidடன் ஒருமைப்பாடு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்தே அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் திருஅவைத் தலைவர்களுக்கு எதிராக, கடும் விமர்சனங்களை வெளியிட்டுவரும்வேளை, அந்நாட்டு கத்தோலிக்கர், ஆயர்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

தனது நிர்வாகத்தை குறைகூறிவரும் ஆயர்களை பயனற்றவர்கள் என்றும், விசுவாசிகள் ஆயர்களைக் கொலை செய்யுமாறும், துத்தெர்தே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

OFW எனப்படும், வெளிநாட்டில் பணியாற்றுபவர் அமைப்பு நடத்திய நிகழ்வில் உரையாற்றிய துத்தெர்தே அவர்கள், அரசைக் குறைகூறுவதே உங்களது ஆயர்களின் ஒரே வேலை என்றும், கத்தோலிக்கத் திருஅவை வெளிவேட திருஅவை என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில், பிலிப்பைன்சில், மிகவும் செல்வாக்குள்ள கத்தோலிக்க இறையியல் பொதுநிலையினர் கழகம் ஒன்று, விடுத்துள்ள அறிக்கையில், கத்தோலிக்கர் தங்களின்  விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும், தங்களின் கத்தோலிக்க அர்ப்பணத்தைப் புதுப்பித்து ஆலயங்களை நிரப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தோலிக்கர், வார்த்தைகளால் மட்டுமின்றி, சிறப்பாக, தங்கள் வாழ்வால் துணிச்சலுடன் விசுவாசத்திற்குச் சான்று பகருமாறு, அந்த இறையியல் கழகத் தலைவர், Julieta Wasan அவர்கள், அழைப்பு விடுத்து, ஆயர்களுடன் தனது ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற பிலிப்பைன்சில், மொத்த மக்கள் தொகையில், ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2018, 14:39