தேடுதல்

லக்சம்பர்க் பேராயர் Jean-Claude Hollerich லக்சம்பர்க் பேராயர் Jean-Claude Hollerich 

புலம்பெயர்வு குறித்த ஐ.நா. ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்கர் ஆதரவு

உங்களிடம் தங்கும் அன்னியர், உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள் (லேவி. 19:34)

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்வு குறித்து ஐ.நா. நிறுவனம் கொண்டுவந்துள்ள உலகளாவிய ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்கத் திருஅவையின் ஆதரவைத் தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐரோப்பிய கத்தோலிக்க திருஅவை உயர் அதிகாரி ஒருவர்.

புலம்பெயர்வு குறித்த ஐ.நா.வின் உலகளாவிய ஒப்பந்தம், டிசம்பர் 11ம் தேதி, Marrakechல் கையெழுத்துக்கு வைக்கப்படவிருப்பதை முன்னிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ள,  ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், லக்சம்பர்க் பேராயருமான Jean-Claude Hollerich அவர்கள், இந்த ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய திருஅவையின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நம் சமுதாயங்களில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, அவர்களை ஒன்றிணைப்பதற்கு இருக்கும் கடமையை, ஐரோப்பிய கத்தோலிக்க திருஅவை, மீண்டும் உறுதிசெய்கின்றது என்றும், பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

இவ்விவகாரத்தில், மனிதரும், அவரின் உண்மையான தேவைகளும், பொது நலனும், மையப்படுத்தப்பட வேண்டும் என்பதில், ஆயர்கள் உறுதியாய் இருக்கின்றனர் என்றும், அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

“உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! (லேவி. 19:34) ”. இந்த விவிலிய வார்த்தைகளுடன் தனது அறிக்கையை ஆரம்பித்துள்ளார், இயேசு சபை பேராயர் Jean-Claude Hollerich.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2018, 15:10