தேடுதல்

 திரு நற்கருணை வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் திரு நற்கருணை வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் 

பாகிஸ்தானில் திரு நற்கருணை ஆண்டு நிறைவு

மொழி, இனம், சாதி என்ற பல பிரிவுகளை கொண்டுள்ள பாகிஸ்தான் தலத்திருஅவையை ஒருங்கிணைப்பது, திரு நற்கருணை ஒன்றே – லாகூர் பேராயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட திரு நற்கருணை ஆண்டு, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், திரு நற்கருணையின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.

2017ம் ஆண்டு, நவம்பர் மாதம் துவங்கி, 2018ம் ஆண்டு, டிசம்பர் முதல் தேதி நிறைவுற்ற திருவழிபாட்டு ஆண்டு முழுவதும், பாகிஸ்தான் தலத்திருஅவை, நற்கருணை ஆண்டாக கொண்டாடியதையடுத்து, இந்த நற்கருணை ஆண்டை நிறைவுக்குக் கொணர்ந்த, முல்தான் ஆயர் பென்னி டிரவாஸ் (Benny Travas) அவர்கள் இவ்வாறு கூறினார்.

மொழி, இனம், சாதி என்ற பல பிரிவுகளை கொண்டுள்ள பாகிஸ்தான் தலத்திருஅவையை ஒருங்கிணைப்பது, திரு நற்கருணை ஒன்றே என்றும், திரு நற்கருணை வழியே, தன்னையே நொறுக்கி, பகிர்ந்த இயேசுவைப்போல், பாகிஸ்தான் கத்தோலிக்கர்களும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் இறுதித் திருப்பலியில் கூறினார்.

லாகூர் திரு இருதய பேராலயத்தில், நிறைவேற்றப்பட்ட நற்கருணை ஆண்டு இறுதித் திருப்பலியில், பேராயர் ஷா அவர்களுடன், பல ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 15:23