திருத்தந்தை 2ம் உர்பான் திருத்தந்தை 2ம் உர்பான் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 17

நீதியை அன்புகூர்ந்தேன், அநீதியை வெறுத்தேன், எனவே, நாடுகடத்தப்பட்ட நிலையில் இறக்கின்றேன் : திருத்தந்தை 7ம் கிரகரி

மேரி தெரேசா – வத்திக்கான்

உரோமைப் பேரரசு, புனித உரோமைப் பேரரசு, இவையிரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? கி.மு.27ம் ஆண்டில் அகுஸ்துஸ் சீசர், முதல் உரோமைப் பேரரசராக ஆட்சியை ஆரம்பித்ததிலிருந்து, உரோம் நகரைத் தலைநகராகக் கொண்டு உரோமைப் பேரரசு தொடங்கியது. அக்காலத்தில் மிகவும் வல்லமைமிக்க பேரரசுகளில் ஒன்றாக இது விளங்கியது. பின்னர், இப்பேரரசு, ஏறத்தாழ கி.பி.500ம் ஆண்டில் நலிவடையத் தொடங்கியது. பேரரசும், அரசர்கள் மற்றும், பேரரசர்களுக்கிடையே, சிறு சிறு பகுதிகளாகத் துண்டாடப்பட்டது. புனித உரோமைப் பேரரசு என்பது, ஏறத்தாழ கி.பி.800ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பல்வேறு அமைப்புகளில் ஆளப்பட்டு வந்தது. உரோம் நகரின் பெயரை இது கொண்டிருந்தாலும், ஜெர்மனியில் இதன் அதிகார மையம் இருந்தது. மேலும், அதன் தலைவர்கள் ஜெர்மன் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். புனித உரோமைப் பேரரசின் முதல் பேரரசராகிய Charlemagne அதாவது, பெரிய சார்லஸ் என்பவர், உரோமன் கத்தோலிக்கத் தலைவரான திருத்தந்தையிடமிருந்து ஆசீர் பெற்றதால், இப்பெயர் அதற்கு வரலாயிற்று. அதற்குப் பின்னர், திருஅவையும், பேரரசும் ஒன்றோடொன்றாகப் பின்னிப் பிணைந்திருந்தன. இந்நிலையில், புனித உரோமைப் பேரரசில், இறுதியான அதிகாரம் யாருடைய கையில்? என்பது தொடர்பாக, திருத்தந்தைக்கும், பேரரசருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகளும் எழுந்தன. இத்தகைய பிரச்சனையே, 11ம் நூற்றாண்டில், திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களுக்கும், புனித உரோமைப் பேரரசர் 4ம் ஹென்ரி அவர்களுக்கும் இடையே கடுமையாக இடம் பெற்றது.

கர்தினால் Sovanaவின் Hildebrand அவர்கள், 1073ம் ஆண்டில், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை 7ம் கிரகரி என்ற பெயரை ஏற்றார். 1085ம் ஆண்டு வரை, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், திருஅவையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தார். அச்சமயத்தில் மிகவும் வல்லமை படைத்த புனித உரோமைப் பேரரசராக, 1056ம் ஆண்டு முதல், 1105ம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்தவர், ஜெர்மானியரான 4ம் ஹென்ரி. இவ்விருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த பிரச்சனையில், 4ம் ஹென்ரியை, திருத்தந்தை, திருஅவைக்கு இருமுறைகளுக்கும் மேல் புறம்பாக்கினார். அவர் இன்னும் சில மாதங்களில் இறப்பார் அல்லது தோற்கடிப்பார் என கூறினார். இதற்கு மாறாக, 4ம் ஹென்ரி, பேரரசராக திருத்தந்தை நியமித்திருந்த ருடோல்ஃப் அவர்களைத் தோற்கடித்தார். அதற்குப் பின்னர், பேரரசர் 4ம் ஹென்ரியின் ஆதிக்கம் ஓங்கியது. உரோமைக்கு வந்து,  திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களுக்கு எதிராக, மற்றொரு திருத்தந்தையை நியமித்து,  திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களை கைது செய்தார், பேரரசர் 4ம் ஹென்ரி. இதில் உரோம் மக்கள் இரண்டுபட்டனர். பேரரசர், உரோம் நகரில் வாழ்வதற்கு, பெருமளவான கர்தினால்களுக்கு இலஞ்சம் வழங்கினார். திருத்தந்தையும், உரோம் Sant’Angelo  அரண்மனைக்குத் தப்பித்துச் சென்றார். இதற்குப் பின்னர் திருத்தந்தையை காப்பாற்றும் முயற்சிகள் இடம்பெற்றன.

தென் இத்தாலியை ஆட்சி செய்த Robert Guiscard என்பவர், திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களைக் காப்பாற்றி, 4ம் ஹென்ரியை உரோம் நகரைவிட்டு வெளியேற்றினார். இந்நடவடிக்கையில் உரோம் நகரம் கடுமையாய் சேதப்படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த உரோம் பொது மக்கள், உரோம் நகரின் அழிவுக்கு, திருத்தந்தை 7ம் கிரகரியே காரணம் என்றனர். இதனால் இத்திருத்தந்தை, இராபர்ட் அவர்களுடன் சலேர்னோ நகரில் புகலிடம் தேடினார். திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், உரோம் நகரில் மீண்டும் எதிர் திருத்தந்தை பதவியில் அமர்ந்தது, மற்றும், ஏனைய தோல்விகளாலும் மனம்நொந்து, 1085ம் ஆண்டு மே 25ம் நாள் காலமானார். நீதியை அன்புகூர்ந்தேன், அநீதியை வெறுத்தேன், எனவே, நாடுகடத்தப்பட்ட நிலையில் இறக்கின்றேன் என்று சொல்லி, திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், தனது இறுதி மூச்சை விட்டார் எனச் சொல்லப்படுகின்றது.

திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள் இறந்தாலும், கத்தோலிக்கத் திருஅவையில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் ஆழமாக உயிரூட்டம் பெற்றன. இத்திருத்தந்தைக்குப் பின்னர், 1088ம் ஆண்டில் பதவியேற்றவரும், இவரைப் போலவே குளூனி துறவு சபையைச் சேர்ந்தவருமான திருத்தந்தை 2ம் உர்பான் அவர்கள், 7ம் கிரகரி அவர்களின் பணியைத் தொடர்ந்து செய்தார். திருஅவைமீது பொதுநிலையினரின் ஆதிக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். இதில், திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள் போல் தீவிரமாக இல்லாமல், மிதமாக நடந்துகொண்டார். அதேநேரம், பேரரசர் 4ம் ஹென்ரி அவர்கள், இத்தாலியில் எதிரிகளால் சூழப்பட்டார். துணைவியார் மற்றும் மகனாலும் கைவிடப்பட்டார் அவர். அவரின் நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப்போன நிலையில், காலமானார். திருத்தந்தை 2ம் உர்பான் அவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி குவிந்தது. திருத்தந்தை 2ம் உர்பான் அவர்கள், 1095ம் ஆண்டில் Clermontல், மாமன்றத்தைக் கூட்டி, முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தார். ஐரோப்பா எங்கும் திருத்தந்தையும், அவரின் அதிகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 4ம் ஹென்ரிக்கு அடுத்து அவரது மகன் 5ம் ஹென்ரியும் இறந்தார். அவருக்குப்பின், 2ம் லோத்தர் ஆட்சிக்கு வந்தார். அவர் திருத்தந்தைக்கு முழு ஆதவளித்தார். இவ்வாறு, திருத்தந்தையர், ஐரோப்பாவில், பல நூற்றாண்டுகளாக, ஆன்மீகத்திற்கும், உலகுசார்ந்த விடயங்களுக்கும் தலைவர்களாக இருந்தனர்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2018, 14:55