தேடுதல்

Vatican News
ஜெர்மானியப் பேரரசர் 4ம் ஹென்ரியின் படையெடுப்பு ஜெர்மானியப் பேரரசர் 4ம் ஹென்ரியின் படையெடுப்பு 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 16

திருத்தந்தைக்கு பணிந்து நடக்காததற்காக, பேரரசர் 4ம் ஹென்ரி, தவ உடையில், பனி நிறைந்த பகுதியில் வெறுங்காலுடன் மூன்று நாள்கள் நின்று திருத்தந்தையிடம் மன்னிப்பு கேட்டார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

1073ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள்,  மாபெரும் சீர்திருத்த திருத்தந்தையருள் ஒருவராக நோக்கப்படுகிறார். Hildebrand of Soana எனவும் அறியப்படும் இவர், 1728ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் பெனடிக்ட் அவர்களால், புனிதராக அறிவிக்கப்பட்டார். அக்காலத்தில் சர்ச்சைக்குரியதாயிருந்த, திருத்தந்தையர் பதவி ஏற்கும் நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர் இவர். திருஅவையில் இவர் பரிந்துரைத்த சீர்திருத்தங்கள், பிற்காலத்தில் கிரகோரியன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன. இவர், திருத்தந்தையரின் தேர்தல்களில் தன்னாட்சியை நிலைநிறுத்தினார். திருத்தந்தையர், பேரரசரால் முடிசூட்டப்படும் நிகழ்வையும், இரத்து செய்தார் இவர். திருத்தந்தையர், கர்தினால்கள் அவையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய திருஅவை சட்டத்தையும் இவர் உருவாக்கினார். பேராயர்கள் மற்றும் ஆயர்கள் மீது திருத்தந்தையரின் அதிகாரம் ஏற்கும்படிச் செய்தார். திருத்தந்தைக்கு, பாப்பிறை மாநிலங்கள் மீதுள்ள அதிகாரத்தையும் மீண்டும் பெற்றார். மேற்கத்திய திருஅவையில் அருள்பணியாளர்களின் கன்னிமை வாழ்வை உறுதிப்படுத்தினார். ஆலயப் பொருள்களை விற்று இலாபம் சேர்க்கும் நடவடிக்கைகளையும் நிறுத்தினார். அருள்பணியாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும், புனிதப் பொருள்களை விற்பதற்கும், இந்த திருத்தந்தை கொண்டுவந்த தடைகளுக்கு, சில அருள்பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், இளம் பேரரசர் 4ம் ஹென்ரியும், திருத்தந்தையின் இந்த சீர்திருத்தங்களையும், குறிப்பாக, ஆயர் நியமனங்களில் பேரரசரின் ஆதிக்கம் அகற்றப்பட்டதையும் எதிர்த்தார். இது மிலான் ஆயர் நியமனத்தில் தெளிவாகத் தெரிந்தது.

பேரரசர் ஆயர்களை நியமிக்கவில்லையெனில், பேரரசர் மற்றும் ஏனைய ஆட்சியாளர்களின் ஆட்சிக்குட்ப்பட்டிருந்த பகுதிகளில், ஆயர்கள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் போகும். ஏனெனில், மத்திய காலத்தில், அரசர்கள், ஆயர்களை குறுநில மன்னர்களாக, தங்களின் ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தனர். இத்தகைய பிரச்சனைகளால் பேரரசர் 4ம் ஹென்ரி, மிலான் பேராயராக, Tedald என்பவரை நியமித்தார். எனவே, திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள்,  பேரரசர் 4ம் ஹென்ரிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார். பேரரசர், ஆயர்கள் நியமனத்தில் திருத்தந்தையின் ஆணையை ஏற்க வேண்டும், இல்லாவிடில் அவர் திருஅவையைவிட்டு நீக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்தார் திருத்தந்தை. இவ்வாறு மூன்று முறைகள் எச்சரிக்கை அறிக்கை விடுத்தார் திருத்தந்தை 7ம் கிரகரி.

இதற்கிடையே, கத்தோலிக்க திருஅவைக்கும், பேரரசுக்கும் இடையே நிலவிய அரசியல் ஆதிக்கப் பிரச்சனையில், பேரரசர் 4ம் ஹென்ரி, எதிர் திருத்தந்தையாக, 3ம் கிளமென்ட் அவர்களை நியமித்தார். திருத்தந்தையின் எச்சரிக்கை வெளிவந்த சமயம், பேரரசர், சாக்ஸன் புரட்சியாளர்களைத் தோற்கடித்த களிப்பில் இருந்தார். அதனால், தனக்குத் தலையாட்டி பொம்மைகளாக இருந்த ஆயர்களுடன், Worms எனுமிடத்தில் மன்றம் ஒன்றை நடத்தினார். Hildebrand, தற்போது திருத்தந்தை அல்ல, ஆனால், அவர் போலியான துறவி என்று, அந்த மன்றத்தில் அறிவித்து, தன்னைப் புறம்பாக்குவதாக விடுத்த அச்சுறுத்தலுக்கு எதிராய் கண்டனம் தெரிவித்தார், பேரரசர் 4ம் ஹென்ரி. மேலும், பாப்பிறைப் பதவியிலிருந்து இறங்கி வா எனவும், அவர் திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பினார் பேரரசர். இதையொட்டி, திருத்தந்தை அவர்கள், பேரரசரையும், அவரோடு சேர்ந்த ஆயர்களையும் திருஅவையைவிட்டு புறம்பாக்குவதாக அறிவித்தார். இவ்வாறு பேரரசர் திருத்தந்தைக்கு கொடுத்த தொல்லைகளையடுத்து, அவரை திருஅவையைவிட்டு புறம்பாக்குவதாக மூன்று முறைகள் எச்சரிக்கை விடப்பட்டார்

இந்த பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியது. இதைப் பயன்படுத்தி, பேரரசர் 4ம் ஹென்ரியின் பகைவர்கள் அவருக்கு எதிராக அணிதிரண்டனர். இதற்கு அஞ்சிய பேரரசர், திருத்தந்தையை ஜெர்மனிக்கு அழைத்தார். தான் ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்று சொல்லி, தனக்கு ஆதரவளித்த மனைவி மற்றும் இளைய மகனுடன் 1077ம் ஆண்டு சனவரியில், கனோசாவிலுள்ள மத்தில்டா அரண்மனைக்குச் சென்றார் பேரரசர். ஆனால் திருத்தந்தை ஜெர்மனிக்குச் சென்ற வழியில், பேரரசரைச் சந்தித்தார். பேரரசரும், தவ உடையில், பனி நிறைந்த பகுதியில் வெறுங்காலுடன் மூன்று நாள்கள் நின்று திருத்தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். திருத்தந்தையும், பேரரசர் 4ம் ஹென்ரியை, பதவியிலிருந்து இறங்கவிடாமல், அவருக்கு மன்னிப்பு அருளினார். இருந்தபோதிலும், ஹென்ரியின் பகைவர்கள் அவரை விடுவதாயில்லை. அவரைப் பதவியிறக்கம் செய்துவிட்டு, ருடோல்ப் என்பவரை, ஜெர்மானிய பேரரசராக நியமித்தனர் எதிரிகள். இதற்குப் பின்னர், இருதரப்பினருமே திருத்தந்தையிடம் முறையிட்டு, அதில் ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். திருத்தந்தையின் முடிவை பேரரசர் 4ம் ஹென்ரி ஏற்பதாயில்லை. எனவே மீண்டும் அவlரைத் திருஅவையைவிட்டு புறம்பாக்கினார் திருத்தந்தை. அத்துடன், அவர் இன்னும் சில மாதங்களில் போரில் தோற்கடிக்கப்படுவார் அல்லது இறப்பார் என அறிவித்தார் திருத்தந்தை 7ம் கிரகரி. ஆனால், பேரரசர் 4ம் ஹென்ரி அவர்கள், புதிய ஜெர்மானிய பேரரசர் ருடோல்ப் அவர்களைத் தோற்கடித்ததால், இத்திருத்தந்தையின் இந்த வாக்கு பலிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, ஜெர்மனியில் பொதுமக்கள், திருத்தந்தைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அதற்குப்பின் நடந்தது என்ன? 

05 December 2018, 13:24