தேடுதல்

கர்தினால் Yeom Soo-jung கர்தினால் Yeom Soo-jung  

கொரியாவின் அமைதிக்கு செபமும் பொறுமையும் தேவை

உண்மையான அமைதி கடவுளின் கொடை என்றும், செபத்தின் வழியாக இதனைப் பெற இயலும் என்றும் கூறியுள்ள கர்தினால் Yeom Soo-jung அவர்கள், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ நாம் தொடர்ந்து செபிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கொரியாவில் அமைதியைக் கொணரும் பாதை, நீளமானதும், கடினமானதும் என்பதால், அதற்கு, பொறுமை காப்பதும், தொடர்ந்து செபிப்பதும் இன்றியமையாதவை என்று, தென் கொரிய கர்தினால், Andrew Yeom Soo-jung அவர்கள், தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக். 2:13,14) என்ற தலைப்பில் கிறிஸ்மஸ் செய்தியை வெளியிட்டுள்ள, சோல் பேராயர், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், இவ்வாண்டில் இரு கொரிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பின்னர், கொரிய தீபகற்பத்தில் அமைதியான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின், "அவனியில் அமைதி (Pacem in terris)" என்ற திருமடலை மேற்கோள் காட்டி எழுதியுள்ள கர்தினால் Yeom Soo-jung அவர்கள், இப்பூமியில் அமைதி, கடவுளின் திட்டங்களில் உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் அமைதி, அன்பும், ஒருமைப்பாடும், பாதுகாப்பு உணர்வும்  நிறைந்த சூழலில், உண்மை மற்றும் நீதியால் அமைக்கப்படுவதாகும் என்று கூறியுள்ள, கர்தினால் Yeom Soo-jung அவர்கள், உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வரையறையற்ற மன்னிப்புக்கும், பகிர்வுக்கும் இட்டுச்செல்லும் இரக்கப் பண்பை நாம் எப்போதும் நம் மனங்களில் கொண்டிருக்க வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதையும், தென் கொரிய கர்தினால் அவர்கள், தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2018, 15:05