தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு 

கொரிய தீபகற்பத்தில் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு

பிரிந்து வாழ்ந்த குடும்பம், மீண்டும் ஒருங்கிணைந்து வரும்போது உருவாகும் மகிழ்வே, வட, மற்றும் தென் கொரிய நாடுகளின் ஒருங்கிணைப்பில் வெளிப்படுகிறது - கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சில காலம் பிரிந்து வாழ்ந்தபிறகு, மீண்டும் ஒருங்கிணைந்து வரும்போது உருவாகும் மகிழ்வே, வட, மற்றும், தென் கொரிய நாடுகளின் ஒருங்கிணைப்பில் வெளிப்படுகிறது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில், ஆர்த்தடாக்ஸ் திருஅவை உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, கான்ஸ்டான்டினோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், அந்நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள வேளையில் இவ்வாறு கூறினார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து வருவதைத் தடுப்போர், தங்கள் சொந்த நலனை முன்னிறுத்துகின்றனர் என்பதை எடுத்துரைத்த முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், ஒரு குடும்பம் அன்பில் இணைந்து வருவதற்கு மேலாக, எந்த ஒரு நோக்கமும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர், சோல் மாநகரில் எழுப்பப்பட்ட புனித அந்திரேயா ஆலயத்தில் நிகழும் சிறப்பு வழியாட்டில் கலந்துகொள்ளும் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், டிசம்பர் 7, இவ்வெள்ளியன்று, தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்களைச் சந்திக்கிறார்.

டிசம்பர் 8, இச்சனிக்கிழமை, கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காக, புனித அந்திரேயா ஆலயத்தில், முதுபெரும் தந்தை முன்னின்று நடத்தும் ஒரு சிறப்பு வழிபாட்டில், தென் கொரிய கலாச்சாரத் துறையின் அமைச்சர் Do Jong-hwan அவர்கள் கலந்துகொள்வார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 15:32