2019 - புதிய ஆண்டை வரவேற்கும் பள்ளிக் குழந்தைகள் 2019 - புதிய ஆண்டை வரவேற்கும் பள்ளிக் குழந்தைகள் 

2019 - புத்தாண்டு சிறப்புச் செய்தி

பழைய ஆண்டு ஒன்று முடிவடைந்து, புதிய ஆண்டு ஒன்று மலர்கின்ற இத்தருணம், சுற்றமும் நட்பும் சூழ, நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நேரம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புத்தாண்டு சிறப்புச் செய்தியை உருவாக்கி வழங்குவோர் – திரு. இரான்சம் மற்றும் திரு. நவராசன்:

பிறந்தது புத்தாண்டு!

ஊரெங்கும் உற்சாக கோலாகலம்! நள்ளிரவு வானத்தை ஒளிமயமாக்குகின்ற வாணவேடிக்கைகள்! விருந்து அரங்குகளில் உல்லாச ஆரவாரங்கள்! ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள்! இத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணம், புத்தாண்டுப் பிறப்பு! ஆம்! புதியதொரு ஆண்டு பிறக்கின்றது. பழைய ஆண்டு ஒன்று முடிவடைந்து, புதிய ஆண்டு ஒன்று மலர்கின்ற இத்தருணம், சுற்றமும் நட்பும் சூழ, நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நேரம் தான். கொண்டாட்டங்களோடு கூட, இதுநாள் வரை நாம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கவேண்டிய வேளையும் இதுவே. புத்தாண்டு தொடங்குகின்ற இந்த நேரம், நமது வாழ்க்கைப் பாதையின் சுவடுகளை சிந்தித்துப் பார்க்கவேண்டிய நேரமாகவும் உள்ளது.

கடந்த ஆண்டிலே கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளையும், புதிய ஆண்டிலே வரவிருக்கின்ற நலன்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்திட சரியான தருணம், இந்த புத்தாண்டு பிறக்கின்ற நேரமே. நிறைவடைந்த ஆண்டில் நம்மோடு வழித்துணையாக வந்து, எல்லா நிகழ்வுகளிலும், உடனிருந்து காத்த இறைவனுக்கு, நன்றி சொல்வோம். கடந்த 365 நாள்களையும், சிறப்பானதாக ஆக்கித்தந்த உறவினர்-நண்பர்களுக்கும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுவோம். சென்ற ஆண்டில் நிகழ்ந்தவற்றில், வெற்றிகளும் இருக்கலாம்; தோல்விகளும் இருக்கலாம். வெற்றிகளுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், தோல்வியில் துணைநின்றவர்களுக்கும் தவறாமல் நன்றி சொல்லுவோம்.

ஒரு நிகழ்வின் முடிவு, மற்றொரு நிகழ்வின் தொடக்கமாக இருப்பதைப்போல, ஓர் ஆண்டின் முடிவு, மற்றோர் ஆண்டின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. கனிந்த உள்ளத்தோடும், உறுதியான மனதுடனும் புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்து, துணிவு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன், வெற்றிப் பாதையில் நடைபயிலும்போது, நமது இலக்கை எட்டிப் பிடிப்பது எளிது. முன்னோக்கிய பார்வையே, வெற்றிப் பாதையின் முதல் விதி. இறைவாக்கினர் எசாயா நூலின் 43ம் அதிகாரம், 18, 19 ஆகிய வசனங்களில், கடவுள் இவ்வாறு உரைக்கிறார்: "முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்".

கடந்த காலத்தில் நடந்தவற்றை மாற்றி அமைப்பதற்காக, எவரும், காலஒட்டதில், பின்னோக்கி செல்லுதல் இயலாது. எனவே, வருங்கால வாழ்வை வளமானதாக்கிட, இப்போது, நம்முன்னே இருக்கின்ற நிகழ்காலத்தில், நேர்பட வாழ்வோம். இறைமகன் இயேசுவோடு இணைந்திருந்தோமானால், பழையவற்றை அகற்றி, புதிய பொலிவோடு நம் வாழ்க்கை அமைவது உறுதி. இதையே திருத்தூதர் புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலில் 5ம் அதிகாரம் 17ம் வசனத்தில், “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!” என்று கூறுகிறார்.

எனவே, பழைய ஆண்டைக் கடந்து, புதிய ஆண்டுக்குள் நுழைகின்ற இந்நேரத்தில், நாமும், பழைய நினைவுகளை, மனக்கசப்புகளைக் களைந்துவிட்டு, புதியதொரு வழிமுறையில், நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். கடந்த காலத்தில், நம்மைக் காயப்படுத்திய நபர்களை, நிகழ்வுகளை மன்னித்து மறக்கவும், புதிய உறவுகளை, கனிவோடு ஏற்றுக்கொள்ளவும் தயாராவோம். நமது வாழ்க்கைப் பாதையை சீரமைத்துக் கொள்வதற்கு, இந்த புத்தாண்டு, நமக்கொரு வாய்ப்பை தந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.  

எதிர்வரும் நாள்களை வளமானதாக்குகின்ற வாக்குறுதிகளோடு, இந்தப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. எதுவும் எழுதப்படாத, 365 வெற்று பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் போல, புதிய ஆண்டு பிறக்கின்ற வேளையில், அதில் எழுதுவதற்கான எழுதுகோல், நம் கையில் இருப்பதை நாம் கவனிக்கவேண்டும். வெறுமையாக இருக்கின்ற இந்த புத்தகத்தின் பக்கங்களிலே, நேர்த்தியான கதையொன்றை எழுதுகின்ற வாய்ப்பும், பொறுப்பும், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்டிலே, இறைவன் நமக்குத் தரவிருக்கின்ற ஆசீரை, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் 36ம் அதிகாரம் 25 முதல் 27 வரையிலான வசனங்கள், கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றன: "நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்".

புதிய ஆவியையும், புதிய இதயத்தையும் தந்து, நாளும் நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் பதம் பணிந்து மன்றாடுவோம்:

அனைத்தையும் புதியதாக ஆக்குகின்ற எல்லாம் வல்ல தந்தையே! நலன்கள் அனைத்தின் ஊற்று நீரே. ஒரு வருடம் முடிவடைகின்ற இந்நேரத்தில், நன்றியுணர்வோடு உம் திருமுன்னே நிற்கின்றோம். கடந்த ஆண்டு முழுவதும் நாங்கள் பெற்றுக்கொண்ட அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக, வாழ்வென்னும் ஒப்பற்றக் கொடைக்காக, எங்கள் குடும்பத்தார்-நண்பர்களுக்காக உமக்கு நன்றி, கூறுகிறோம்.

இறைவா! கடந்த 2018ம் ஆண்டு முழுவதும் எம்மைப் பாதுகாத்து, இந்த புதிய ஆண்டில் கொண்டுவந்து சேர்த்த உமது கருணைக்கு நன்றி! எங்கள் வாழ்வில் உமது உடனிருப்பு, எவ்வளவு இன்றியமையாதது என்பதை, 2018ம் ஆண்டில், நாங்கள் பெற்றுக்கொண்ட நலன்களும், எதிர்கொண்ட கடினமான தருணங்களும், எங்களுக்குச் சுட்டிகாட்டுகின்றன.

பிறந்திருக்கின்றப் புத்தாண்டிலும், உமது அருள்துணை எம்மோடு இருப்பதாக! எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும், நாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலும், உமது தூய ஆவியாரின் உடனிருப்பு எம்மை வழிநடத்துவதாக! உமது ஞானமும், வல்லமையும், இடையறாது எம்மில் நிலைத்திருப்பதாக! இந்தப் புத்தாண்டில், எங்கள் இதயங்களும், மனங்களும், வாழ்வின் எல்லா அம்சங்களும், புதுப்பிக்கப்படுவதாக! இதன் பயனாக, எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், பழையன கழிந்து, புதுப் பிறப்படைவதாக! உமது அன்பும், சமாதானமும், இந்தப் புத்தாண்டு முழுவதும், எம்மோடு இருப்பதாக! ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே, ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2018, 12:43