தேடுதல்

Vatican News
அங்கோலாவில் கர்தினால் ஃபிலோனி அங்கோலாவில் கர்தினால் ஃபிலோனி 

அங்கோலாவில் கர்தினால் ஃபிலோனியின் மேய்ப்புப்பணி பயணம்

கிறிஸ்துவை நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம் பெறுவது, அருள்பணியாளர்களுக்குத் தேவையான ஒரு பண்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைபரப்புப் பணியாளர்கள் கொண்டிருந்த தீராத ஆர்வத்துடன், அங்கோலா நாட்டில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், துறவியர் அனைவருக்கும் தன் மனமார்ந்த பாராட்டுக்களை வழங்குவதாக, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள் கூறினார்.

Angola மற்றும் São Tomé நாடுகளின் ஆயர் பேரவை, தன் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அந்நாடுகளுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் ஃபிலோனி அவர்கள், நவம்பர் 12 இத்திங்களன்று, சவுரிமோவில் (Saurimo) அருள்பணியாளர்களைச் சந்தித்த வேளையில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்துவை நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம் பெறுவது, அருள்பணியாளர்களுக்குத் தேவையான ஒரு பண்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள சொற்களை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், பல்வேறு பணிகளுக்கிடையே, கிறிஸ்துவை சந்திக்க நேரம் ஒதுக்குவது, அருள் பணியாளர்களின் முக்கிய கடமை என்று கூறினார்.

உலகெங்கிலும், குறிப்பாக, அங்கோலாவிலும் ஒரு சில அருள்பணியாளர்களின் தவறுகள், மக்களுக்கு பெரும் இடறலாக மாறியுள்ளதைக் குறித்துப் பேசிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், பணிவுடனும், நம்பிக்கையுடனும் எழுப்பப்படும் செபமே, இந்த இக்கட்டிலிருந்து நம்மை மீட்கும் என்று எடுத்துரைத்தார்.

நவம்பர் 10, கடந்த சனிக்கிழமை, கர்தினால் ஃபிலோனி அவர்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணம், நவம்பர் 20 அடுத்த செவ்வாயன்று நிறைவு பெறும்.

14 November 2018, 15:41