தாக்குதலுக்கு உள்ளான சிக்காகோ கருணை மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான சிக்காகோ கருணை மருத்துவமனை 

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக அமெரிக்க ஆயர்கள்

மருத்துவமனை ஒன்றில், உயிர்கள் பறிக்கப்பட்ட நிகழ்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு மற்றுமொரு வேதனை அடையாளமாக மாறியுள்ளது - கர்தினால் டினார்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்களைக் காக்கவும், நோய்களைக் குணமாக்கவும் உருவாக்கப்பட்ட மருத்துவமனையில், உயிர்கள் பறிக்கப்பட்ட நிகழ்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு மற்றுமொரு வேதனை அடையாளமாக மாறியுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள் கூறினார்.

சிக்காகோ நகரில் இயங்கிவரும் கருணை மருத்துவமனையில், நவம்பர் 19 இத்திங்களன்று நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலில், கொலையாளி உட்பட, நால்வர் இறந்ததையடுத்து, கர்தினால் டினார்டோ அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்ட வேளையில் இவ்வாறு கூறினார்.

துப்பாக்கி பயன்பாடு குறித்த சட்டங்களும், அதைக் குறித்து மக்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களும் மாறுவதற்கு, அமெரிக்க ஆயர்கள், தொடர்ந்து குரல் எழுப்பி வருவர் என்று, கர்தினால் டினார்டோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

32 வயதான யுவான் லோபஸ் என்பவர் மேற்கொண்ட இந்தத் தாக்குதலில், ஒரு மருத்துவர், மருத்துவ மாணவி, மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கித் தாக்குதல்களில், இதுவரை 308 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை, பதிவு செய்யப்பட்டுள்ள 47,472 துப்பாக்கி வன்முறை நிகழ்வுகளில், 12,056 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழும் துப்பாக்கி வன்முறைகளில், 54 விழுக்காட்டு நிகழ்வுகள், குடும்பங்களில் ஏற்படும் துன்பங்கள், மற்றும் வன்முறைகளின் எதிரொலியாக ஏற்படுகின்றன என்று மற்றுமொரு ஆய்வு கூறுகிறது. (USCCB/ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:56