தேடுதல்

முதல் உலகப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி முதல் உலகப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி 

வாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்

இறப்பு குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை. வாழ்கின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நல்ல நேர்மறை சிந்தனைகளோடு வாழ்ந்தால் போதும்

மேரி தெரேசா& அருள்பணி ஜோஸ் - வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில், இறந்த உற்றார் உறவினரை அதிகம் நினைத்து, அவர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தியடைய சிறப்பு செபங்கள் செய்கின்றனர். கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று கல்லறைகளைச் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்கின்றனர். ஒருநாள் ஒரு மனிதர் திடீரென இறந்து போனார். அவர் அதை உணரும்போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவர் அருகில் வந்தார். வா மகனே, நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது என்றார், கடவுள். இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்னாவது? என்றார் மனிதர். மன்னித்துவிடு மகனே, உன்னைக் கொண்டுசெல்வதற்கான நேரம் இது என்றார், கடவுள்.

அந்தப் பெட்டியில் என்ன உள்ளது? என்றார் மனிதர். உன்னுடைய உடைமைகள் என்றார், கடவுள். என்னுடைய உடைமைகளா! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் இருக்கின்றனவா? என்றார் மனிதர். ஆம். நீ கூறியவை அனைத்தும்

உன்னுடையவை அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்குத் தேவையானவை என்றார் கடவுள். அப்படியானால் என்னுடைய நினைவுகள்?  என்றார் மனிதர். அவை காலத்தின் கோலம் என கடவுள் சொல்ல, என்னுடைய திறமைகள்?  என மனிதர் கேட்க, அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டவை என்றார் கடவுள். அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா? என மனிதர் கேட்க, மன்னிக்கவும்! குடும்பமும் நண்பர்களும்

நீ வாழ்வதற்கான வழிகள் என்றார் கடவுள். அப்படி என்றால் என் மனைவி மற்றும் பிள்ளைகள்? உன் மனைவியும் பிள்ளைகளும் உனக்குச் சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். உன் உடலும் உனக்குச் சொந்தமானதல்ல. உடலும் குப்பையும் ஒன்று என்றார் கடவுள். என் ஆன்மா? என வியப்புடன் மனிதர் கேட்க, அதுவும் உன்னுடையது அல்ல என்றார் கடவுள். மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கித் திறந்த மனிதர் காலிப்பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கண்ணில் நீர்வழிய, என்னுடையது என்று எதுவும் இல்லையா?  என கடவுளிடம் கேட்க, கடவுள் சொன்னார் - நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. அதுதான் உண்மை. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியிலும் நீ மகிழ்வாக வாழ வேண்டும். எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே. உன்னுடைய வாழ்க்கையை வாழ். மகிழ்ச்சியாக வாழ். அது மட்டுமே நிரந்தரம். உன் இறுதி காலத்தில்

நீ எதையும் உன்னுடன் கொண்டுபோக முடியாது

இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த இறப்பு ஒருவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஒருவருக்கு தான் எப்போது இறக்கப் போகிறோம் என்ற உண்மை தெரிந்துவிட்டால், அவர் வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிவிடும். இணையத்தில் இறப்பு பற்றிய உண்மைகள் என்று ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஒருவர் இறந்து மூன்று நாட்களுக்குள், உடலில் உள்ள செரிமான நொதிகள் உண்ண ஆரம்பித்துவிடும். இறந்த உடலைப் புதைக்கும் பழக்கமானது ஏறக்குறைய 3,50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கின்றதாம். நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் 35 மில்லியன் செல்கள் இறக்கின்றன. உலகில் ஆண்டுதோறும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவர்களின் தவறுகளால் இறக்கின்றனர்.  ஒருவர் இறக்கும்போது, அவரின் கேட்கும் திறன்தான் இறுதில் மடியும். உலகில் இளம் தலைமுறையினர் அதிகம் இறப்பதற்கு முதன்மையான காரணம் கார் விபத்துக்கள். இறப்பு பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், குளித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜோஸ் அவர்கள் இறப்பு பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்

இறைவன் நம்மை எந்த நேரத்தில் அழைப்பார் என்பது நமக்குத் தெரியாது. இறப்பு குறித்து நாம் அஞ்சவும் தேவையில்லை. வாழ்கின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதையும் மகிழ்வோடு, நல்ல நேர்மறை எண்ணங்களோடு, உயிர்களுக்குத் துன்பம் தராமல் வாழ்ந்தாலே போதுமானது. நாம் மகிழ்வாக இருப்பதுடன், பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துவோம். அந்தந்த நொடிப்பொழுதைச் சிறப்புறச் செய்வோம். 

ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2018, 14:50