தேடுதல்

Vatican News
சிரியா போரில் பாதிக்கப்பட்ட கோவில் சிரியா போரில் பாதிக்கப்பட்ட கோவில்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 12

மத்திய காலத்தில் திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள் ஏற்படுத்திய புரட்சி, கிறிஸ்தவ உலகில் திருத்தந்தையரை தனிநிகரற்ற தலைவராக ஆக்கியது

மேரி தெரேசா – வத்திக்கான்

பேரரசர் Charlemagne அல்லது பேரரசர் பெரிய சார்லஸ் அல்லது முதலாம் சார்லஸ் எனப்படுபவர், கி.பி.768ம் ஆண்டிலிருந்து, ஜெர்மானிய பிராங் இனத்தவர் அரசராகவும், 774ம் ஆண்டிலிருந்து, இத்தாலியின் லொம்பார்தி இனத்தவர் அரசராகவும், 800ம் ஆண்டிலிருந்து புனித உரோமைப் பேரரசின் அரசராகவும் விளங்கியவர். மத்திய காலத்தின் ஆரம்பக்கட்டத்தில், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஒன்றிணைத்தவர் இவர். இவர் காலத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வீழ்ச்சியடைந்திருந்த மேற்கு உரோமைப் பேரரசின் பேரரசராக, முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டவர் இவர். ஆயினும், பேரரசர் பெரிய சார்லஸ் உருவாக்கிய பேரரசு, உரோமைப் பேரரசின் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இப்பேரரசில், உரோமையரின் சட்டமோ, உரோமையரின் படைகளோ இல்லை. உரோம் நகரும் அதன் தலைநகராக அமையவில்லை. நகர்ப்புற மையங்கள் கிடையாது. வர்த்தகமும் அவ்வளவாக இல்லை. அப்பேரரசின் அதிகாரிகளும், நீதிபதிகளும் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாக இல்லை. அதன் மாநிலத் தலைவர்களாக, பழங்குடியினத் தலைவர்களே இருந்தனர். இப்பேரரசு, தனக்கேயுரிய கருத்தியல்களைக் கொண்டிருந்தது. ஆனால், ஐரோப்பாவின் பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்தின் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் திருத்தந்தை 7ம் கிரகரியின் பங்கு முக்கியமானது.   

Sovana வின் Hildebrandல் பிறந்த திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், 1073ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியிலிருந்து, 1085ம் ஆண்டில் அவர் இறக்கும்வரை திருத்தந்தையாகப் பணியாற்றியவர். திருஅவையில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவர். பேரரசர் பெரிய சார்லஸ் ஆட்சியிலிருக்கும்வரை, திருத்தந்தையின் தலைமைத்துவம் பற்றி எந்தப் பிரச்சனையும் எழவில்லை. பேரரசின் மக்களின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்து அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது, பேரரசரின் வேலையாக இருந்தது. பேரரசர் முடிசூட்டப்பட்ட நிகழ்வில், திருத்தந்தை, பேரரசரின் கரங்களில் உடைவாளை வைக்கும் சடங்கு, இதற்கு அடையாளமாக இருந்தது. பெரிய சார்லஸ் இறந்த பின்னர், திருத்தந்தையர், கிறிஸ்தவ உலகின் மீது தங்களின் ஒப்புயர்வற்ற அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சித்தனர். திருத்தந்தையரின் இந்த முயற்சி, ஒன்பதாம் நூற்றாண்டில் ஓரளவு வெற்றி பெற்றது. திருத்தந்தை ஸ்டீபன் அவர்கள், 816ம் ஆண்டில் பெரிய சார்லஸ் மகனான, லூயிஸ் பயஸ் அவர்களுக்கு முடிசூட்டும்போது, இந்த மகுடம், தூய பேதுருவின் வழிவருபவரிலிருந்து பெறுவது என்று சொல்லி, திருத்தந்தையரின் உயர் அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். பேரரசர் லூயிசின் மகன் முதலாம் லோத்தர் 823ம் ஆண்டில் உரோம் நகருக்கு வந்து முடிசூடியவேளையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. திருத்தந்தை முதலாம் நிக்கொலாஸ் அவர்களின் காலத்தில் (கி.பி.858–867), பேரரசரின் கடமை, உரோம் திருஅவையைப் பாதுகாப்பவராகச் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

கி.பி.882ம் ஆண்டில் காலமான திருத்தந்தை 8ம் ஜான் அவர்கள், திருத்தந்தையரின் அதிகாரத்தை மேலும் ஒருபடி உயர்த்தினார். அதாவது, திருத்தந்தையர், பேரரசருக்கு முடிசூட்டுவதோடு, திருத்தந்தையே பேரரசரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தினார். 875ம் ஆண்டில், சாரலஸ் பால்டு அவர்களுக்கு திருத்தந்தை முடிசூட்டியபோது இது உறுதிப்படுத்தப்பட்டது. உரோம் இலாத்தரனில் திருத்தந்தையர் தங்கியிருந்த இல்லம், முதுபெரும்தந்தையர் இல்லம் என அழைக்கப்பட்டு வந்தது மாற்றப்பட்டு, இலாத்தரன் புனித மாளிகை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனினும், அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் திருத்தந்தைக்கும், பேரரசருக்கும் இடையேயுள்ள பிணைப்பு குறையத் தொடங்கியபோது,   திருத்தந்தையின் உன்னத அதிகாரமும் மறையத் தொடங்கியது. பேரரசர் பெரிய சார்லசின் வாரிசுகளுக்கு இடையே தொடர்ந்து நிலவிய பிரிவினைகளும், சண்டைகளும், உரோமைப் பேரரசு சிதைவதற்கு முக்கிய காரணமாகும். இதனால் திருத்தந்தையரின் அதிகாரமும் மங்கத் தொங்கியது. உரோம் குழுக்களிடம் அடிமையாக மாறும் நிலை ஏற்பட்டது. திருத்தந்தையர், தங்களின் அனைத்து நன்னெறி மற்றும் ஆன்மீக அதிகாரங்களை இழந்தனர். இந்நிலை, தனது 18வது வயதில் திருத்தந்தையான 12ம் ஜான் அவர்கள் காலத்தில் மிகவும் மோசமடைந்தது.

பின்னாளில், புதிய அரசப் பரம்பரையின்கீழ் பேரரசை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் முயற்சி இடம்பெற்றது. இந்த முயற்சியில் 912ம் ஆண்டிலிருந்து, 973ம் ஆண்டு மே 7ம் தேதி வரை, புனித உரோமைப் பேரரசை ஆட்சி செய்த பேரரசர் பெரிய ஒத்தோ (Otto), திருஅவையை அதிகம் பயன்படுத்தினார். ஆயர்களுக்கு குழந்தைகள் கிடையாது, மேலும் அவர்கள் கல்வியறிவு நிறைந்தவர்கள் என்பதாலும், ஓர் ஆயர் இறந்தால், அவருக்குப்பின் வாரிசு சண்டைகள் இடம்பெறாது என்பதாலும் அவர்களைத் தனது பேரரசில், முக்கிய ஒத்துழைப்பாளர்கள் எனக் கருதினார் பேரரசர், பெரிய ஒத்தோ. இதற்கு திருத்தந்தையின் ஒத்துழைப்பையும் அவர் நாடினார். அதனால் திருத்தந்தையால் முடிசூட்டப்படும் வழிகளைத் தேடினார்.

14 November 2018, 14:50