தேடுதல்

கிறிஸ்தவ புனிதர்களின் கண்ணாடி ஓவியங்கள் கிறிஸ்தவ புனிதர்களின் கண்ணாடி ஓவியங்கள் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 11

“ஜெர்மனியின் திருத்தூதரான” ஆயர் போனிபாஸ் அவர்களும், அவரோடு இருந்த 53 பேரும், கி.பி.754ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.

மேரி தெரேசா – வத்திக்கான்

புனித போனிபாஸ் அவர்கள், ஏறத்தாழ 723ம் ஆண்டில், ஜெர்மனியின் Hesse பகுதிக்கு ஒரு சிறு குழுவினருடன் சென்றார். அப்பகுதியில், Geismaக்கு அருகில் வாழ்கின்ற மக்கள், குளிர்காலத்தின் மத்தியில், Thor எனும் இடியின் கடவுளுக்கு, “இடியின் ஓக்” எனப்படும் புனித மரத்திற்கடியில், மனிதர்களை, குறிப்பாக, குழந்தைகளைப் பலிகொடுப்பார்கள் என்பதை அறிந்திருந்தார் போனிபாஸ். எனவே அவர், ஒரு சகோதர ஆயரின் ஆலோசனையின்பேரில், அந்த மரத்தை அழிக்க நினைத்தார். இந்த மரத்தை வெட்டுவதன் வழியாக மனிதர்கள் பலி கொடுக்கப்படுவதை நிறுத்த முடியும் மற்றும், Thor தெய்வத்தின் சினத்தினால் வெளிப்படும் மின்னலால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தை அகற்ற முடியும் என நம்பினார்.

அந்த கிராம மக்கள், ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்மஸ் நள்ளிரவில்தான், தங்கள் இடியின் தெய்வத்திற்கு குழந்தைகளைப் பலிகொடுப்பார்கள் என்பதை அறிந்திருந்த ஆயர் போனிபாஸ் அவர்களும், அவரின் குழுவினரும், அதைத் தடுப்பதற்காக அந்த ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவில் அந்த ஓக் மரம் பக்கம் சென்றனர். அன்று பலி கொடுப்பதற்காக, அந்த மரத்திற்கடியில், ஒரு பெரிய கல்லின் மீது ஒரு குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. பலி கொடுப்பவர், குழந்தையை வெட்டுவதற்காக, தன் அரிவாளை ஓங்கினார். அப்போது ஆயர் போனிபாஸ் அவர்கள், அவரை இடைமறித்தார். அந்த மரத்திற்கடியில் கூடியிருந்த மக்களிடம், இது இடியின் ஓக், உங்களின் புனித மரம் என்றார். பின்னர், தான் வைத்திருந்த ஆயர் கோலைக் காட்டி, இது கிறிஸ்துவின் சிலுவை, இது, போலியான Thor தெய்வத்தை உடைக்கும் என்று சொல்லி, தன் ஆயர் கோலால் அந்தப் பெரிய கல்லை அடித்தார். அது உடைந்தது. குழந்தையும் அற்புதமாக காப்பாற்றப்பட்டது. பின்னர், ஆயர் போனிபாஸ் அவர்கள், அந்த மக்களைப் பார்த்து,

காட்டின் பிள்ளைகளே, இந்த இரவில் எந்த இரத்தமும் சிந்தப்படக் கூடாது. இந்த இரவு, மனித சமுதாயத்தின் மீட்பரும், எல்லாம்வல்லவரின் மகனுமாகிய, கிறிஸ்து பிறந்த இரவு. உங்களின் Baldurவைவிட கிறிஸ்து அழகானவர், உங்களின் Odinஐவிட கிறிஸ்து ஞானமுள்ளவர். உங்களின் Freyaவைவிட, கிறிஸ்து நல்லவர். நீங்கள் வீணாக வழிபட்டுவந்த தெய்வம் இறந்துவிட்டது. இந்தத் தெய்வத்தின் நிழல் என்றென்றும் மறைந்துவிட்டது. இந்த இரவு தொடங்கி, கிறிஸ்து உங்களில் வாழத் தொடங்குகிறார். இரத்தத்தைக் குடிக்கும் இந்த மரம், இனிமேல் ஒருபோதும் உங்கள் பூமியை இருளடையச் செய்யாதிருக்கட்டும். ஆண்டவரின் பெயரால் இந்த மரத்தை நான் அழிப்பேன் என்றார் ஆயர் போனிபாஸ். பின்னர், அந்த இடத்தில் இருந்த ஒரு சிறிய ஊசியிலை கூம்பு மரத்தைச் சுட்டிக் காட்டி, இந்தக் காட்டின் இளம் குழந்தையான இந்த மரம், இந்த இரவில் உங்களின் புனித மரமாகட்டும். இது அமைதியின் மரமாக இருக்கும். இம்மரம் எப்பொழுதும் பசுமையாக இருப்பதால், இது, முடிவில்லாத வாழ்வின் அடையாளமாக இருக்கட்டும். இது விண்ணை நோக்கி உள்ளது. எனவே இம்மரம், குழந்தை இயேசுவின் மரம் என அழைக்கப்படட்டும். இதை காட்டில் அல்ல, உங்கள் வீடுகளில் வைத்திருங்கள். இனிமேல் ஒருபோதும் இரத்தம் சிந்தப்படாமல் இந்த மரம் உங்களைப் பாதுகாக்கும். அதேநேரம், அன்பு மற்றும் பாசத்தின் கொடைகளை இம்மரம் கொணரும் என்றார். இந்த மரத்தை, ஜெர்மானியர்கள், கிறிஸ்மஸ் மரமாக, இந்நாள்வரை, கிறிஸ்மஸ் காலத்தில் வீடுகளில் வைத்து அலங்கரிக்கின்றனர்.

ஆயர் போனிபாஸ் அவர்கள், அம்மக்களிடம் பேசிய பின்னர் அந்த இடத்தில் கிடந்த கோடரியை எடுத்துச் சுழற்றினார். அந்நேரத்தில், அந்தக் காட்டிலிருந்து பலத்த காற்று வீசியது. அந்த மரம் நான்கு துண்டுகளாக முறிந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்த மக்கள், தங்கள் கடவுள் கடும் சினங்கொண்டு பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார் என்று, பயந்துகொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எனவே தாங்கள் நம்பிய தெய்வம் பயனற்றது எனச் சொல்லி கிறிஸ்தவத்தை அவர்கள் ஏற்றனர். இதனால், ஜெர்மனியில் கிறிஸ்தவத்தைத் தழுவாது எஞ்சியிருந்த மக்களையும் மனந்திருப்பும் பணி ஆயர் போனிபாஸ் அவர்களுக்கு எளிதாக இருந்தது. பின்னாளில், போனிபாஸ் அவர்கள், அந்த இடத்தில் அந்த மரத்துண்டுகளை வைத்து ஓர் ஆலயம் எழுப்பினார் எனவும் சொல்லப்படுகின்றது. “ஜெர்மனியின் திருத்தூதரான” ஆயர் போனிபாஸ் அவர்கள், 725ம் ஆண்டு முதல், 735ம் ஆண்டுவரை Thuringia அதாவது, தற்போதைய ஜெர்மனி முழுவதும் சென்று நற்செய்தியை அறிவித்தார். 732ம் ஆண்டில் பேராயரானார். திருமறைக்கு முரணாக எழுந்த தப்பறைக் கொள்கைகளை எதிர்த்தார். 

 அரசர் Martel இறந்தபின்னர், அவரின் மகன்கள், Carloman, Pepin ஆகிய இருவருடன் சேர்ந்து திருஅவையை சீர்திருத்தும் பணியை மேற்கொண்டார் பேராயர் போனிபாஸ். இதன் விளைவாக, பிராங்க் இன அருள்பணியாளர்கள், திருத்தந்தையோடு நெருக்கமானார்கள். திருத்தந்தை Zachary அவர்கள், போனிபாஸ் அவர்களை, Mainz பேராயராக நியமித்தார். 751ம் ஆண்டில் மூன்றாம் பெப்பின் அரசராக முடிசூட்டப்பட்டார். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐரோப்பா முழுவதும், மத மற்றும் அரசியல் முன்னேற்றத்தில், திருத்தந்தையின் அதிகாரம் செல்வாக்குப்பெற அடித்தளமிட்டார் போனிபாஸ். தான் முதலில் மறைப்பணியாற்றிய Frisia பகுதியின் Dokkum சென்றார் போனிபாஸ். அங்கே, பழங்குடியினத்தவரை மனம் மாற்றும் சடங்குக்குத் தயாரித்துக்கொண்டிருந்தவேளையில்,  பழங்குடியினத்தவர்கள் அவர்களைக் கொல்ல வந்தனர். அப்போது பேராயரை, தன்னுடன் இருந்தவர்கள் காப்பாற்ற முனைந்தபோது, கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம் என்று, அவர் அவர்களை ஊக்குவித்தார். இவ்வாறு போனிபாஸ் அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவர்மேல் முதல் வெட்டு விழுந்தது. அவரது உயிர் பிரிந்தது. அவரோடு இருந்த 53 பேரும் அன்று மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். இது கி.பி.754ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இடம்பெற்றது. அப்போது பேராயர் போனிபாஸ் அவர்களுக்கு வயது எண்பது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:02