தேடுதல்

மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். - மாற்கு நற்செய்தி 13,26 மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். - மாற்கு நற்செய்தி 13,26 

பொதுக்காலம் 33ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

181118 ஞாயிறு சிந்தனை

1981ம் ஆண்டு, ஒருவர், தான் இறப்பதற்குமுன் எழுதிய உயிலில், 57,000 டாலர்கள் இயேசுவுக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார். இயேசு, இரண்டாம் முறை இவ்வுலகிற்கு வரும்போது, அவருக்கு பணம் தேவைப்படும் என்றும், அதுவரை, அந்தப் பணத்தை, அதிக வட்டிக்கு விடும்படியும், அவர் தன் உயிலில் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு சிரிப்புத்துணுக்கு போலத் தோன்றினாலும், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, நம்மிடையே நிலவும் தெளிவற்ற கருத்துக்களுக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இயேசுவின் இரண்டாம் வருகையையும், உலக முடிவையும் இணைத்து, வரலாற்றில் பலமுறை, பல்வேறு வதந்திகள் வலம் வந்துள்ளன. குறிப்பாக, நாம், 2000மாம் ஆண்டை நெருங்கிய வேளையில், இவ்வகை வதந்திகள், பல தீவிர குழப்பங்களை உருவாக்கின என்பதை அறிவோம். இந்தக் குழப்பங்களை மூலதனமாக்கி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில மதப் போதகர்களும், இலாபம் தேடினர் என்பதையும் நாம் வேதனையுடன் அறிந்துகொண்டோம்.

எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். அம்மடலில் கூறப்பட்ட விளம்பர வரிகள் இதோ:

"2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அம்மடலில் கூறப்பட்டிருந்தது.

வர்த்தக உலகினர் மேற்கொண்ட இந்த முயற்சிகளைக் காணும்போது, ஒரு சில கேள்விகள் எழுகின்றன. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் நினைத்தனரா? அல்லது, 'உலக முடிவு', 'இரண்டாம் வருகை' ஆகியவற்றை, கேலிப்பொருளாக மாற்றி, வேடிக்கை செய்தனரா என்பதில் தெளிவில்லை. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவே ஆனாலும் சரி, அவற்றை வைத்து, இலாபம் தேடுவதில், வர்த்தக உலகினர் தீவிரம் காட்டுகின்றனர் என்பது வேதனை தரும் உண்மை. அவர்கள் காட்டும் ஆர்வம், உறுதி, தீர்மானம், ஆகியவை, ஆன்மீக உலகத்தைச் சார்ந்தவர்களிடம் உள்ளனவா என்பது சந்தேகம்தான்.

உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு. கத்தோலிக்க வழிபாட்டில், ஒவ்வோர் ஆண்டையும், ஐந்து காலங்களாகப் பிரித்துள்ளோம் - திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக்காலம், உயிர்ப்புக் காலம், மற்றும், பொதுக்காலம். மே மாதத்தின் இறுதி நாள்களில் நாம் கொண்டாடிய தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைத் தொடர்ந்து, கடந்த 26 வாரங்களாக நாம் கடைபிடித்துவந்த பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு, கிறிஸ்து அரசர் திருநாள். அதைத் தொடர்ந்து வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறன்று, திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக்காலத்தின் இறுதியில், இறுதிக் காலத்தைப்பற்றி சிந்திக்க, இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.

இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே, இன்றைய வழிபாட்டின் வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?

ஆங்கிலத்தில், ‘last minute preparation’ – ‘இறுதி நிமிட தயாரிப்பு’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு. நாம் அனைவரும் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த, இனியும் அனுபவிக்கவிருக்கும் ஓர் அனுபவம் இது. நாம் எழுதப்போகும் தேர்வுகளுக்காக, பல நாட்களாக நாம் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், தேர்வு எழுதும் அரங்கத்தின் வாசலில் நின்றபடி எத்தனை ‘இறுதி நிமிட தயாரிப்பு’கள் செய்துள்ளோம்! வீட்டில் நிகழும் வைபவங்களுக்கு, பல நாட்கள் தயாரித்தாலும், வைபவத்திற்கு முந்திய இரவு, அரக்க, பரக்க, ஓடியாடி, வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலையில் சேர்வதற்குமுன் நடத்தப்படும் நேர்காணல், வீட்டுக்கு வரவிருக்கும் விருந்தினர்... என்று, கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். மேலே சொன்னவை அனைத்திலும், பொதுவாக மேலோங்கியிருக்கும் ஓர் உணர்வு, எதிர்பார்ப்பு.

நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் ஆகியவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? எடுத்துக்காட்டாக, நமக்கு மிக நெருங்கியவர்கள், மருத்துவமனையில், உடல்நலமின்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கெட்டதோ, அது எதிர்காலத்தோடு தொடர்புடையது...

எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது நமக்குள் ஏக்கம் எழுவதில்லையா? இத்தகைய சக்திக்காக இளவயதில் நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில், ‘அடுத்த நாள் தேர்வுக்கு வரப்போகும் கேள்விகளை முன்னரே தெரிந்துகொண்டால் நன்றாக இருக்குமே’ என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, பிறக்கப்போகும் குழந்தை, நமது ஒய்வுகால வாழ்க்கை ஆகியவற்றைப்பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?

எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்! கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்! எதிர்காலம் முழுவதும், "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால், பரவாயில்லை. ஆனால், அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி - நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது. நாம் அனைவரும் மரணத்தை, ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி எண்ணவோ, பேசவோ தயங்குகிறோம். மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை நமக்கு நவம்பர் மாதத்தை வழங்கியுள்ளது. இந்த நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிறன்று, நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக முடிவைப்பற்றி, சிறப்பாக, உலக அழிவைப்பற்றி கூறும், பல திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். இவற்றில் பெரும்பாலானவை, மக்களைக் கவர்ந்த வெற்றிப் படங்கள். இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம்.

அழிவைப் பார்ப்பதற்கு நமக்குள் இனம்புரியாத ஆர்வம் உள்ளது. எடுத்துக்காட்டாக, சாலையில் விபத்து ஒன்று நடந்ததும், அங்கு கூடும் கூட்டத்தில், பலர் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் அங்கு ஈர்க்கப்படுவர். இந்த அடிப்படை ஆர்வத்தை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக, திரைப்படங்கள், பல்வேறு திரைப்பட வித்தைகளைப் பயன்படுத்தி, அழிவை, பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள், அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தி, நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.

தொலைக்காட்சி, சினிமா, பத்திரிகைகள் வழியே, அழிவை, அடிக்கடி பார்ப்பதும், அழிவை, பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. ஊடகங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில், உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ, உணரமுடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் மற்றுமோர் ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், விரக்தி வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் காட்டும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் உணர்வுகள், பெரும்பாலும், அவநம்பிக்கையும், விரக்தியுமே!

அழிவைப்பற்றி அடிக்கடி பேசி, அவநம்பிக்கை என்ற நோயைப் பரப்பிவரும் இவ்வுலகப் போக்கிற்கு ஒரு மாற்று மருந்தாக, இறைவனின் இரக்கம், இறுதிகாலம் வரை தொடரும் என்ற நம்பிக்கையை, நமக்குள் நாமே வளர்க்கவேண்டும். பிறரிடமும் இந்த நம்பிக்கையை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். இந்த நம்பிக்கையை வளர்க்கும் சொற்களை, இறைவாக்கினர் தானியேல் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.

தானியேல் 12: 1-3

நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்... ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

இறுதியாக, ஓர் எண்ணம். நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று, உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம். 2016ம் ஆண்டு நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக வறியோர் நாளை, வழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாக உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டின் நிறைவாக, நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு, அதாவது, பொதுக்காலம், 33ம் ஞாயிறை, உலக வறியோர் நாளாகச் சிறப்பிக்க திருத்தந்தை அழைப்பு விடுத்தார். அதன்படி, 2017ம் ஆண்டு, நவம்பர், 19ம் தேதி, முதலாவது உலக வறியோர் நாளை சிறப்பித்த நாம், இஞ்ஞாயிறு, இரண்டாவது உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம்.

இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை, இவ்வாண்டு, சூன் 13ம் தேதி, பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாளன்று வெளியிட்டார். "இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்ட அச்செய்தியின் சில வரிகள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்:

தங்கள் மாண்பு மிதிக்கப்பட்ட நிலையிலும், இறைவனிடமிருந்து ஒளியும், ஆறுதலும் வரும் என்ற நம்பிக்கையுடன், தலைநிமிர்ந்து நிற்கும் வறியோரின் குரலை இறைவன் கேட்கிறார். வறியோரின் குரலை நாம் கேட்கிறோமா என்ற ஆன்ம ஆய்வை மேற்கொள்ள, உலக வறியோர் நாள் தகுந்ததொரு தருணம்.

எருசலேம் ஆலயத்தில் பலிகளை நிறைவேற்றும் சடங்கு முடிந்ததும், விருந்தொன்று நடத்தப்பட்டது. முதலாவது உலக வறியோர் நாளன்று, உலகின் பல மறைமாவட்டங்கள், இதையொத்த அனுபவத்தைப் பெற்றன.

என் சகோதர ஆயர்களுக்கு, அருள்பணியாளர்களுக்கு, சிறப்பாக, வறியோரின் பணிக்கென அருள்பொழிவு பெற்றுள்ள தியாக்கோன்களுக்கு சிறப்பான அழைப்பு ஒன்றை விடுக்கிறேன். அதேவண்ணம், துறவியர், பொதுநிலையினர் அனைவரையும் அழைக்கிறேன். வறியோரின் குரலுக்கு நாம் அனைவரும் செவிமடுத்து, புதிய வழியில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, உலக வறியோர் நாள் ஓர் அருள்நிறை தருணமாக அமையட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 13:55