தேடுதல்

இலங்கை பாராளுமன்ற அங்கத்தினர்கள் இலங்கை பாராளுமன்ற அங்கத்தினர்கள் 

இலங்கையில் தூய்மையான அரசியல் நிலைக்காக ஓர் ஊர்வலம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளால் விலை கொடுத்து வாங்கப்படும் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை மக்கள் போராட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் இலஞ்சம் முடிவுக்குக் கொணரப்பட வேண்டும் எனவும், தூய்மையான அரசியல் ஆட்சி இடம்பெற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து, அந்நாட்டு அருள்பணியாளர்களும் இருபால் துறவியரும், பொதுமக்களுடன் இணைந்து, ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதிகளை, கட்சிகள், தங்கள் பக்கமாக விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரம் வளர்ந்து வருவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து, இஞ்ஞாயிறன்று ஊர்வலம் ஒன்றை மேற்கொண்ட இவர்கள்,  குடியரசு, மற்றும், நீதியின் சார்பாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அரசியல் பதட்ட நிலைகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், பணத்தாசையையும், அமைச்சர் பதவி ஆசைகளையும் காட்டி, பாராளுமன்ற அங்கத்தினர்களை விலைக்கு வாங்கும் நிலை பற்றி கருத்து வெளியிட்ட, நீதி மற்றும் குடியரசுக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள், கட்சி மாறுவதற்கு பணம் வழங்கப்படுவது குறித்த புகார்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷே அவர்கள், தற்போது, புதிய பிரதமராக முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து அச்சத்தை வெளியிட்ட அருள்சகோதரி நிக்கோலா எம்மானுவேல் அவர்கள், ராஜபக்க்ஷே அவர்களின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற சட்ட விரோத கைதுகள், மக்கள் காணாமல்போதல் போன்றவை குறித்த கசப்பான உணர்வுகள் இன்னும் தங்கியிருப்பதாகவும், மக்களில் மீண்டும் அச்சம் தலைதூக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2018, 15:23