இலங்கையின் அரசியல் நெருக்கடி இலங்கையின் அரசியல் நெருக்கடி 

பொது நலனையும் நாட்டின் வளர்ச்சியையும் மனதில் கொண்ட தீர்வு தேவை

ஆயர்கள் : இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, பொது நலனை மனதில் கொண்ட, அரசியலமைப்புக்கு இயைந்த தீர்வுகள் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டில் நிலவும் அரசியல் நிலையற்றதன்மையால் பெருமளவில் பாதிக்கப்படப்போவது பொதுமக்களே என்பதை மனதில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்பை மதித்து, நெருக்கடிகளை களையும் தீர்வை காண முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், இலங்கை ஆயர்கள்.

முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை திடீரென பிரதமராக நியமித்ததையும், பாராளுமன்றக் கூட்டத்தை, நவம்பர் 16ம் தேதி வரை தள்ளிவைத்துள்ளதையும் தொடர்ந்து, எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்து, இலங்கை ஆயர்களின் கவலையை வெளியிட்டு, அவர்கள் சார்பில், இலங்கை ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Winston Fernando அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே உள்நாட்டுப் போராலும், பெருமளவு இரத்தம் சிந்தல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில், மேலும் நெருக்கடிகள் ஏற்படுவதை தடுத்து, அரசியலமைப்பின் அடிப்படையில் தீர்வு காண முயல்வது, அனைத்துக் கட்சிகளின் கடமை என, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெருக்கடியான இச்சூழலில், சனநாயகத்தின் சட்ட அமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ள இலங்கை ஆயர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்தல், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவுகள் எடுக்காமல்,  பொது நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு, அனைத்து முடிவுகள் எடுக்கவேண்டும் என அரசியல் தலவர்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழலைக் களைவதற்கு, அறிவுபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என தாங்கள் இறைவனிடம் செபிப்பதாகக் கூறி, தங்கள் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர், இலங்கை ஆயர்கள்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மீது பழி சுமத்தி அவரை அகற்றிய அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள், அதே அக்டோபர் 26ம் தேதி, முன்னாள் அரசுத்தலைவர் இராசபக்சே அவர்களை, பாராளுமன்றத்தைக் கூட்டாமலேயே புதிய பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அரசியல் பதட்ட நிலைகள் உருவாகியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 14:40